சுவாமி கமலாத்மானந்தரின் பொன்மொழிகள்!

மனிதனே! எவரால் இந்தப் பலவிதமாக அமைந்திருக்கும் படைப்பு ஒளி பெற்றுத் திகழ்கிறதோ, எவர் இதைத் தாங்கிக்கொண்டிருந்து பிரளயத்தைத் தோற்றுவிக்கிறாரோ, எவர் இந்த உலகத்தின் அதிபதியோ,
சுவாமி கமலாத்மானந்தரின் பொன்மொழிகள்!

• மனிதனே! எவரால் இந்தப் பலவிதமாக அமைந்திருக்கும் படைப்பு ஒளி பெற்றுத் திகழ்கிறதோ, எவர் இதைத் தாங்கிக்கொண்டிருந்து பிரளயத்தைத் தோற்றுவிக்கிறாரோ, எவர் இந்த உலகத்தின் அதிபதியோ, எவரிடமிருந்து இந்த உலகம் தோன்றவும், நிலைத்திருக்கவும், அழியவும் செய்கிறதோ, எவரிடம் அனைத்தும் இறுதியில் சென்று சேர்ந்து மறைகிறதோ, அவரே "பரமாத்மா' என்பதைத் தெரிந்துகொள்.  
- ரிக் வேதம் 10, 129, 7

• எல்லா உயிர்களும் என்னைத் தங்கள் நண்பனாகக் கருதட்டும். நானும் எல்லா உயிர்களையும் என் நண்பர்களாகவே கருதுவேன்! 
- யஜுர் வேதம் 36,18   

• தெய்வங்களுக்கு உழைத்து பாடுபடுகிறவர்களைக் கண்டால் மிகவும் பிடிக்கும்.     - ரிக் வேதம் 4,33,11

• அண்ணன் தம்பிகள் பகையின்றி வாழட்டும். அண்ணன் தங்கைகளும் அது போலவே பகையின்றி இருக்கட்டும். எல்லாச் சகோதரர்களும் ஒரே வகையில் அறவழியில் உழைத்துப் பாடுபடட்டும். அனைவர் போக்கும் ஒன்றுபோல் அமையட்டும். எல்லோரும் இனிமையானதும், குளுமையானதுமான வார்த்தைகளையே பேசட்டும்.  
- அதர்வண வேதம் 3,30,3

• அந்தப் பரமாத்மாவான தெய்வம் நித்தியமானவர்களில் நித்தியமானவன். உயிர்களில் உயிர் (சேதனர்களில் சேதனன்), பலரில் ஒருவன், எல்லோரது விருப்பங்களையும் நிறைவேற்றுபவன். அந்த எல்லாவற்றிற்கும் காரண புருஷனை ஞானத்தாலும் யோகத்தாலும் மனிதன் அறிந்துகொள்ள வேண்டும். அப்போது அவன் எல்லாவிதமான பந்தபாசங்களிலிருந்தும் விடுபடுவான்.  
- சுவேதாச்வதர உபநிஷதம், உ. 6,13

• நாம் எல்லா உயிர்களுக்கும் அபயம் அளித்துக்கொண்டு வாழ வேண்டும். எவரும் நம்மைப் பார்த்து பயப்படாத வகையில் நாம் வாழ்ந்து வர வேண்டும். 
- மைத்ரீ உபநிஷதம் 6,8

• எங்கே பெண்கள் போற்றப்படுகிறார்களோ, அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சியடைகின்றன. பெண்கள் மதிக்கப்படாத இடங்களில் எல்லாக் காரியங்களும் பயனற்றுப் 
போகின்றன. 
- மனுஸ்மிருதி 3.56

• "மோட்ச லோகத்தின் வாயில்கள்' என்று நான்கு காவலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் 1. சாந்தம், 2. திருப்தி, 3. நல்லவர்கள்- பெரியவர்கள் தொடர்பு (சத்சங்கம்), 4.உயர்ந்த சிந்தனை ஆகியவையாகும்.
- யோக வசிட்டம் 2,16,58   

• ஒருவன் சத்தியத்தால் புனிதமாக்கப்பட்ட பேச்சைத்தான் பேச வேண்டும். அவன் உள்ளத்தால் புனிதமானது என்று உணர்ந்த காரியங்களைத்தான் செய்ய வேண்டும்.  
- பத்ம புராணம், ஸ்வர்க 59-19

• (அ) சத்தியத்திலும், நீதியிலும், போற்றத்தக்க நடவடிக்கைகளிலும், தூய்மையிலும் மனிதன் இடைவிடாமல் ஆனந்தம் கொள்ள வேண்டும்.
 (ஆ) தகுதி வாய்ந்தவர்களிடம் தன்னைப் பற்றிப் பொய்யான விஷயங்களைக் கூறிப் பெருமையடித்துக்கொள்பவனைக் காட்டிலும் பெரிய பாவி இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. அவன்தான் திருடர்களில் படுமோசமானவன்.
 (இ) எல்லா விஷயங்களும் பேச்சினாலேயே நடைபெறுகின்றன. பேச்சு எல்லாவற்றிற்கும் வேராக இருக்கிறது. பேச்சிலிருந்தே எல்லாம் உண்டாகின்றன. பேச்சில் யோக்கியப் பொறுப்பு இல்லாதவன், எல்லாவற்றிலும் யோக்கியப் பொறுப்பு இல்லாதவனாகவே இருப்பான் என்பது உண்மை.  
- மனுஸ்மிருதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com