புண்ணியம் தரும் பூர்வரங்கம் !

மார்க்கண்டேய மகரிஷி தன் மகள் மஹாலட்சுமியை திருமாலுக்குத் திருமணம் செய்து கொடுத்த பின் ஒவ்வொரு தலமாகச் சென்று தரிசனம் செய்து வந்தார். மனதை
புண்ணியம் தரும் பூர்வரங்கம் !

மார்க்கண்டேய மகரிஷி தன் மகள் மஹாலட்சுமியை திருமாலுக்குத் திருமணம் செய்து கொடுத்த பின் ஒவ்வொரு தலமாகச் சென்று தரிசனம் செய்து வந்தார். மனதை விட்டு நீங்காத நடுவரங்கத்தைத் தரிசனம் செய்தார். மேலரங்கம் மாயவரத்து வடரங்கம். வேதாரண்ய கட்டிமேடு ஆதிரங்கம் ஆகியவற்றை தரிசித்தார்.
எஞ்சிய பூர்வரங்கம் எனப்படும் கீழை அரங்கத்தில் கிடக்கும் அரங்கனைத் தேடி அலைந்தார். வெகு தொலைவு நடந்தார். சந்திர நதிக்கரை ஓரம் ஒரு பாதிரி மரக்காட்டுக்குள் பூர்வரங்கனை தரிசித்தே ஆகவேண்டும் என முடிவு செய்தார். நதியில் நீராடி, கரையிலிருந்த பாதிரி மரத்தடியில் அமர்ந்து அரங்கனைக் காணத் தவத்தில் ஈடுபட்டார். தவம் செய்த மார்க்கண்டேய மகரிஷிக்கு தாடி ஜடாமுடி எல்லாம் வளர்ந்தன. அவரைச் சுற்றி மண் மூடி புற்று வளர்ந்தது. 
ஒருநாள் கால்நடை மேய்ப்பவர்களில் ஒருவன் குழலால் பாட்டிசைத்தான். அவன் கானம் அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. திடீரென தவம் செய்து கொண்டிருந்த புற்று சிதறி கை கூப்பியவண்ணம் மார்க்கண்டேய மஹரிஷி மெலிந்த தேகமும் வற்றிய உடலுமாக வெளிப்பட்டார். 
குழல் ஒலி கேட்ட திக்கை நோக்கி கை தொழது கண் மூடி நடந்தார். அருகில் சென்று "ஆயனே ! என் ஆயனே !' எனப் புலம்பினார். குழல் ஒலித்துக் கொண்டிருந்தவன் புன்முறுவலுடன் உருமாறி மாயக்கண்ணனாக கிருஷ்ணாவதார உருவைக் காட்ட, எதிரில் ஸ்ரீ நாராயணன் என்பதை உணர்ந்த மார்க்கண்டேய மஹரிஷி, "கடவுளே உன்னை நான் கலியுக உருவான அரங்கன் வடிவில் தரிசிக்க விரும்பினேன். அக்கோலத்தில் காட்சி தந்து எனக்கு 3 வரங்கள் அருள வேண்டும்' என வேண்டினார்.
பக்தனின் பக்திக்கு மதிப்பளித்து திருவரங்கத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் யோக சயன மூர்த்தியாகக் காட்சி தந்தார். பூமா தேவி திருவடி அருகில் வந்து நிற்க அருள் செய்யும் கோலத்தில் போக சயன மூர்த்தியாக காட்சியளித்தார்.
மார்க்கண்டேய மஹரிஷி, "சயனத்தில் உள்ள எம்பெருமானே உன்னை தரிசிக்கும் நான் தேவர்களுக்குக்கூட கிடைக்காத அமிர்தம் கிடைத்ததாக உணர்கிறேன்' என்று பொருள்பட ஸ்லோகம் இயற்றினார். 
அரவின் மேல் பள்ளி கொண்ட அரங்கன், மார்க்கண்டேய மஹரிஷியைப் பார்த்து "என்ன வரங்கள் வேண்டும்'' என்றார். 
"நான் எப்போதும் உன்னருகில் இருந்து தரிசனம் செய்யும் வகையில் அருள வேண்டும்'', "உலகில் உள்ள மக்கள் எப்போதும் உன்னை இங்கு வந்து வணங்கும் வகையில் இங்கேயே நிரந்தரமாக இருந்து அருள் புரிய வேண்டும்'", "மூன்றாவதாக உன்னை இங்கு வந்து வணங்கும் மக்களின் நியாயமான எண்ண அபிலாஷைகளை உடனே நிறைவேற்றித்தர வேண்டும்'' என வேண்டினார்.
பெருமாளும் இந்த எண்ணங்கள் பரார்த்தமாகவும் (நியாயமாக) பக்தனின் அடிப்படையாகவும் இருந்ததால் ஒப்புக் கொண்டார். அது முதல் மார்க்கண்டேய மகரிஷியை கருவறையில் தரிசனம் செய்து கொண்டு அருகிலேயே இருக்குமாறு செய்தார். 
கருவறையில் ஆனந்த விமானத்தின் கீழ் அறிதுயிலில் இடக்கை பக்கவாட்டிலும் வலக்கை தலை அருகில் இருக்க மல்லாந்து நிமிர்ந்த திருமேனியுடன் ஐந்து தலை ஆதிசேஷன் மேல் சயனம் செய்கிறார். பெருமாளின் தலை அருகில் கீழே மார்க்கண்டேய மஹரிஷியும் திருவடி அருகில் பூதேவியும் அமர்ந்திருக்க, யோக மூர்த்தியாக இருந்து போகமூர்த்தியாக மாறியதால் நாபிக் கமலத்தில் பிரம்மா கிடையாது. பெருமாள் பூரணமாக ( முழுமையாக ) காட்சி தருவது போல் இங்கிருக்கும் ஆதிசேஷனும் பூர்வமாக தலை முதல் வால் நுனி வரை 3 சுற்றுகளில் இருந்து அருளுகிறார். 
திருக்கோயில் உற்சவர் மார்க்கண்டேய மஹரிஷிக்கு முதலில் ஆயன் உருவில் வந்து காட்சி தந்ததால் ஆயனார் என்ற பெயரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார். கருவறைக்கு எதிரில் கருடன் சந்நிதி அமைந்துள்ளது. திருவரங்கம் போலவே இத்தலமும் தெற்கில் ராஜகோபுரம் 3 நிலைகளுடன். கொடிமரம் பலிபீடம், கருடன், மஹா மண்டபத்தில் ரங்கநாயகித் தாயார், மூலவர் , உற்சவர், அதிரூபவல்லித்தாயார், ஆண்டாள், ராமர் சந்நிதி, 
ஸ்ரீ கிருஷ்ணர் சந்நிதி. யாகசாலை, விஷ்வக்ஷேனர், ரங்கநாத பாதுகை, பெரிய திருவடி தேசிகர், ஆழ்வார், ஆசாரியார்கள் மற்றும் தும்பிக்கை ஆழ்வார் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் அமைந்துள்ளன . 
1100 ஆண்டுகள் பழைமையான மாடக்கோயில் வடிவில் உள்ள பூர்வரங்கம் (முழுக்கோயில்) என அழைக்கப்படும். எதுவும் முழுமையாக இருந்தால்தான் பலன் அருள முடியும். அவ்வகையில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியவற்றுடன் முழுமையானதாக உள்ளதால் கீழையூர் ரங்கநாதர் கோயில் சகல தோஷங்கள், பாவங்களை நீக்கி, அருளும் திருத்தலமாகும்.
கீழையூர் அருள்மிகு பூர்வரங்கநாதர் கோயில் நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கண்ணி வழியாக திருத்துறைப்பூண்டி சாலையில் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கீழையூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து அரை கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. 
ஸ்ரீரங்கத்தின் அபிமானத்தலமான இக்கோயிலில் ஸ்ரீரங்கத்தின் உற்சவ அனுஷ்டானங்கள் கடைப்பிடிக்கப்பட்டு முக்கிய உற்சவங்கள் அனைத்தும் குறைவின்றி இங்கு நடைபெறுகின்றன. அத்யயன உற்சவம், எல்லா நாளும் சந்நிதியிலேயே நடைபெறும். வைகுண்ட ஏகாதசியின் முதல்நாள் மாலை மோகினி அலங்கார சேவையும் மறுநாள் காலையில் 7.00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும் ஆழ்வார் ஆசாரியர்கள் எதிர்சேவையும் நடைபெற்று புறப்பாடாகி காலை 9.00 மணிக்கு தேசிகர் சந்நிதிக்கு எழுந்தருளி சேவை சாதிப்பார். மீண்டும் மதியம் 12.00 மணிக்கு மூலஸ்தானத்துக்கு எழுந்தருளி இரவு வரை சேவை சாதிப்பார்.
வருடத்தில் இந்த ஒருநாள் மட்டுமே ஆயனார் என அழைக்கப்படும் உபயநாச்சிமாருடன் உள்ள உற்சவரை மூலவருடன் சேர்ந்து சேவை சாதிக்கும் வழக்கம் உள்ள திருக்கோயிலாகும். பூர்வரங்கனை தரிசனம் செய்தால் பூர்வ ஜென்ம பாவம் நீங்கி பூர்வ புண்ணிய பலனும் சந்ததிகளுக்கு நல்வாழ்வும் கிடைக்கும். 
தொடர்புக்கு: 99408 82460/ 94436 22236. 
- இரா.இரகுநாதன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com