ஏழைகளுக்கு உதவி செய்வோம்!

இயேசு உவமைகளைக்கொண்டே மக்களிடம் போதகம் பண்ணினார். ஒரு முறை பொருளாசைக்காரராகிய பரிசேயருக்கு விளங்குமாறு
ஏழைகளுக்கு உதவி செய்வோம்!

இயேசு உவமைகளைக்கொண்டே மக்களிடம் போதகம் பண்ணினார். ஒரு முறை பொருளாசைக்காரராகிய பரிசேயருக்கு விளங்குமாறு ஒரு உவமையைச் சொன்னார். இந்த உவமை பரிசுத்த வேதாகமத்தில் லூக்கா 16:19-31 வரை இதனை பார்க்கலாம்  

ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் சுகபோகமாக வாழ்ந்து வருகிறான். இவருடைய வீட்டு வாசலில் லாசரு என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் வீட்டு வாயில் அருகே கிடந்தார். லாசருவின் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் உணவுத் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். கடைசியில் ஒருநாள் அந்த ஏழை இறந்தார். 

வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வந்தரும் ஒருநாள் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவரோ நரகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலைவில் ஆபிரகாமையும் அவரது மடியில் லாசருவையும் கண்டார்.

அப்போது அவர், "தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும். லாசரு தமது விரல் நுனியை நீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் வெந்து மிகுந்த வேதனையை அடைகிறேன்'' என்று உரக்கக் கத்தினார். அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் வேதனைப்படுபவனை உன் கண்கள் பார்க்கவில்லை. ஆனால் லாசரு இன்னல்களையே அடைந்தார், அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார், நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும், கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது'' என்றார்.

அதற்கு அந்த செல்வந்தன், "அப்படியானால் தந்தையே, எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்க லாசருவை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்''  என்றார். 

அதற்கு ஆபிரகாம், "அங்கே மோசேயும் தீர்க்க தரிசிகளும் அவர்களுக்கு உண்டு. அவர்களுடைய வார்த்தைக்கு கீழ்படியட்டும்'' என்றார். செல்வந்தரோ, "அப்படியல்ல தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்'' என்றார். "அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்'' என்று ஆபிரகாம் கூறினார்.

இந்த உவமையில் பணக்காரராயிருப்பது தவறல்ல, தான் மட்டும் நலமுடன் வாழ வேண்டும் என்று தன் அருகே இருந்த ஏழையின் கஷ்டங்களை தீர்க்கவில்லை. எனவேதான் நரகத்தில் தள்ளப்பட்டார். ஆகவே, இவ்வுலகில் இருக்கும் காலமட்டும் நம் கண்முன்னே காணப்படும் எழை எளியோருக்கு உதவுவோம். இறைவனின் ராஜ்யத்தில் நமக்கும் பங்கு கிடைக்கும்.
- ஒய்.டேவிட் ராஜா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com