நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் 

நல்லொழுக்கம் எங்கும் எக்காலமும் ஏற்றி போற்றப்படுவது. அந்நல்லொழுக்க விதையிலிருந்து முளைத்து செடியாகி மரமாகி மலராகி காய்த்து கனிந்த கனியே நன்றி. ஒரு சிறிய உதவியின் சிறிய பயனையும்
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் 

நல்லொழுக்கம் எங்கும் எக்காலமும் ஏற்றி போற்றப்படுவது. அந்நல்லொழுக்க விதையிலிருந்து முளைத்து செடியாகி மரமாகி மலராகி காய்த்து கனிந்த கனியே நன்றி. ஒரு சிறிய உதவியின் சிறிய பயனையும் பேருதவியாக கருதி நன்றி பாராட்டுவது நல்லொழுக்க நல்லியல்பு. நம்மைப் படைத்து நல்ல உடல் அமைப்பை உருவாக்கி உடல் அங்கங்களைக் குறைவின்றி இயங்க வைக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியதை விளம்புகிறது விழுமிய குர்ஆனின் 16- 78 ஆவது வசனம், " நீங்கள் எதையும் அறியாத நிலையில் உங்கள் அன்னையின் வயிற்றிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவிகளையும் கண்களையும் இதயங்களையும் உங்களுக்கு உண்டாக்கினான்''.
தாயின் வயிற்றிலிருந்து தரணியில் பிறக்க வைத்த அல்லாஹ் அவனுக்கு நன்றி செலுத்துவதற்காக காதுகளையும் கண்களையும் இதயங்களையும் கொடுத்ததைக் கூறும் இவ்வசனம், பிற உறுப்புகளினும் இம்மூன்று உறுப்புகளை முக்கியப் படுத்தி கூறுவது கண்களால் பார்த்து காதுகளால் கேட்டு இதயத்தால் உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கே மனித உறுப்புகள் என்பதை உணர்த்துகிறது. இக்கருத்தை மீண்டும் வலியுறுத்தி மனிதர்கள் மிக குறைவாக நன்றி செலுத்துவதாக கூறுகின்றன குர்ஆனின் 23-78 மற்றும் 67-23 ஆவது வசனங்கள். 
நீங்கள் நன்றி செலுத்தினால் நான் உங்களுக்கு அருளை அதிகப்படுத்துவேன் என்று அல்லாஹ் அறிவிக்கிறார் அருமறை குர்ஆனின் 14-7 ஆவது வசனத்தில். நம்மைப் படைத்து காக்கின்ற அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவது நம் கடமை. அவ்வாறு நன்றி செலுத்தும் பொழுது அல்லாஹ்வின் அருள் நமக்கு அதிகமாக கிட்டும் என்பதைத் திட்டமாய் தெரிவிக்கிறது இந்த வசனம். மூசா நபியின் ஏக இறை கொள்கையை ஏற்று அல்லாஹ்வின்அருளைப் பெற்று பின் மாறிய மக்களைப் பற்றி பகர்கிறது இவ்வசனம். 
"நம்பிக்கையுடையோரே! உங்களுடைய பொருள்களும் உங்களுடைய மக்களும் அல்லாஹ்வின் நினைவிலிருந்து உங்களைத் திருப்பி விட வேண்டாம்'' என்று எச்சரிக்கிறது எழில் மறை குர்ஆனின் 63-9 ஆவது வசனம். உலகில் பெற்ற பிள்ளைகளைப் பேணி வளர்ப்பது பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகளை அமைத்து தருவது அவர்களின் உற்ற உயர்வுக்கு வழிகாட்டுவது பெற்றோரின் கடமை. ஆனால் வரம்பு கடந்து வரையறைகளை மீறி அறம் பிறழ்ந்து நெறி தவறி பெரும் பொருள் ஈட்டுவதே பிறவி பயன் என்று பாதகம் புரிவோரைச் சாதக வழியைச் சாற்றிய அல்லாஹ்வை மறக்க வேண்டாம். அல்லாஹ் அருளிய நன்நெறியிலிருந்து நழுவி விட வேண்டாம் என்று நவில்கிறது இந்த வசனம். ஆகுமான உணவை உண்டு அவ்வுணவை அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்த நவில்கிறது நான்மறைகளில் இறுதி மறையான குர்ஆனின் 16-114 ஆவது வசனம்.
மனிதன் அவனின் அல்லாஹ்விற்கு நன்றி மறந்தவன் என்று 100-6 ஆவது வசனம் கூற, ஆபத்தில் அபயம் தேடி அல்லாஹ்விடம் வேண்டுபவன் ஆபத்திலிருந்து மீண்டதும் நன்றி மறப்பதை நவில்கின்றன 10-12, 11-10, 17-67 ஆகிய வசனங்கள். துன்பம் துயர் தொல்லை ஆபத்துகளை அல்லாஹ் அகற்றியபின் அது தன்னால் நடந்தது என்று தருக்கி திரிவோரை தற்பெருமை பேசுவோரைச் சுட்டிக் காட்டுகின்றன இவ்வசனங்கள். இவ்வாறு நன்றி மறந்து நடப்பதையே 39-49 ஆவது வசனம் சாடுகிறது. ஆபத்தில் அல்லாஹ்வின் அருளை இறைஞ்சி இன்னல் நீங்கியதும் அல்லாஹ்விற்கு இணை வைப்போரை இடித்துரைக்கிறது 30-33 ஆவது வசனம். இதனை 29-65, 66 ஆவது வசனங்கள் உறுதிபடுத்துகின்றன. 
மாநபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட பொழுது இனிய நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் ஏக இறை கொள்கையை ஏற்றவர்களுக்கும் எண்ணற்ற கொடுமைகளை எள்ளளவும் இரக்கமின்றி செய்த அரக்கன் அபூஜஹீவின் மகன் இக்ரிமா மக்காவில் இருந்து தப்பி ஓடி ஒரு கப்பலில் ஏறினான். நடுக்கடலில் வீசிய புயலால் கப்பல் ஆட்டம் கண்டது. கப்பல் மாலுமி ஏக இறைவன் அல்லாஹ்வைத் துதித்து அபயம் தேட அறிவுறுத்தினான். இக்ரிமாவும் அல்லாஹ்வின் அருளை வேண்டினான். பலர் கரை ஏறியதும் காப்பாற்றிய இறைவனை மறந்தனர். ஆனால் கொடுமைக் காரனான இக்ரிமா அல்லாஹ்விடம் இறைஞ்சியபடி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றான். இப்படி சிலர் இருப்பதையும் நன்றி மறந்து முன்னருள்ள மூட கொள்கையை மூர்க்கமாய் பின்பற்றும் தீர்க்கதரிசியை ஏற்காத துரோகிகளையும் குறிப்பிடுகிறது 31-32 ஆவது வசனம்.
நன்றி மறப்பது நன்றன்று. நன்றி கொன்ற மக்களுக்கு என்றும் எங்கும் உய்வில்லை என்பதை உணர்ந்து உலகைப் படைத்து உலகில் நம்மை வாழவைத்த அல்லாஹ்விற்கு அனுதினமும் நன்றி செலுத்தி நல்ல வணக்க வழிபாடுகளில் நழுவாது நாளும் ஈடுபட்டு வழுவாது வாழ்வோம். வல்லோன் அல்லாஹ்வின் அருளை அதிகமதிகம் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com