இயேசுவின் மேல் உள்ள விசுவாசம்!

நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்று 1யோவான் 5:4-இல் வாசிக்கிறோம்.
இயேசுவின் மேல் உள்ள விசுவாசம்!

நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்று 1யோவான் 5:4-இல் வாசிக்கிறோம். நாம் இந்த உலகில் நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ இயேசுவின் மேல் விசுவாசம் வைக்க வேண்டும். நாம் உலகத்தில் உள்ளவைகளைக் கொண்டு என்னால் எல்லாம் முடியும் என்று நினையாமல், நம்மை படைத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசமுள்ளவர்களாக இருக்கவேண்டும். அவ்வாறு வாழும்போது உலகத்தில் நமக்கு வரும் போராட்டங்களிலிருந்து வெற்றி காணமுடியும். இயேசு நம்முடன் இல்லாவிட்டால் உலக கவலைகளில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது.

எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று இயேசு மாற்கு 11:23-இல் கூறினார். ஆகவே தேவனுடைய வார்த்தைகளை நாம் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் அப்படியே நடக்கும்.

மத்தேயு 14-ஆம் அதிகாரத்தில் இந்த விசுவாசம் குறித்ததான சம்பவத்தைப் பார்க்கலாம். ஒருமுறை இயேசு தம்முடைய சீஷர்களைப்பார்த்து ""நீங்கள் முதலாவது படகில் செல்லுங்கள், நான் பின்பு வருகிறேன்'' என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

சீஷர்கள் சென்ற படகானது பெருங்காற்றில் சிக்கியது. அவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அந்நேரம் இயேசு கடலின் மேல் நடந்து சீஷர்கள் சென்ற படகை நோக்கி வந்தார். இதை பார்த்த சீஷர்கள் பயந்து நடுங்கினர். யாரோ நம்மை நோக்கி வருகிறார்கள் என்று கூச்சலிட்டனர். அதைப் பார்த்த இயேசு: பயப்படாதிருங்கள் நான்தான் என்றார்.

அப்போது பேதுரு விசுவாசமில்லாமல் ""நீர் இயேசுவானால் நான் இந்த கடலின் மேல் நடந்து உம்மிடம் வர கட்டளையிடும்'' என்று இயேசுவிடம் கூறினான்.

அவர் "வா'' என்றார். உடனே பேதுரு படவில் இருந்து இறங்கி கடலின்மேல் நடந்தான். ஆனால் காற்று பலமாக வீசுவதைக்கண்டு பயந்து கடலில் அமிழும்போது இயேசு அவனை தூக்கி காப்பாற்றினார். பின்பு பேதுருவைப்பார்த்து, "அற்ப விசுவாசியே ஏன் சந்தேகப்பட்டாய்?'' என்றார்.

நமது வாழ்க்கையில் வரும் கஷ்டங்களும் பிரச்னைகளும் அந்த புயல்காற்றைப் போல இருக்கின்றன. பிரச்னைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இயேசுவின் உதவியால் இதையெல்லாம் சமாளிக்க நம்மால் முடியும் என்ற விசுவாசம் நம் உள்ளத்தில் வேண்டும். இந்த பேதுரு பயந்து விசுவாசமில்லாமல் பயப்பட்டபோது அமிழ்ந்துப்போக ஆரம்பித்தான்.

நம்முடைய விசுவாசம், சிறிதளவும் சந்தேகப்படாமல் தன் மகனையே கர்த்தருக்காக பலியிட முயன்ற ஆபிரகாமைப் போல இருக்க வேண்டும். அதனால்தான் திரளான ஜாதிகளின் தகப்பன் எனவும், விசுவாசிகளின் தகப்பன் எனவும் அழைக்கப்பட்டான்.

ஆகவே நாமும் இயேசுவைச் சார்ந்து அவர் மேல் உள்ள விசுவாசத்தில் வாழும்போது நம் எண்ணம், திட்டம், நோக்கம், செயல் யாவும் இயேசுவுக்கேற்றதாக இருக்கும்.

நாம் ஆண்டவராகிய இயேசுவை நோக்கி, வேத சத்தியங்களை முழுமையாய் நம்பி அதன் அடிப்படையில் நடக்கும்போது நாம் எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து துணைநின்று வெற்றியாக மாற்றுவார்.
-ஒய்.டேவிட் ராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com