ஆனந்த வாழ்வளிக்கும் ஆதித்யன்!

உலகில் பரவலாக காணப்படும் வழிபாடு சூரிய வழிபாடு. பண்டைய நாகரிகங்கள் பலவற்றிலும் சூரிய வழிபாடு இருந்ததென்பதற்கு

உலகில் பரவலாக காணப்படும் வழிபாடு சூரிய வழிபாடு. பண்டைய நாகரிகங்கள் பலவற்றிலும் சூரிய வழிபாடு இருந்ததென்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. எந்த கடவுளையும் நாம் கண்ணால் காண முடியாது. ஆனால் சூரிய வழிபாட்டில் மட்டும் வழிபடும் கடவுளான சூரியனை நேரில் காணமுடியும். 

வானியலில் முதலிடம் பெறுவது சூரியனே! ஜோதிட கணிதத்தில் அவரே முதலிடம் பெறுகிறார். அதுமட்டுமல்லாமல் இவ்வுலகில் காற்று, மழை, கோடை, குளிர் போன்ற இயற்கை நிலைகளையும், பருவ காலங்களையும், தட்ப- வெப்ப மாற்றங்களையும் மேலும் பல இயற்கை நியதிகளுக்கும் மூலகாரணம் சூரியனே! இவ்வுலகே சூரியனிடமிருந்துதான் தோன்றியது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாகவும், யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்றும், அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்றும் 
போற்றுகிறது. சூரியன் காலையில் ரிக் வேத சொரூபியாகவும் மதியத்தில் யஜுர் வேத சொரூபியாகவும் மாலை வேளையில் சாம வேத சொரூபியாகவும் திகழ்கிறான் என்றும் வேதம் கூறுகிறது. 

காஸ்யபர்- அதிதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் சூரியன். விஸ்வகர்மாவின் மகளான சஞ்சிகை என்பவளை மணந்தார். அவள் சூரியனின் உஷ்ணம் தாங்காமல் தன்னைப்போல் நிழல் உருவைத் தோற்றுவித்து சூரியனிடம் வாழும்படி கேட்டுக் கொண்டாள். அவள்தான் சாயாதேவி. சஞ்சிகைக்கு வைவஸ்வதமனு, யமன், யமுனா என்ற மக்களும் சாயாதேவிக்கு சாவர்னிமனு, ச்ருதகர்மா (சனிபகவான்) என்ற மகன்களும் உண்டு. சூரியனை விட்டுப் பிரிந்திருந்த சஞ்சிகை சிறிது காலத்திற்குப்பின் மீண்டும் சூரியனுடன் இணைந்தாள். அவர்களுக்கு அஸ்வினி தேவர்கள் பிறந்தார்கள் என்று புராணம் கூறுகிறது.

நமது புராணங்கள் 12 சூரியன்களைப் பற்றிப் பேசுகிறது. அந்த பன்னிருவரும் பன்னிரண்டு மாதங்களின் அதிபதியாவர். (சித்திரை) அம்சுமான், (வைகாசி) தாதா,  (ஆனி) ஸவிதா, (ஆடி) அரியமான், (ஆவணி) விஸ்வான், (புரட்டாசி) பகன், (ஐப்பசி) பர்ஜன்யன், (கார்த்திகை) துவஷ்டா, (மார்கழி) மித்திரன், (தை) விஷ்ணு, (மாசி) வருணன், (பங்குனி) பூஷா ஆகியோரே அவர்கள். 

"ஆதித்யானாம் அஹம் விஷ்ணு' என்கிறார் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர். இதன் அர்த்தம் "நானே சூரியனாகத் திகழ்கிறேன் என்பதாம். அருணன், ஆதித்யன், ஆதிபூதன், அனந்தன், பானு, செளரன், ஓஜஸ்கரன், ஆத்மரூபன், ரவி, பாஸ்கரன், அர்கன், தினகரன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். 

இவர், ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகிறார். வசந்த ருதுவில் (வசந்த காலம்) தங்க நிறத்திலும் கிரிஷ்ம ருதுவில் (வெயில் காலம்) செண்பகப்பூ நிறத்திலும் வர்ஷ ருதுவில் (மழைக்காலம்) வெண்மை நிறத்திலும் சரத் ருதுவில் (கார்காலம்) கருமை நிறத்திலும் ஹேமந்த ருதுவில் (முன்பனிக் காலம்) தாமரை நிறத்திலும் சிசிர ருது (பின்பனிக் காலம்) சிவப்பு நிறத்திலும் விளங்குவதாக வேதங்கள் கூறுகின்றன.

இவர் ஏழு குதிரைகள் பூட்டிய "காலம்' என்ற ஒற்றைச் சக்கர தேரில் பவனி வருபவராக புராணங்கள் கூறுகின்றன. இந்த ரதத்தை ரதசப்தமியன்று விஷ்ணு சூரியனுக்கு அளித்தார். ரத சாரதியாக காசியப முனிவரின் மகனான அருணன் விளங்குகிறார். இவருக்கு இடுப்புக்குக் கீழே அங்கங்கள் கிடையாது. வைரோஜன யோகத்தில் ரதத்தைச் செலுத்தி, சூரிய பகவானுக்கு உறுதுணையாக இருக்கிறார். 

சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்று அழைப்பர். இவை, வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன.

ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கு சங்கும், சக்கரமும் உண்டு. அதனால் வைஷ்ணவர்கள் சூரியனை "சூரியநாராயணன்' என்று போற்றுகின்றனர். சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன. சூரியன் சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார். அதனால் தான் சைவர்கள் "சிவசூரியன்' என்று போற்றுகின்றனர். 

சூரியனின் தேர் தெற்கில் பயணிக்கும் காலத்தை தட்சிணாயனம் என்றும், வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை உத்ராயணம் என்றும் கூறுவர். தைமாதம் சூரியனின் தேர்பாதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் காலம். உண்மையில் தை மாதம் சுக்லபட்ச சப்தமியன்று சூரிய ரதம் தெற்கிலிருந்து மேற்கு நோக்கித் திரும்புகிறது. அன்றைய நாளுக்கு "ரதசப்தமி' என்று பெயர். அன்று சூரியனை வழிபட்டால், சகல செளபாக்கியங்கள் கிட்டும். 

ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி உலகின் நலனைக் கருதி ராவணனை வெல்ல முனைந்தபோது ஸ்ரீ ராமனுக்கு கவசமாக, பாதுகாப்பாக, ஆதித்ய ஹ்ருதயத்தை அகஸ்தியர் உபதேசித்தார். வேதியர்கள் தினமும் ஓதும் காயத்ரி மந்திரம் சூரியனுக்குரியதே. ஆதித்ய ஹ்ருதயமும் காயத்ரி மந்திரமும் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் வாழ்வில் வெற்றியையும் கொடுக்கக் கூடியவையாகும்.

சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாளை "மகர சங்கராந்தி' என்று வட இந்தியாவிலும், "பொங்கல் திருநாள்' என்று தமிழகத்திலும் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் நான்கு நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகியன்று வேண்டாதவற்றைக் களைந்து வீட்டை சுத்தம் செய்வர். பொங்கலன்று சூரியனுக்கு புதுப்பானையில் பொங்கலிட்டு படைத்து உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர். அதற்கு மறுநாள் உழவர்களின் நண்பனாக விளங்கும் மாடுகளுக்கு "மாட்டுப் பொங்கல்' என்று விழா எடுப்பர். நான்காம் நாளை "காணும் பொங்கல்' அல்லது "கணுப் பண்டிகை' என்று அழைப்பர்.

இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். கணுப்பிடி இந்நாளின் சிறப்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் செய்யும் நோன்பு இது. 

இந்தியாவில் சூரியனுக்கென்று தனியே ஒருசில ஆலயங்களே உள்ளன. இவற்றுள் மிக முக்கியமானது, ஒரிசாவில் கோனார்க், கயாவில் தட்சிணார்க்கா, ஆந்திராவில் அரசவல்லி, குஜராத்தில் மொதேரா, அஸ்ஸôமில் சூர்யபஹார், மத்திய பிரதேசத்தில் உனாவோ, கேரளாவில் ஆதித்ய புரம், காஷ்மீர், ஸ்ரீநகரில் 2000 ஆண்டுகள் பழைமையான "மார்த்தாண்டா' ஆலயம். தமிழகத்தில் முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட, சூரியனார் கோவில் ஆகியவை ஆகும். இங்கு, கருவறையில் உஷா, பிரத்யுஷா என்னும் இருதேவியருடன் சூரியன் மேற்குநோக்கி காட்சி தருகிறார். 

சூரிய வழிபாட்டினை முறையாக மேற்கொள்பவர்களுக்கு ஆரோக்கியம் பெருகும். கண்ணொளி பிரகாசிக்கும். சருமப் பாதுகாப்பு ஏற்படும் என்று ஆயுர்வேதம் 
கூறுகிறது. 
- என். பாலசுப்ரமணியன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com