வேடுவனாய் வந்த வரதன்!

வைணவத்தலங்களில் கோயில் என்றால் திருவரங்கத்தையும், பெருமாள் கோயில் என்றால் ஸத்யவிரத ஷேத்திரமான வரதராஜப் பெருமாள்
வேடுவனாய் வந்த வரதன்!

வைணவத்தலங்களில் கோயில் என்றால் திருவரங்கத்தையும், பெருமாள் கோயில் என்றால் ஸத்யவிரத ஷேத்திரமான வரதராஜப் பெருமாள் ஆலயத்தையும் குறிக்கும். வைகாசி கருடசேவை உட்பட காஞ்சி வரதர் கோயிலில் நடைபெறும் எல்லா உற்சவ தினங்களும் சிறப்பானவையே. அவ்வகையில் "அனுஷ்டான குள வைபவ' உற்சவத்தைப் பற்றி அறிந்துகொள்வோம்.

பகவத் ராமானுஜர் காஞ்சியில் இருந்தபோது அருகில் உள்ள திருப்புட்குழி கிராமத்தில் வசித்து வந்த யாதவப் பிரகாசர் என்பவரிடம் தன் குருகுல வாழ்க்கையைத் தொடங்கினார்.  குருகுலவாசத்தில் வேதாந்த பாடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றின.  அதனால் ராமானுஜரின் மேல் ஒருவித கசப்பு மனப்பான்மை ஏற்பட்டு அது மேன்மேலும் வளர, ஒரு காசி யாத்திரையாக சீடர்களுடன் சென்று ராமானுஜரை காசியில் கங்கையில் தள்ளிக் கொன்றுவிடுவது எனத் திட்டம் வகுத்தார் யாதவப் பிரகாசர். இதனை யாத்திரையில் தனது தம்பி முறையான கோவிந்தபட்டர் என்பவர் மூலமாக அறிந்த ராமானுஜர் பல மைல் தூரங்கள் கடந்து வந்த நிலையில் யாத்திரையிலிருந்து தப்பித்துவிட்டார். காஞ்சியை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

அது கொடிய விலங்குகளும், கொலைபாதகக் கொள்ளையரும் நிறைந்த விந்திய மலையின் ஒரு காட்டுப்பகுதியாகும். மிகவும் களைத்துப்போய் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுக்க நினைத்தபோது ராமானுஜரை ஒரு வேடுவனும், வேடுவச்சியும் சந்தித்தனர். ராமானுஜரிடம் தாங்கள் வடதேசத்தவர் என்றும் சத்தியவிரத ஷேத்திரத்திற்கு செல்வதாகவும், அவருக்கும் ஊர் திரும்ப வழிகாட்டுவதாகவும் கூறினர். அந்த இரவு பொழுதை அங்கு கழித்து, அதிகாலையில் கண்விழித்த ராமானுஜரிடம், வேடுவச்சி தனக்கு விக்கல் மேலிட தாகம் எடுப்பதாகவும் அருகில் உள்ள நீர் நிலையிலிருந்து நீர் எடுத்துவருமாறும் கேட்டுக்கொண்டாள்.

நீருடன் திரும்பிவந்த ராமானுஜர் அந்த வேடுவதம்பதிகளைக் காணாது திகைத்தார். அப்போது சூரிய உதயமும் ஆகிவிட்டது. ஜன நடமாட்டமும் கண்ணில்பட மிகுந்த ஆச்சரியத்துடன் அங்கு ஒரு நபரிடம் விசாரித்துத் தான் காஞ்சியின் ஒரு பகுதியில் இருப்பதையும், தொலைவில் காஞ்சி வரதர் கோயில் ராஜகோபுரம் தெரிவதையும் கண்டார். காஞ்சி வரதரும், பெருந்தேவித் தாயாரும் வேடுவ தம்பதிகளாக வந்து தன்னைக் காப்பாற்றியதை நினைத்து எண்ணி, எண்ணி, புளகாங்கிதம் அடைந்தார்.

ராமானுஜர் வாழ்வில் நடந்த இச்சம்பவத்தை நினைவுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் வரதரஜப்பெருமாள் திருக்கோயிலில் "அனுஷ்டான குள வைபவம்' என்ற ஓர் உற்சவம் நடைபெறுகின்றது. அன்று வரதரும், ராமானுஜரும் காலை காஞ்சியிலிருந்து புறப்பட்டு மதியம் அனுஷ்டான குளம் அமைந்துள்ள செவிலிமேடு கிராமத்திற்குச் (காஞ்சியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரம்) சென்று திருமஞ்சனம் கண்டபிறகு காஞ்சி திரும்புவார்கள்.  

திரும்பிவரும்போது உற்சவர் வரதராஜர் வேடுவன் வேடத்தில் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிப்பார். இந்த அனுஷ்டான குளம், "சாலைக்கிணறு' என்று அழைக்கப்படுகின்றது.  வேடுவச்சியாக வந்து தாயார் அடையாளம் காட்டிய இந்த நீர் நிலையிலிருந்து தான், ராமானுஜர் தினசரி தன் அனுட்டானங்களை முடித்துக்கொண்டு காஞ்சி வரதருக்கு நடைபெறும் திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டுவருவது வழக்கமாம். அது இன்றும் தொடரப்படுவதாகத் தெரியவருகின்றது.
இவ்வாண்டு, "அனுஷ்டான குள வைபவம்' என்னும் இந்த உற்சவம் ஜனவரி-19 ஆம் தேதி நடைபெறுகின்றது. இதற்கு முன்னதாக, ஜனவரி-15 ஆம் தேதி அதாவது தைப்பொங்கலுக்கு மறுநாள் பார்வேட்டை உற்சவமாக காஞ்சி வரதர் பழைய சீவரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வீற்றிருக்கும் திருத்தலத்திற்கு செல்கின்றார்.

காஞ்சி - செங்கல்பட்டு சாலையில் வாலாஜாபாத் அருகில் உள்ளது பழையசீவரம். பக்தர்கள் இவ்விரு வைபவங்களிலும் கலந்துகொண்டு பேரருளாளனின் பேரருளுக்கு பாத்திரர்களாகலாம்.
- எஸ். வெங்கட்ராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com