வைகுந்த ஏகாதசிப் பெருவிழா!

வைணவ திவ்ய தேசங்கள் 108 இல் முதலிடம் பெற்றது திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்! திருவரங்கம் பெருமான் கோயிலில் ஏழு பிரகாரங்கள் உண்டு.
வைகுந்த ஏகாதசிப் பெருவிழா!

வைணவ திவ்ய தேசங்கள் 108 இல் முதலிடம் பெற்றது திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்! திருவரங்கம் பெருமான் கோயிலில் ஏழு பிரகாரங்கள் உண்டு. இதனாலேயே "பெரிய கோயில்' என்று வைணவம் திருவரங்கத்தைக் கொண்டாடும். 14 கி.மீ. சுற்றளவு கொண்ட பிரமாண்டமான தலம் இது. 21 அடி நீளத்தில் பள்ளிகொண்ட திருக்கோலத்தில் அருள்புரியும் அரங்கநாத பெருமான் தரிசனம் செய்வோரின் வாழ்க்கையில் எல்லா வளங்களையும் அள்ளித்தருவார் என்பதில் ஐயமில்லை.
காத்தல் கடவுளாம் திருமால், தானே சுயம்புவாகத் தோன்றிய வைணவத் திவ்ய தேசங்கள் எட்டு: அவை, ஸ்ரீரங்கம், திருவேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், சாளக்கிராமம், நைமிசாரம், தோத்தாத்ரி, புஷ்கரம், பத்ரிநாத் ஆகியன. இந்த எட்டு வைணவச் சுயம்புத் தலங்களுள் மிகவும் தொன்மை வாய்ந்த தலம் என்ற தனிச்சிறப்பும் திருவரங்கத்துக்கே உரியது. ஸ்ரீ ரங்கத்தை " பூலோக வைகுந்தம்' என்று போற்றுவர். 
திருவரங்கநாதனைத் திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு வழிபட்ட தனிச்சிறப்பு கொண்டது இத்தலம்! 
வைகுந்த ஏகாதசி, பரமபத வாசல் திறப்பு விழா என்றதுமே நம் நினைவில் மலர்வது ஸ்ரீ ரங்கமே! "வைகுந்த ஏகாதசி' என்பதே பின்னாளில் "வைகுண்ட ஏகாதசி'யானது! தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள அனைத்து வைணவத் தலங்களிலும் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
ஏகம்+ தசி, " ஏகாதசி' ஏகம் என்றால் ஒன்று, தசி என்றால் பத்து, எனவே "ஏகாதசி' எனப்படுகிறது. சயன ஏகாதசி, பரிவர்த்தனை ஏகாதசி, உத்தான ஏகாதசி என்னும் பிரபோதன ஏகாதசி, ஸ்ரீவைகுந்த ஏகாதசி என்ற இந்த நான்கு ஏகாதசிகளையும் வைணவம் சிறப்பாகப் போற்றும். இவற்றுள் மார்கழி மாத ஏகாதசியே ஸ்ரீ வைகுந்த (வைகுண்ட) ஏகாதசி என்று அதனைச் சிறப்பாக கொண்டாட வழிகாட்டியவர் திருமங்கையாழ்வார் ஆவார். 
எட்டு வயதுக்கு மேற்பட்டவரும் எண்பது வயதுக்கு உட்பட்டவரும் ஏகாதசி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று "காத்யாயன ஸ்மிருதி' கூறுகின்றது. எவர் ஏகாதசி விரதத்தைத் தொடர்ந்து மேற்கொள்கிறாரோ அவர் திருமால் உலகம் சென்று விஷ்ணு பதம் அடைகிறார்' என்று தத்வஸாரம் என்ற நூல் கூறுகின்றது.
இவ்வாண்டு, பரமபத வாசல் (சொர்க்க வாசல் ) திறப்பு விழா 29.12.2017 அன்று அதிகாலை மிகவும் சிறப்பாக நடைபெறும். திருவரங்கநாதன் ஆலயத்தில் பரமபத வாசலில் அலங்காரமாகப் பெருமாள் பவனி வரும்போது தரிசனம் செய்தால் ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பர்.
- புலவர் முத்துவேங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com