மாட்சிமை மிகுந்த மஹாகாலேஸ்வர் மந்திர்!

நமது முன்னோர்கள் பாரத தேசத்தின் ஐக்யமும், அகண்ட தன்மையும் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற பரந்த நோக்கில் நாட்டின் பல பாகங்களிலும்
மாட்சிமை மிகுந்த மஹாகாலேஸ்வர் மந்திர்!

நமது முன்னோர்கள் பாரத தேசத்தின் ஐக்யமும், அகண்ட தன்மையும் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற பரந்த நோக்கில் நாட்டின் பல பாகங்களிலும் சிவன் கோயில்களை அமைத்து ஜோதிர் லிங்கங்களை பிரதிஷ்டை செய்தனர். அவற்றில் த்வாதச (பன்னிரு) ஜோதிர் லிங்கங்கள் என அழைக்கப்படும் ஸ்ரீசோமநாதம், மல்லிகார்ஜ்ஜுனம், மஹாகாலேஸ்வரம், ஓங்காரேஸ்வரம், வைஜநாதம், பீமசங்கரம், ராமேஸ்வரம், விஸ்வநாதம், த்ரயம்பகேஸ்வரம், நாகேஸ்வரம், கேதாரநாத், தூமேஸ்வரர் ஆகியவை மிகவும் பிரசித்தமானவை. இவற்றிற்கு பூகோளரீதியிலும், தார்மீகத்தின் அடிப்படையிலும், தேசிய நோக்கிலும் முக்கியத்துவமுண்டு. இத்தலங்களில் கோயில் கொண்டிருக்கும் ஈஸ்வரனை சென்று தரிசிப்பதால் ஏழு பிறவியிலும் செய்த ஜென்மாந்த்ர பாவங்கள் விலகுகின்றன என்று பழைமையான புராண நூல்கள் இயம்புகின்றன.

பாரத மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய புண்ணியத் தலங்கள் இவை. இவற்றுள் மஹாகாலேஸ்வர் இருப்பது மத்தியப் பிரதேசத்தில் அவந்திகா எனச் சொல்லப்படும் உஜ்ஜயினி தலத்தில்தான். இது ஒரு கும்ப ஸ்தலமும் ஆகும். 51 சக்தி பீடங்களுள் ஒன்று. பகவான் ஸ்ரீகிருஷ்ணன் குருகுலம் வாசம் மூலம் கல்விகற்ற ஸôந்தீபினி ஆஸ்ரமம் இங்குதான் உள்ளது. மேலும் இதுதான் மாமன்னர் விக்ரமாதித்தன் ஆட்சி புரிந்த புண்ணிய பூமி. உஜ்ஜயினியில் இருப்பது போலவே மஹாகாலேஸ்வர் ஆலயம் ஒன்று காஞ்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தில் சமீப காலத்தில் உருவாகியுள்ளது. செங்கற்பட்டிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் (ஜி.எஸ்.டி. சாலை படாளம் கூட்ரோடிலிருந்து செல்லலாம்) உள்ள இக்கிராமத்தில் இவ்வாலயம் அமைந்ததற்கான காரணத்தைச் சற்றுத் தெரிந்து கொள்வோம்.

பாரதம் பரம் வைபவம் என்ற பூரண நிலை அடைந்து தன்னிகரற்ற தனித்துவம் வாய்ந்து உலகில் பிற நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்ற நோக்கிலும், ஒரு காலத்தில் சந்திர குப்த மெüரியர் ஆட்சியில் பொற்காலமாக விளங்கிய பாரதம் இனி எதிர் வரும் காலங்களில் அவ்வாறு அமைய வேண்டும் என்ற கருத்திலும் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள யோகசாந்தி குருகுல ஸ்தாபகர் குருநாதர் பூஜ்யஸ்ரீஸ்வாமி ப்ரஹ்ம யோகானந்தா என்ற இறை அருளாளரின் சிந்தனையில் தோன்றிய எண்ணமே ஆலயமாகத் தற்போது உருவெடுத்துள்ளது. இளம் வயதில் துறவு வாழ்க்கையை மேற்கொண்ட இவரின் வாக்கின்படி, பாரதத்தின் வெற்றியின் சின்னம், நேற்று தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், இன்று குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயம், நாளை பரம் வைபவம் நிலையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்த மஹாகாலேஸ்வர் ஆலயம் திகழும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.

அவர் அர்ப்பணித்துள்ள "ஸôஸ்த்ராலயம்' என்று சிறப்பித்து அழைக்கப்படும் இந்த ஆலயம், மிக மிக குறுகிய காலத்தில் பாரத தேசத்தின் மீது பற்று கொண்ட ஆன்மீகச் சிந்தனையாளர்கள் பங்கேற்பாலும் ஊர் கிராமமக்கள் ஒத்துழைப்பாலும் குருஜியின் சீடர்கள் ஈடுபாட்டினாலும் கட்டப்பட்டது என்ற பெருமைக்கு உரியது. மூன்று அடுக்குகள் கொண்ட இவ்வாலயத்தில் கீழ்தளத்தில் ஸ்ரீராஜாமஹாகாலேஸ்வரர் சந்நிதியும், முதல் மாடியில் ஸ்ரீஓங்காரேஸ்வரர் சந்நிதியும், இரண்டாவது மாடியில் ஸ்ரீநாக சந்த்ரேஸ்வர் சந்நிதியும் அமைந்து அதற்கு மேலே உஜ்ஜயினி ஜோதிர்லிங்க பாணியில் ஸ்ரீகுப்தேஸ்வரரும் (ஆத்மலிங்கம்), கோயில் கொடி த்வஜேஸ்வரராகவும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. லிங்க பாணங்கள் அனைத்தும் நர்மதா நதிக்கரையிலிருந்து தருவிக்கப்பட்டது. அதி அற்புதமான தோற்றம். காண்போரைச் சுண்டி இழுக்கும் திறன் பெற்றது.

பாரதத்தின் வடக்கு பகுதியில் உள்ள கேதராநாத், காசி விஸ்வநாதர் போன்ற ஆலயங்களில் பின்பற்றப்படும் சம்பிரதாயப்படி பக்தர்கள் கருவறையில் சென்று தங்கள் திருக்கரங்களினாலேயே சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம் என்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு. ஸ்ரீ ஆனந்த விநாயகர், தோரண கணபதி, யோகதட்சிணாமூர்த்தி, ராதா கிருஷ்ணர், ஆஞ்சநேயர், 234 புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட புஷ்கரணி போன்றவைகளை ஆலய வளாகத்திலும், ஆலயம் அருகில் மலைமேல் குருஜியால் ஸ்தாபிக்கப்பட்ட மஹா நாராயண ஸ்வாமி சந்நிதியும் இங்கு தரிசிக்க வேண்டிய இதர அம்சங்கள்.

இவ்வாலயத்தில் நீலமங்கலம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் வசித்து வரும் பால்ய பருவ வயதில் உள்ள பள்ளிச் சிறார்கள் தினசரி மாலைப் பொழுதில் சிரத்தையுடன் செய்யும் சிவபாராயண ஸ்தோத்திரங்களும் ருத்ர பாராயணங்களும், சிவ அபிஷேகம் பூஜை தருணத்தில் சொல்லப்படும் மந்திரங்களும் கேட்பதற்கு காதுகளுக்கு விருந்து. எதிர்வரும் சிவராத்திரி (பிப் 24) நன்னாளில் மாலை 4.00 மணியளவில் பிரதோஷ பூஜையும் தொடர்ந்து இரவு முழுவதும் நான்கு காலங்களில் சிறப்பு அபிஷேக, பூஜை வழிபாடும் நடைபெறுகின்றது.

நீலமங்கலத்திற்கு செல்ல செங்கல்பட்டிலிருந்து அரசுப் பேருந்து எண் 12 குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் செல்லுகிறது. பேருந்து எண் 24, T4, மற்றும் தனியார் பேருந்துகள் அருகில் உள்ள தச்சூர் வரை செல்லுகின்றன.


தொடர்புக்கு: 89398 48170 / 98840 25911.


- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com