பதறாத செயல் சிதறாது

எண்ணாது செய்யும் செயலில் இன்னலே விளையும். எண்ணி துணிந்து செய்யும் செயலால் எண்ணியதை எண்ணியாங்கு திண்ணியமாய் பெறலாம்.
பதறாத செயல் சிதறாது

எண்ணாது செய்யும் செயலில் இன்னலே விளையும். எண்ணி துணிந்து செய்யும் செயலால் எண்ணியதை எண்ணியாங்கு திண்ணியமாய் பெறலாம். அதனால் நன்மையே விளையும். பதறாத செயல் சிதறாது என்பது பரவலாக பேசப்படும் வழக்கு மொழி. பதறாத செயல் சிதறாது; சிந்தாது; நொந்து நோக வைக்காது; வெந்து வேதனைப்படவிடாது. பதறாது செயல்பட முன்கூட்டி திட்டம் இடுவது அறிவுடைமை.

அவசரமாக செய்ய வேண்டிய ஆறு செயல்கள்:
1. குறித்த நேரத்தில் குறித்தபடி தொழுகையை நிறைவேற்றல். 2. அடக்கம் செய்வதற்காக ஜனாஸô (உயிரற்ற உடல்) கொண்டு வரப்பட்டால் உடனே அடக்கம் செய்தல். 3. பருவம் அடைந்த பெண்களை முதிர் கன்னிகளாகி உதிர விடாமல் தக்க முறையில் மிக்க கவனமாய் திருமணம் செய்தல். 4. தவணைக்கு முந்தி தவணைக்குப் பிந்தாது கடனை அடைத்தல். 5. விருந்தினர் வந்ததும் உணவளித்தல். 6. தவறு செய்தால் உடனே மன்னிப்பு கோருவது. இவற்றைத் தவிர பிற செயல்களில் அவரசப்படக்கூடாது, பதற்றப்படக்கூடாது, மீறி பதற்றப்படுவது தீய சாத்தானின் குணம்.

"அவன் ஒன்றை நாடினால் அவனது கட்டளை எல்லாம் "நீ ஆகுக' என்று அதற்கு அவன் கூறுவதுதான் உடனே உண்டாகிவிடும்'' என்ற உத்தம குர்ஆனின் 36-82 ஆவது வசனத்தின் கருத்து அல்லாஹ் ஒன்றை உருவாக்க நாடியவுடன் அது உருவாகும் என்பதே. சர்வ சக்தியுடைய ஆகுக என்றால் ஆக்கும் ஆற்றலுடைய அல்லாஹ் அவசரப்படாமல் நிதானமாக பதறாது வானம், பூமி அவ்விரண்டிற்கும் இடையில் உள்ளவற்றையும் ஆறு நாள்களில் படைத்ததாக பகரும் குர்ஆனின் வசனங்கள் 7-54, 8-54, 10- 3, 11-7, 25-59, 32-4, 57-4. இச்செய்தியைத் திரும்ப திரும்ப நினைவூட்டி திருக்குர்ஆனில் பல வசனங்களில் கூற காரணம்- அல்லாஹ் ஒரே நாளில் ஒரே பகர்வில் (ஆகுக என்று சொல்லி) படைக்காமல் ஆறு நாள்களில் அமைதியாக படைத்தான் என்பதை அறிந்து அகிலத்தில் வாழும் மக்களும் பதறாது பாங்காய் செயல்பட வேண்டும் என்பதற்காகவே.

"மனிதன் அவசரக் காரனாக இருக்கிறான். என் அத்தாட்சிகளை அதிவிரையில் உங்களுக்குக் காண்பிப்பேன். நீங்கள் அவசரப்பட வேண்டாம்'' என்று எம்பெருமானார் நபி (ஸல்) அவர்களுக்கு அருமறை குர்ஆனின் 21-37 ஆவது வசனத்தில் அறிவுறுத்தும் அல்லாஹ் 70-19 ஆவது வசனத்தில் மெய்யாகவே மனிதன் பதற்றமுடையவன் என்பதை உறுதி செய்கிறான்.

ஆதம் நபி அவர்களின் குழந்தைகளிடம் ""நீங்கள் நாடும் செயலைச் செய்யத் துவங்குமுன் ஒரு ஸôஅத்து (நாழிகை) நேரம் அச்செயல் ஏற்புடையதா என்று எண்ணி செயல்படுங்கள். நான் அவசரப்படாது தாமதித்திருப்பின் பூமிக்கு வந்த துன்பம் நேர்ந்திருக்காது'' என்று அறிவுறுத்தினார்கள். சாத்தானின் தூண்டுதலால் அவசரப்பட்டு தின்ன கூடாத கனியைத் தின்றதை நினைவுறுத்தி திண்ணியமாய் எண்ணி நின்று நிதானித்து அவசரமின்றி ஆவன செய்ய அறிவுறுத்துகிறார்கள் ஆதம் நபி.

அவசரக்காரன் ஆத்திரக்காரனாகவே இருப்பான். ஆத்திரம் ஆவேசத்தை உருவாக்கும். ஆவேசம் கடுமையாகி கொடுமைக்கும் வழிவகுக்கும். அதனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தேவையில்லாத இடத்தில் கடுமை காட்டுபவர்களைக் கண்டித்ததை விண்டுரைக்கிறார் அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) நூல் -முஸ்லிம்.

முதற்கலீபா அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் ஆட்சியில் துவக்கப்பட்ட குர்ஆனை எழுத்தில் முழுமையாக கொண்டு வரும் முயற்சி இரண்டாம் கலீபா உமர் (ரலி) ஆட்சியில் தொடர்ந்து மூன்றாம் கலீபா உதுமான் (ரலி) ஆட்சியில் முற்றுப் பெற்றது.

வானவர் ஜிப்ரயீல் குர்ஆனை ஓதும்பொழுதே உடனுக்குடன் உத்தம நபி (ஸல்) அவர்கள் ஓதி மனனம் செய்வார்கள். வானவர் முழுவதும் ஓதி முடிக்குமுன் அவசரப்பட்டு ஓதவேண்டாம் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்களுக்கு "உங்கள் பால் குர்ஆனைக் கொண்டு அவனுடைய வஹி (இறைமொழி) முடிக்கப்படுவதற்கு முன்னர் அவசரப்பட வேண்டாம்'' என்று அறிவுறுத்துகிறது அருமறை குர்ஆனின் 20-114 ஆவது வசனம். அப்படி அவசரப்படுவதால் அடுத்தடுத்து வரும் சொற்கள் சரியாக புரியாமல் போகாது காக்கவே இந்த அறிவுரை.

சாப்பிடுபவர் சாப்பிட்டு முடிவதற்குள் அவசரப்பட்டு எழ வேண்டாம் என்று ஏந்தல் நபி (ஸல்) அறிவிப்பது புகாரியில் உள்ளது. அரபியர் அவசரப்படுவதற்கு உம் முன்னதாமத் (கை சேதத்தின் தாய்) என்று பெயரிட்டனர்.

"மனிதன் நன்மையை கோருவது போல தீமையையும் கோருகிறான். ஏனெனில் மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்'' என்ற எழில்மறை குர்ஆனின் 17-11 ஆவது வசனப்படி நன்மையை நாடி இறைவனை இறைஞ்சும் மனிதன் அவனின் வேண்டுதல் உடனடியாக நிறைவேறவில்லை என்றால் அவ்வேண்டுதலுக்கு புறம்பாக தீமையை வேண்டுகிறான். இது மனிதனின் அவசர புத்தியின் அபத்தம். இதனையே முற்காலத்தில் பேச்சு வழக்கில் அவசரக்காரனுக்கும் ஆத்திரக்காரனுக்கும் புத்தி மட்டு என்பார்கள். மட்டு என்ற சொல் அறிவில் குறைந்தவன் என்று பொருள் படும். அவசரமே ஆத்திரத்திற்கு அடிப்படை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கேட்டவருக்கு எச்செயலையும் நன்கு ஆய்ந்து ஆலோசித்து அச்செயலால் நன்மை விளையும் என்பதை நன்கறிந்தபின் செய்ய வேண்டும் என்றும் அச்செயல் வழிகேட்டிற்கு வழிவகுக்கும் என்று அஞ்சினால் அச்செயலைச் செய்யாதிருக்கும்படி செப்பியதையும் செவிமடுத்து உரைக்கிறார் அனஸ் (ரலி).

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அஷஜ்ஜு அப்தில் கைஸ் என்பவரை அல்லாஹ் விரும்பும் இரு நற்குணங்கள் பொறுமை, அவசரமின்றி சிந்தித்து செயலாற்றும் தன்மை அவரிடம் இருப்பதாக பாராட்டினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ்பின் அப்பாஸ் (ரலி) நூல் -முஸ்லிம்.

எச்செயலையும் அவசரப்படாது ஆற அமர ஆலோசித்து பதற்றமின்றி பக்குவமாய் செய்து மிக்க பயனைப் பெறுவோம். நயத்தகு நாகரிகம் பேணி வியத்தகு சாதனைகள் புரிவோம். வியனுலகு ஆளும் அல்லாஹ்வின் அருளையும் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com