தோல்விகளால் சோர்ந்துபோக வேண்டாம்!

ஒரு நிறுவனத்தில் உள்ள அதிகாரி அங்கு வேலை செய்யும் சிலரிடம் பொறுப்புகளை கொடுக்கும்போது, அதை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்.
தோல்விகளால் சோர்ந்துபோக வேண்டாம்!

ஒரு நிறுவனத்தில் உள்ள அதிகாரி அங்கு வேலை செய்யும் சிலரிடம் பொறுப்புகளை கொடுக்கும்போது, அதை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். காரணம்,எனக்கு தோல்வியைப் பற்றி பயமாயிருக்கிறது. என்னால் செய்ய முடியாது. எனக்குப் போதுமான பயிற்சி இல்லை என்கிறார்கள். வேறு சிலர், தங்களுடைய தகுதியில்லாமையை உணர்ந்து, வேறு யாராவது, முன்நின்று செய்யட்டும் என்றும், கடந்த கால தோல்விகளும், கசப்பு நினைவுகளும், என் உள்ளத்தைத் வாட்டுகிறது என்றும் சாக்குப் போக்கு சொல்லுகிறார்கள். 

அப்படித்தான் பரிசுத்த வேதாகமத்தில் தேவன் முதன் முதலில் எரேமியாவிடம் "உன்னை தீர்க்கதரிசியாக ஏற்படுத்தினேன். உன்னை தாயின் கருவில் உருவாகும் முன்னே தெரிந்து கொண்டேன்'' என்று கூறுகிறார். அதற்கு எரேமியா தேவனைப் பார்த்து "ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன். சிறுபிள்ளையாயிருக்கிறேன்'' என்றார் (எரே. 1:6). ஆனால் கர்த்தர் சொன்ன வார்த்தை என்ன நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே. நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம், நீ பேசுவாயாக. நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம். உன்னைக் காக்கும்படிக்கு, நான் உன்னுடனே இருக்கிறேன் என்று சொன்னார் (எரே. 1:7,8). தன்னுடைய குறைகளை பெரிதாக எண்ணாமல் தேவன் தனக்கு சொன்ன வார்த்தைகளை அப்படியே விசுவாசித்து அதன்படி அவன் செய்தான். பெரிய தீர்க்கதரிசியானான். 

விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன், மின்சார பல்பை மட்டுமல்ல, இன்னும் நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்தார். மின்சார பல்பிலே, பிரகாசமாய் எரியக்கூடிய இழையை, எந்த உலோகத்தினால் செய்யலாம் என்று, ஆயிரக்கணக்கான முறை முயற்சித்தும், தோல்விக்கு ஒப்புக்கொடாமல், முடிவில் டங்ஸ்டன் என்ற இழையை அவர் பயன்படுத்தி, வெற்றிக் கண்டார். அவர் சொன்னார், "அநேகர் முடிவடைகிற தருவாயில் முயற்சியை விட்டுவிடுகிறார்கள். சோர்வடையாமல் முயற்சித்துக்கொண்டிருக்கிறவனுக்கு, நிச்சயமாய் வெற்றி கிடைக்கும்'' என்றார்.

இதைப் போல, ஆப்பிரிக்காவில் வைர சுரங்கத்தைத் தோண்டும்படி, அரசாங்கம் ஒரு காண்டிராக்டருக்கு ஒப்புவித்தது. அவர் கடினமான பாறைகளையெல்லாம் துளையிட்டு, ஏறக்குறைய 1700 அடி கீழே போய்விட்டார். பிறகு, முயற்சியை கைவிட்டு விட்டு, நம்பிக்கையில்லாமல் நின்றுபோனார். பின்பு அரசாங்கம், இன்னொரு காண்டிராக்டருக்குக் கொடுத்துவிட்டது. அவர் புதிய இடத்தில் தோண்டாமல், அதே இடத்திலே திரும்பவும் முயற்சித்து, இன்னும் நூறு அடி தோண்டுவதற்குள்ளாக அநேக வைர கற்களைக் கண்டார். 

ஆகவே, நாம் அனைவரும் இறைவனுடைய பிள்ளைகள். தேவன் நம்மை வாழ்வில் வெற்றி பெறுவதற்காகவே படைத்துள்ளார். நம்முடைய நல்ல முயற்சியை கைவிட்டுவிடாமல், பரிசுத்தத்தை நோக்கியும், பரலோகத்தை நோக்கியும் தொடர்ந்து ஓடுங்கள். மேலும் வெளிப்படுத்தின விசேஷம் 22:12-இல் "இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது'' என்பதாக தேவன் கூறுகிறார். ஆகவே நம்முடைய செயல் எவ்வாறு இருக்கிறதோ அதற்கு ஏற்ற பலன் நிச்சயம் உண்டு. எனவே, நாம் இந்த உலகில் இறைமகன் இயேசுவின்மேல் நம்முடைய நம்பிக்கையை வைத்து அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழும்போது நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தேவன் வெற்றியைத் தருவார்.
- ஒய்.டேவிட்ராஜா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com