கொங்குநாட்டரசிக்கு கோலாகலத் திருவிழா!

கொங்கு நாட்டின் பிரதான நகரம், கோயம்புத்தூர். கோவை நகரத்தில் வீற்றிருந்து அருள்பவள் "கோனியம்மன்!' கோனி என்றால் அரசி என்பது பொருள்.
கொங்குநாட்டரசிக்கு கோலாகலத் திருவிழா!

கொங்கு நாட்டின் பிரதான நகரம், கோயம்புத்தூர். கோவை நகரத்தில் வீற்றிருந்து அருள்பவள் "கோனியம்மன்!' கோனி என்றால் அரசி என்பது பொருள். இவள் கொங்கு நாட்டரசியாக விளங்கிவருகிறாள். 600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொன்மையான ஆலயம்! அருள்மிகு கோனியம்மன், ஆதிபராசக்தியின் பல்வேறு வடிவங்களில் ஒன்றான துர்கா பரமேஸ்வரியின் வடிவாகப் போற்றப்படுகிறாள்.

கர்ப்பகிரகத்தில் கோனியம்மன் வடக்குப் பார்த்து அமர்ந்து வலது காலை மடித்து பீடத்தின்மீது வைத்துக்கொண்டு, இடது காலைக் கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்க, அவள் காலடியில் வாளும் கேடயமும் கொண்டு அம்பிகையோடு போருக்கு வந்த அரக்கன், அம்பிகையால் வீழ்த்தப்பட்டு, சுருண்டு கிடக்கிறான். கழுத்தில் ஆரம் அணிந்து கொண்டு, தனது எட்டு திருக்கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி, ஆகியவற்றை ஏந்திக் கொண்டு சற்றே உக்கிரமான பார்வையுடன் காட்சி தருகிறாள். தலையை மணிமகுடம் அலங்கரிக்கிறது. தன் வலக் காதில் சிவபெருமானுக்கு உரிய குண்டலமும், இடக் காதில் அம்பிகைக்கு உரிய தோடும் அணிந்து, சிவசக்தியர் இணைந்த அர்த்தநாரீஸ்வர கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்பிகை சந்நிதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர். அம்மனுக்கு வலப்புறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள். சூரியன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் வீற்றிருக்கிறார். பின்பகுதியில் ஆதி கோனியம்மன் மார்பளவு சிலையில் காட்சி தருகிறாள். வடக்கு வாசலில் ராஜகோபுரம் அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில் மாசியில் 14 நாள்களுக்கு திருவிழா கோலாகலமாக நடைபெறும். மற்றும் தமிழ்மாதப்பிறப்பு, ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல், தீபாவளி போன்றவையும் விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆடி மாதம் முழுவதும் அன்னைக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கும். அமாவாசை, பெüர்ணமி நாள்களில் விசேஷ பூஜைகள் உண்டு. முக்கியமான தினங்களில் அம்பிகை தங்க பாவாடையில் காட்சி தருவாள்.

திருமணத்தடை நீங்கவும், நன்மக்கட்பேறு கிட்டவும், மாங்கல்யம் நிலைக்கவும், கொடு நோய்கள் அகலவும், தொழில் விருத்தி ஏற்படவும், வாழ்வில் வளம் பெறவும் அம்பிகையின் அருளை வேண்டி நிற்கும் பக்தர்களின் வேண்டுதல்களை அம்பிகை நிறைவேற்றுகிறாள் என்பதற்கு அங்கு அலைமோதும் பக்தர்களே சாட்சி. தற்போது, மாசித்திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத் திருவிழாவில் சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வது முக்கிய நிகழ்வாகும். மறுநாள் 1.3.2017 அன்று தேர்த்திருவிழா நடைபெறும்.
தொடர்புக்கு: 0422 2396821, 2390150.
- ரஞ்சனா பாலசுப்ரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com