அனைத்தும் தருவாள் அன்னை அபிராமி!

சோழ நாட்டு திருத்தலங்களில் திருக்கடவூர் மிகவும் புகழ் பெற்றது. மார்கண்டேயர் சிரஞ்சீவித்வம் பெற்றது
அனைத்தும் தருவாள் அன்னை அபிராமி!

சோழ நாட்டு திருத்தலங்களில் திருக்கடவூர் மிகவும் புகழ் பெற்றது. மார்கண்டேயர் சிரஞ்சீவித்வம் பெற்றது இத்தலத்தில் தான். திருமால் முதலிய தேவர்கள் தூயதோர் இடத்தில் உண்ண வேண்டுமென்று அமுதக் கடத்தை இங்குக் கொண்டுவந்து வைத்தமையால், கடபுரி அல்லது கடவூர்  என்ற பெயர் பெற்றது. எம வாதனையை கடப்பதற்கு உதவும் ஊர் என்பதாலும் இப்பெயர் பெற்றதென்பர். 

அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின்போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, மகாவிஷ்ணு பூஜைக்குரிய உடைகளைத் தரிப்பதற்காக, தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து கண்கண்ட தெய்வம், அழகுக்கொரு வரும் ஒவ்வாத செல்வி, எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் ஈன்றருளும் வள்ளல் நாயகியான அபிராமி அம்பிகை பிரகாசத்துடன் தோன்றினாள். அம்பிகையை எல்லோரும் கைகூப்பித் தொழுதனர். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு என்கிறது தலபுராணம்.

இத்தகு பெருமை பெற்ற ஊரில் சுப்ரமணியன் என்ற திருநாமத்துடன் தோன்றிய அந்தணர், அன்னை அபிராமி மீது மிகவும் பக்தி கொண்டு விளங்கினார். அவருக்கு எல்லாமே அன்னை அபிராமிதான். எப்பொழுதும் அவர் அபிராமி சந்நிதியிலேயே இருந்து அன்னையின் பேரன்பிலேயே திளைத்து வந்தார். தமிழ் மொழியுடன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர், அன்னை அபிராம வல்லியின் பக்தராக அல்லாமல் பித்தராகவே இருந்து வந்தார். அதனால் அவரை "அபிராமி பட்டர்' என்று அழைக்கலாயினர். அதுமட்டுமல்லாமல் எல்லா பெண்களையும் அன்னையின் அவதாரமாகவே கருதி, அவர்களின் கால்களில் விழுந்து வணங்குவார். சதாசர்வ காலமும் அபிராமி சந்நிதியிலேயே இருந்து, அபிராமி அம்மன் திருநாமத்தையே உச்சரித்து வந்த அவர் மற்றவருக்கு இதனால் சித்தசுவாதீனம் அற்றவர் போல் தோற்றம் அளித்தார். 

அன்று தை அமாவாசை. தஞ்சையை ஆண்டுவந்த சரபோஜி மன்னர் காவிரிபூம்பட்டினம் சென்று கடலில் நீராடி பித்ரு கடன்களை முடித்துவிட்டு தஞ்சைக்குத் திரும்பும் முன் அன்னை அபிராமியைத் தரிசனம் செய்ய திருக்கடவூர் வந்தார். கோயிலுக்குள் வந்த மன்னரை பக்தர்கள் வரவேற்று மரியாதை நிமித்தம் ஒதுங்கி அவர் தரிசனம் செய்ய வழி விட, இதுபற்றி ஏதும் அறியாத அபிராமி பட்டர் அம்பிகையின் திருச்சந்நிதியில் தன்னை மறந்த நிலையில் தியானத்தில் ஈடுபட்டிருந்தார்.  

சாக்தர்களுக்குப் பெளர்ணமி வழிபாடு மிகவும் முக்கியமானது. சாக்த வழிபாட்டில் ஆழ்நிலை செல்லும்போது புருவமத்தியில் ஓர் ஒளிப்பிழம்பு பூரணச் சந்திரமண்டலமாக தோன்றும். சந்திரமண்டலமத்யஸ்தா, சாருரூபா,சாருஹாஸா, சாருசந்த்ரகலாதரா, சராசரஜகந்நாதா என்ற லலிதா சகஸ்ரநாம மந்திரங்களுக்கு ஏற்றவாறு இவ்வழிபாடு அமையும். அந்த சந்திரபிம்பத்தில் அம்பிகையை மானசீகமாக ஆவாஹனம்செய்து மானஸ பூஜையை நிகழ்த்துவது மரபு. அவ்வாறே அபிராமி பட்டரும் தன் தியானத்தில் அம்பிகையாக ஜொலித்துக் கொண்டிருந்த அந்த சந்திரமண்டலத்தை தரிசித்துக் கொண்டிருந்தார்.

இதற்குள் அவருக்கு ஆகாத சிலர் அவரைப் பற்றித் தவறாக மன்னரிடம் சொல்லியிருந்தனர். அவரைப் பற்றி அறியாத அரசனும் பிறர் தனக்குக் கொடுக்கும் மரியாதையை இவர் கொடுக்கவில்லையென்பதால் அவர்களின் சொல்லை நம்பிவிட்டார். அபிராமி அம்மனை அகக் கண் குளிர தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் ஏதோ அரவம் கேட்க, தியானத்திலிருந்து விடுபட்டு திரும்பிய போது எதிரே மன்னர் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். 

"யார் நீ?' என்று மன்னர் கேட்க, அதற்கு பட்டர் தனது பெயரை கூறி, தான் அந்த கோயிலில் பஞ்சாங்கம் பார்ப்பவன் என்றும் கூறினார். உடனே மன்னர், அப்படியென்றால், இன்று என்ன திதி என்று கேட்க, அன்னை அபிராமி அம்மனின் பேரொளி முகத்தையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய மனதில் இன்னமும் அன்னையின் பேரொளி நீங்காமல் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருப்பதையே மானசீகமாக தரிசனம் செய்து கொண்டிருந்தவர், அன்றைய தினம் அமாவாசை என்பதை மறந்து, இன்று நிறைந்த பெளர்ணமி நாள் என்று கூறி விட்டார்.

அந்த தவறான பதிலைக் கேட்ட மன்னனின் கோபம் அதிகரிக்க, "இன்று இரவு பெளர்ணமி நிலவு தோன்றாவிட்டால் நீர் அக்னி குண்டத்தில் ஏற்றப்படுவீர்' என்று எச்சரிக்க, அப்பொழுதும் தன் நினைவுகளிலிலிருந்து மீளாத பட்டர், மன்னரிடம், பெளர்ணமி நிலவு தோன்றும் என்று உறுதி கூறினார். அமாவாசையன்று எப்படி நிலவு தோன்றுமென்று கருதிய மன்னர் கோபத்துடன் வெளியேற, அருகில் இருந்த சில நல்லவர்கள் பட்டரைச் சூழ்ந்து கொண்டு நிலைமையை விளக்கினர். 
அப்பொழுதுதான் அவருக்கு அன்றைய தினம் அமாவாசை என்பது தெரிந்தது. அன்னை அபிராமவல்லியின் அழகு பொங்கும் பொன் முகத்தை நீண்டநேரம் பார்த்த மதி மயக்கத்தில் தவறாக கூறி விட்டோமே என்று எண்ணி வருந்திய அபிராமி பட்டர்,  நாம் நாமாக ஏதும் சொல்லவில்லை. மாலை மங்கியது. இரவு நெருங்கியது. மன்னரின் ஆணைப்படி, பெரிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, அதன் மேல் 100 கயிறு பிரிகளைக் கொண்ட உறி அமைக்கப்பட்டது. இரவு துவங்கியதும் அபிராமி பட்டர் அம்பிகையின் திருச்சந்நிதிக்குச் சென்று தொழுதார். பின்னர் தானே அக்னிக்குண்டத்தில் ஏறி அமர்ந்தார்.  கீழே நெருப்பு பற்றவைக்கப்பட்டது.

"எல்லாம் நீயே என்று உன்னையே கதியென்றிருந்த எனக்கு நீ வைத்துள்ள இந்த சோதனையிலும் வெற்றி பெறுவேன் இதற்கெல்லாம் நான் கலங்கமாட்டேன். என்றும் நீயே என் அன்னை என்று, அன்னை அபிராமவல்லியை உளமாரத் துதித்த பட்டர், அந்த அபிராமவல்லியை புகழ்ந்து உரியில் இருந்தவண்ணம் அந்தாதி பாடத் தொடங்கினார். மக்கள் எல்லோரும் கூடி இதனை பார்த்துக் கொண்டிருக்க, தீயின் வெப்பத்தால் ஒவ்வொரு கயிறாக அறுபட்டுக் கொண்டே வந்தது. பட்டர் கலங்கவில்லை. 

அதுவரை பட்டரின் அழகிய பாவில் மூழ்கியிருந்த அம்பிகையின் திருவிழிகள் திறந்தன. பக்தனைக் காக்க திருவுளம் கொண்டாள். தன்னுடைய காதில் அணிந்திருந்த ஸ்ரீசக்ர ரூபமாகிய தாடங்கம் என்னும் திருத்தோட்டினை எடுத்து விண்ணில் வீசினாள்.  அது பூரண சந்திரனாக மாறிப் பிரகாசித்தது.  

நிலவே வரமுடியாத அந்த அமாவாசையில் திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள அபிராமி அம்பாளின் பேரருளால் அபிராமிப் பட்டர் என்ற பக்தரின் துன்ப துயரம் நீங்குமாறும் அவரது பக்தியின் சிறப்பு உலகத்திற்கு தெரியுமாறும் வான வெளியில் எழுந்த நிலவு பிரகாசித்தது. அது, பெளர்ணமி நிலவை விட அதிக ஒளியை கொட்டியது. கூடியிருந்த மக்களுக்கும் மன்னனுக்கும் பரவசத்தில் பேச நா எழவில்லை. அமாவாசை இரவு பெளர்ணமியாய் ஜொலிப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர். தனக்காக அமாவாசையை பெளர்ணமியாக்கிய அன்னை அபிராமவல்லியை கைகூப்பி வணங்கி ஆனந்த கண்ணீர் வடித்தார் அபிராமிபட்டர். அபிராமி பட்டரின் பெருமையை உணர்ந்து கொண்ட மன்னன் அவரைப் பணிந்து மன்னிப்பு வேண்டினார்.  

இன்றும் ஒவ்வோர் ஆண்டும் இத்திருக்கோயிலில் இந்நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தை அமாவாசையன்று அம்பிகையின் திருச்சந்நிதி புஷ்ப பந்தலாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்படும். காலையில் எல்லா மூர்த்திகளுக்கும் விரிவாக அபிஷேகம் நடைபெறும். இவ்வருடம் இத்திருநாள் 27.1.2017 அன்று திருக்கடையூரில் கொண்டாடப்படுகிறது.  

இந்நிகழ்ச்சிகளை தருமை ஆதீனகர்த்தர் அவர்களின் ஆசியுடன் அபிராமி சுந்தரராஜன் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ அபிராமி அம்மை அறக்கட்டளை சிறப்புடன் நடத்துகிறது. அபிராமி சுந்தரராஜன் அவர்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் இந்தியாவில் உள்ள பல திருக்கோயில்களில் இந்நிகழ்ச்சியை நடத்துகிறார். 

திருக்கடையூர் செல்ல முடியாதவர்கள் சென்னைக்கருகில் உள்ள சேலையூரில் 178, ஈஸ்வரன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அபிராமி அம்பிகை சமேத ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் திருக்கோயிலில் இந்நிகழ்ச்சியைக் கண்டு களிக்கலாம். திருக்கடவூர் போலவே இங்கும் தை அமாவாசையன்று அபிராமி அந்தாதி ஓதும் நிகழ்ச்சியும் புஷ்பாஞ்சலியுடன் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மெய்யன்பர்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடக்காததையும் நடத்திக் காட்டும் அருள்மிகு அபிராமி அன்னையின் திருவருள் பெறலாம்.
தொடர்புக்கு: 99404 35465. 
- ரஞ்சனா பாலசுப்ரமணியன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com