சித்தர்களுடன் சித்சபேசன்!

அண்ட சராசரங்கள் அனைத்தும் இன்பமுற ஞானக்கடலாகத் திகழும் சிவபெருமான் தில்லை சிற்றம்பலத்தில் (பொன்னம்பலம்) ஆனந்தமாகக் கூத்தாடுகிறார்.
சித்தர்களுடன் சித்சபேசன்!

அண்ட சராசரங்கள் அனைத்தும் இன்பமுற ஞானக்கடலாகத் திகழும் சிவபெருமான் தில்லை சிற்றம்பலத்தில் (பொன்னம்பலம்) ஆனந்தமாகக் கூத்தாடுகிறார்.

உலக உயிர்கள் உய்ய வேண்டி அந்த தாண்டவம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எப்பொழுதும் இடது பாதத்தையே தூக்கி ஆடும் அந்த கூத்தபிரான் ஒரு சமயம் பாண்டிய மன்னனுக்காக அவனுடைய அன்பிற்கும் சிவபக்திக்கும் ஆட்பட்டு காலை மாற்றி ஆடினார். இந்நிகழ்வு நடந்தது மதுரையம்பதி வெள்ளியம்பலத்தில். பரஞ்ஜோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் இதனை நன்கு விவரிக்கும். 

சபாபதியின் வலது காலை தூக்கி ஆடும் அந்த நடன கோலத்தை நினைவு கூறும் விதமாக ஐம்பொன் சிலை ஒன்று வார்க்கப்பட்டு திருப்பூரிலிருந்து 18 கி.மீ தொலைவில் கண்டியன் கோவில் ஊரில் உள்ள சித்தர் சபை வளாகத்தில் பிரதிஷ்டையாகியுள்ளது.

இங்குள்ள சித்தர்சபை வளாகத்தில் நுழைந்தவுடன் அகத்தியப்பெருமான் 33 அடி உயரத்தில் விஸ்வரூப கோலத்தில் கையில் அமிர்தகலசத்துடன் காட்சியளிக்கின்றார். கருவறை வாயிலில் ஒளவை பிராட்டிக்கு உபதேசம் அருளும் ஞான விநாயகரையும், அகத்தியருக்கு உபதேசம் அருளும் ஞானமுருகனையும் கற்திருமேனி ரூபமாகத் தரிசிக்கலாம்.

உள்ளே பதினென் சித்த புருஷர்கள் புடைப்புச்சிற்பமாக காட்சியளிக்க, ஐம்பொன் சிலைகளாக அகத்தியப் பெருமான், காகபுஜண்டர், ஞானவாலாம்பிகை சூழ, நடராஜப்பெருமானை தரிசிக்கலாம். பிறவி நெறி கடக்கும் பாதையாக வலது கரம் சின்முத்திரையும், இடது கரம் டமரகமும் (உடுக்கை) ஓசை ஒளி பேரருள் ஞானமாக ஸ்தாபனம் செய்திடவும், வலது காலை தூக்கி காட்சியளித்திடும் சித்தர்கள் நடுவில் சித்சபேசனின் தரிசனம் காணப் பெறுவது நமது பிறவிப்பயனே.

2.1.2018 அன்று நடராஜப்பெருமான் சிவகாமி அம்மையுடன் மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்யப்பட்டு அதிகாலை 4.00 மணி அளவில் ஆருத்ரா அபிஷேகம் நடைபெறுகின்றது. அன்றே சித்தர்சபையில் வீற்றிருக்கும் பத்ரகிரி சுவாமிக்கு 48 ஆம் நாள் மண்டல பூஜையும் நடைபெற உள்ளது. 4.1.2018, (மார்கழி - ஆயில்யம்) அமிர்தகலச ஞான அகஸ்தீஸ்வரருக்கு மகாபிஷேகமும், வேள்விகளும் நடைபெறுகின்றன. 

கண்டியன் கோவில் செல்ல திருப்பூர், காங்கயத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
தொடர்புக்கு: 90807 55533/ 85264 23337.
- எஸ்.வெங்கட்ராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com