மாங்கல்ய பலம் அருளும் மதுர காளியம்மன்!

மூர்த்தி, தலம், தீர்த்தமென முச்சிறப்பும் அமைந்த பல திருத்தலங்களில் சிறப்பான தலம் தான் அன்னை மதுரகாளியாக எழுந்தருளி அருள்பாலிக்கும்
மாங்கல்ய பலம் அருளும் மதுர காளியம்மன்!

மூர்த்தி, தலம், தீர்த்தமென முச்சிறப்பும் அமைந்த பல திருத்தலங்களில் சிறப்பான தலம் தான் அன்னை மதுரகாளியாக எழுந்தருளி அருள்பாலிக்கும் திருத்தலம் சிறுவாச்சூர். சுற்றிலும் மலைகளும் ஏரிகளும் சூழ, வளம் கொழிக்கும் தோப்புகளுமாக இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் அமைந்து அருளாட்சி புரிகின்றாள் ஸ்ரீ மதுர காளியம்மன்.

ஒரு முறை ஆதிசங்கரர் இந்த மலைப் பிரதேசத்தின் வழியே வந்தபோது களைப்பினால் அவருக்கு தாகம் எடுத்தது. ஆனால் சுற்றிலும் எங்குமே தண்ணீர் கிடைக்காததால், அவர் தேவியை நினைத்து மனமுருகி வேண்டினார். அப்போது ஸ்ரீ மதுரகாளியம்மனே அவர் முன் தோன்றி அங்கு ஒரு நீர் ஊற்றை வரவழைத்து அவர் தாகத்தைத் தீர்த்ததாகக் கூறப்படுகிறது. தன் தாகம் தீர்த்த அம்பிகையை அத்தலத்திலேயே இருந்து எல்லோருக்கும் அருள்புரிய வேண்டுமென்று அவர் பிரார்த்திக்க, அம்பிகையும் ஆனந்தமாக ஏற்றுக் கொண்டாள். கற்சிலையாக மாறிய தேவியை ஆதிசங்கரர் அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னாளில் அங்கு அம்பிகையின் திருக்கோயில் உருவானது என்பது வரலாறு. ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவரின் குல தெய்வமும் இவளே!

எழிலார்ந்த ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் வடக்கு நோக்கிய சந்நிதி. கோயிலின் முன்னே  வலப்பக்கம் ஓர் ஏரியும், இடப்பக்கம் ஒரு குளமும் உள்ளன. திருக்குளம் ஆதிசங்கரரால் உருவாக்கப்பெற்றது. கோயிலின் உட்சென்றவுடன் இடப்புறம் ஒரு மண்டபமும் அதன் எதிரில் கிணறும் உள்ளன. தல விருட்சம் மருத மரமாகும். தீர்த்தம் ஈசான திசையில் உள்ள திருக்குளமாகும்.

ஆதியிலே சிறுவாச்சூரில் ஸ்ரீ செல்லியம்மனே வழிபடப்பட்டு வந்தாள். தன் தவத்தால் அம்பிகையிடமிருந்த அரிய சக்திகளைப் பெற்ற ஒரு மந்திரவாதி தான் பெற்ற மந்திர சக்தியைக் கொண்டு அந்த அன்னையையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மக்களை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கினான். இதை உணர்ந்தே மதுர காளியம்மன் இத்தலம் வந்தாள். அவளிடம் தன் ஆற்றாமையைக் கொட்டித் தீர்த்தாள் ஸ்ரீ செல்லியம்மன். தான் இரவு தங்க செல்லியம்மனிடம் இடம் கேட்டாள் காளிமாதா. செல்லியம்மனோ, மந்திரவாதியை எண்ணி பயந்தாள். 

அன்னை சிரித்தபடி ஆறுதல் கூறி அன்றிரவு அங்கேயே தங்கினாள். அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்ட, எதுவும் எடுபடவில்லை.

சண்டன், முண்டன், ரக்த பீஜன், மகிஷன் போன்ற எத்தனையோ அசுரர்களைப் பார்த்தவளல்லவா? இவன் எம்மாத்திரம். மந்திரவாதியை ஓட ஓட விரட்டி, வதம் செய்து அவனது அட்டகாசத்திற்கு முடிவு கட்டினாள் மதுரகாளியம்மன். பின்னர் செல்லியம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே கோயில் கொண்டாள். 

காளியம்மனுக்கு தங்க இடம் கொடுத்துவிட்டு, செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலைக்குச் சென்று அங்கேயே அமர்ந்துவிட்டாள். ஆதியிலே இவ்வூரின் தேவதையாக இருந்ததால் எல்லா விசேஷங்களிலும் செல்லியம்மனுக்கே முதல் மரியாதை செய்யப்படுகின்றது. 

திருமணம் நடக்கவும், குழந்தைப் பேறு வேண்டியும், செய்தொழில் சிறக்கவும் அம்மனுக்கு வேண்டிக்கொண்டு தங்களால் இயன்ற காசினை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தால் அவர்களின் குறையை அன்னை தீர்த்து வைக்கிறாள் என்று நம்பப்படுகிறது. பக்தர்கள், அங்கபிரதட்சணம் செய்தல், மாவிளக்கு ஏற்றுதலை இங்கு முக்கிய வழிபாடாக செய்கின்றனர். மேலும், மாவிளக்குக்கான மாவை ஆலய வளாகத்திற்குள்ளாவே அரிசி கொண்டுவந்து ஊற வைத்து உரலில் இடித்து மாவு தயாரித்து நெய் விளக்கிடுகின்றனர் பக்தர்கள். அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சிறப்பாகச் செய்து வருகிறது. 

பில்லி, சூனியம் போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து அன்னையை வழிபட விலகி சென்று விடுகின்றன. ஊமை, செவிடு போன்ற குறைகள் எல்லாம் மனமுருகி அன்னை முன் முறையிட, கரைந்து காணாமற் போய் விடுகின்றன. "மதுரை காளியம்மன்' என்ற திருநாமமே பின்னர், "மதுர காளியம்மனாக' மாறியதாக நம்பப்படுகிறது. 

கற்புடை தெய்வமாம் கண்ணகி, பாண்டியன் அவையில் நீதியை நிலைநாட்டியபின் மன அமைதி வேண்டி, பல்வேறு தலங்களுக்குச் செல்கையில் இத்தலம் வந்தாள்.

அப்போது மன நிம்மதி அடைந்த காரணத்தால் இங்கே தங்கிவிட்டதாகவும் அவளே மதுரை காளியாகி பின்னர் மதுர காளியானாள் என்று கூறுவோரும் உண்டு.

சிறுவாச்சூருக்கு வெள்ளியன்று வந்த மதுரகாளி அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் ஆலயம் திறக்கப்பட்டு அம்பிகைக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. வாரத்தில் மற்ற நாள்களில் மதுர காளியம்மனும் பெரிய சாமி மலைக்குச் சென்று அங்கேயே செல்லியம்மனுடன் தங்குவதாக ஐதீகம். 

திங்கள் மற்றும் வெள்ளியன்று காலை சந்நிதி திறக்கப்பட்டு 11.00 மணி முதல் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்கக் கவசம் சார்த்தி, அலங்காரங்கள் செய்யப்படுகின்றது.  வலது மேற்கரத்தில் உடுக்கையும் கீழ் கரத்தில் திரிசூலமும், இடது மேல் கரத்தில் பாசமும், கீழ் கரத்தில் அட்சய பாத்திரமும் தாங்கி, ஜ்வாலா மகுடத்துடன், அடியார்களின் துயர் தீர்த்து காக்கின்ற அருள்பொழியும் திருமுக மண்டலத்துடன், திருமார்பில் ரத்ன ஹாரமும் பல்வேறு ஆபரணங்களும், தங்கத் தாலியும், காதிலே தாடகங்களும், கைகளிலே கங்கணமும், இடுப்பிலே ஒட்டியாணமும், கால்களில் சிலம்பும் மின்ன, சிங்கத்தின் மேல் வலது திருப்பாதம் தங்கத் தாமரை பீடத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்க,  இடது திருப்பாதத்தை மடக்கி அமர்ந்த திருக்கோலத்தில் திரிசூலத்துடன் காட்சி தருகிறாள் அம்பிகை. இரவு 8.00 மணி வரை அன்னையை தரிசனம் செய்யலாம். 

இத்தலத்தில் மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆண்டுதோறும் சித்திரை திங்களில் அமாவாசைக்கு அடுத்த செவ்வாயன்று அம்மனுக்கு பூச்சொரிதலும் அதற்கடுத்த செவ்வாயன்று காப்புக்கட்டி 13 நாள்கள் பெருந்திருவிழாவும் சிறப்புடன் நடைபெறும். பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். இத்திருவிழாவில் மலை வழிபாடு, வெள்ளிக் குதிரை வாகனம், திருத்தேர் முதலியன முக்கியமானவையாகும். 

சென்னையில் இயங்கிவரும் ஸ்ரீ மதுரகாளியம்மன் மஹா அபிஷேக அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து 43 ஆவது ஆண்டு மஹாபிஷேகம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மனுக்கு 10.2.2017 இன்று நடைபெறுகிறது.  

திருச்சி சென்னை மார்க்கத்தில் பெரம்பலூரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்தலம். 
தொடர்புக்கு: 04328}291375. 
- என். பாலசுப்ரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com