யார் ராமானுஜர்?  ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு தரிசனம்

"மாயோன் மேய காடுறை உலகம்' என சங்க காலத்தில் சிறப்புற்று இருந்த திருமால்நெறி இடைப்பட்ட களப்பிரர் காலத்தில் வலுவிழக்க வைக்கப்பட்டது.
யார் ராமானுஜர்?  ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு தரிசனம்

குறுந்தொடர்: 1
"மாயோன் மேய காடுறை உலகம்' என சங்க காலத்தில் சிறப்புற்று இருந்த திருமால்நெறி இடைப்பட்ட களப்பிரர் காலத்தில் வலுவிழக்க வைக்கப்பட்டது.

எதிர்த்து வந்த இடையூறுகளைத் தகர்த்து அன்பு நெறியாம் அருள்தரும் திருமால் நெறி ஆழ்வார்களால் உயர்த்திப் பிடித்து அன்பு நெறியாக வளர்க்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் மதமாக வளர்ந்தது விஷ்ணுவை வணங்கிய வைணவம்.

அன்றைய சமூகத்தில் எவை அதிக துன்பத்தைச் சாதாரண மனிதனுக்குக் கொடுத்ததோ அவைகளை நீக்க ஓர் அருளாளர் உதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்நேரத்தில் உதித்த விடிவெள்ளியே ராமானுஜர்!

தொடக்கத்தில் ஆதிசேஷனாகவும் பின்னர் ராமாவதாரத்தில் இலக்குவனாகவும் கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும் இருந்து இறுதியில் கலியுகத்தில் மக்களை உய்விக்க வந்த மகானாக - ராமானுஜர் தோன்றினார்.

வைணவ நெறியை மக்கள் நெறியாக்கிய வித்தகர். சேரியில் வாழ்ந்த மனிதர்களை திருக்குலத்தார் ஆக்கி தெய்வத்தை வழிபட வைத்தவர். இனம் குலம் மொழி வேற்றுமை இல்லாத அன்பு நெறியை வளர்த்தவர்.

ஆச்சாரம் ஒன்றே வாழ்வின் நெறியாகக் கொண்ட மனைவியைத் துறந்து     எம்பெருமானின் அடியவருக்காக, குடும்ப வாழ்க்கையை விட்டு, ஸ்ரீ வைணவத்தையும் அதன் கோட்பாடுகளையும் நிர்ணயித்து நிறுவி வளர்த்தவர். 

திருஅரங்கன் ஆலயத்தில் ஆகமவிதிகளை ஏற்படுத்தியவர் ராமானுஜர். திருவரங்கத்தில் ஒருமுறை பிட்சைக்காக சென்று கொண்டிருந்தார். காவிரிக்கரை மணலிலே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிலர் மணலிலே அரங்கனைப்போல் உருவத்தைக் கீறி "உடையவரே! உங்கள் பெருமாள் பார்த்தீரா?' என்றழைத்துக் காட்டினர். விவரம் தெரியாத அந்த சிறிய குழந்தைகளின் மணல் விளையாட்டுக்கும், பெருமாளுக்கும் மரியாதை கொடுத்து பிட்சை பாத்திரத்தைக் கீழே வைத்து விட்டு பக்தியோடு விழுந்து வணங்கிய மகான். 

மற்றொரு முறை ஓரிடத்தில் சில சிறுவர்கள் கோயிலிலே அன்றாடம் நடக்கும் பூஜை நிகழ்ச்சிகளை விளையாட்டாக விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் பிரசாதம் சமைத்து பெருமாளுக்கு படையலிட்டு அனைத்துத் தரப்பினருக்கும் விநியோகிக்கும் செயலை விளையாட்டாகச் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பிட்சை ஏந்திக் கொண்டு அவ்விடம் வந்து கொண்டிருந்தார் ராமானுஜர். கோயிலில் அழைப்பது போல் "எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளும்!' எனக் குரல் கொடுக்கவே தன்னை மறந்து அங்கே பெருமாள் எழுந்தருளியிருப்பதாகக் கருதிக் கொண்டு கீழே விழுந்து வணங்கி, அந்த மணல் பிரசாதத்தினை பவ்யமாக பிட்சைப் பாத்திரத்தில் ஏந்திக் கொண்டார் ராமானுஜர். பக்தியின் உச்சகட்டம் இது!

குடிநீர் வசதிக்காக தொண்டனூரில் பெரியதொரு நீர்த்தேக்கம் அமைத்த சமூகநலத் தொண்டர் ராமானுஜர்! மாற்றுமத மங்கையையும் மனம் திருத்தி துலுக்க நாச்சியாராக வழிபடச்செய்து மதநல்லிணக்கத்துக்கு அடிகோலியவர். 1000 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களைத் திருக்கோயில் நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமுதாயமே அறியும் வண்ணம், பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புகள் கொடுத்து சிறப்பித்தவர் ராமானுஜர்.

ஒரு சமயம், ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி உபன்யாச விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணன் சலவைத் தொழிலாளியிடம் சலவை செய்த தமது துணிகளைக் கேட்டபோது, அவன் தர மறுத்ததாகக் கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சலவைத் தொழிலாளி அன்றிரவு, ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தரமாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும். இனி ரங்கநாதரின் துணிகளை தானே துவைத்துத் தருகிறேன் எனக் கூற அனுமதியளித்தார்.

அந்த சலவைத் தொழிலாளி ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று துவைத்து, கோயிலில் கொடுக்கும் பணியை மேற்கொண்டிருந்தான். 

ஒரு நாள் அவன் ராமானுஜரிடம்,  ""நீங்கள் தான் என்னைப் பாராட்டறீங்க. ஆனால் ரங்கநாதர் பாராட்டவில்லையே'' என ஆதங்கப்பட்டான்.   ராமானுஜர் அவனை சந்நிதிக்கு அழைத்துச் சென்று, ""உங்களுக்கு இவன், துணிகளைத் துவைத்துக் கொடுக்கிறான். அவனிடம் ஒரு வார்த்தை பேசுங்கள்!'' என்றார். உடன் ரங்கநாதர், அவனிடம், ""என்ன வேண்டும் கேள்'' என்றார். அவன் ""சாமி, கிருஷ்ணாவதாரத்திலே, ஒருவன் உங்களுக்கு துவைத்த துணிகளைத் தர மாட்டேன்னு சொன்னானே அவனை மன்னித்து அவனுக்கு நீங்கள் முக்தி அளிக்க வேண்டும்'' என்றான்.    ""அவனை, அப்பொழுதே மன்னித்து மறந்தும் விட்டேன்'' என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமானுஜர், ""கிருஷ்ணாவதாரத்தில் தவறு செய்த ஒருவனுக்காக முக்தி கேட்கும் நீ உனக்காக ஒன்றும் கேட்கவில்லையே'' எனக் கேட்டார். அதற்கு அந்தச் சலவைத் தொழிலாளி, ""அதை நீங்க பார்த்துக்குவீங்க சாமி'' என்றான்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவ சோமையாஜி பட்டர், காந்திமதி அம்மையார் இவர்களின் திருமகன் "இளையாழ்வார்' என்ற 
ராமானுஜர். 

மதுராந்தகத்தில் பஞ்ச சமஸ்காரம் செய்யும்போது "ராமானுஜன்' என்ற பெயர் குருவான பெரிய நம்பியால் சூட்டி அருளப்பட்டது. "எதிராஜர்' என்ற திருநாமம் கச்சிப் பேரருளாளனாலும் "உடையவர்' என்ற பெயர் திருவரங்கத்து நம்பெருமாளாலும் "தேசிகேந்திரன்' என்ற திருப்பெயர்  திருமலை வேங்கடேசப் பெருமாளாலும். "ஸ்ரீ பாஷ்யகாரர்' என்று காஷ்மீரத்து சாரதா பீட சரஸ்வதியாலும், பெரிய நம்பிகளால்  "திருப்பாவை ஜீயர்' எனவும், திருக்கோஷ்டியூர் நம்பிகளால் "எம்பெருமானார்' எனவும் அழைக்கப்பட்டார். ஆண்டாள்  நம் "கோவிலண்ணன்' எனவும் திருமாலையாண்டான் "சடகோபன்' எனவும் திருவரங்கப்பெருமாளரையர் "லட்சுமண முனி' எனவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அழைத்துள்ளனர்.

வாழ்நாள் முழுவதும் நடந்தே சென்றார். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடபடும் திருப்பதி வேங்கடவன் குறித்து சர்ச்சை எழுந்தபோது, வயதான காலத்திலும், அங்கு ஓடி வைணவத்தை நிலை நிறுத்த உதவியது அவரது திருப்பாதங்களே!.
(தொடரும்) 
- இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com