குடமுழுக்கு காணும் கங்கைகொண்ட சோழபுரம்!

ராஜராஜ சோழன் தஞ்சையை சோழர்களின் தலைநகராக அமைத்து உலகம் போற்றும் ஒப்பற்ற பெருவுடையார் கோயிலைக் கட்டினான்
குடமுழுக்கு காணும் கங்கைகொண்ட சோழபுரம்!

ராஜராஜ சோழன் தஞ்சையை சோழர்களின் தலைநகராக அமைத்து உலகம் போற்றும் ஒப்பற்ற பெருவுடையார் கோயிலைக் கட்டினான் என்றால், அதற்கு நிகராக அவன் மைந்தன் முதலாம் இராஜேந்திர சோழனோ தனது கங்கை வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் ஊரை தலைநகராக அமைத்து, கலை காவியமாகத் திகழும் கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயிலையும் எடுப்பித்தான். இக்கோயிலைப்பற்றியும் ஊரைப்பற்றியும் கருவூர்த்தேவரின் திருவிசைப்பா, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி, ஒட்டக்கூத்தரின் மூவருலா ஆகிய இலக்கியங்களில் குறிப்புகளாகவும், பல்வேறு இடங்களில் கிடைக்கப்பெற்ற செப்பேடுகளிலும் காணப்படுகின்றன. 

சோழமன்னர்கள், பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், உடையார் பாளையக்காரர்கள் போன்றோர்கள் இக்கோயிலைப் போற்றியுள்ளதை இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களிலிருந்து அறியமுடிகிறது. இவ்வூரைச் சுற்றி காணப்படும் ஊர்களில் உள்ள கோயில்களில் சாளுக்கிய-கலிங்க-பாலர் கலைப் பாணியுடன் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயிலைச் சுற்றி அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அது வெளிப்படுத்தும் தகவல்கள் கங்கை கொண்ட சோழபுரத்தின் தொன்மைச் சிறப்புக்கு ஆதாரமாக விளங்குகின்றன. தமிழகக் கோயிற்கலை சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக கங்கை கொண்ட சோழபுரம் கோயில் விளங்குகிறது என்றால் அது மிகைப்படுத்திக் கூறுவது ஆகாது. இந்தியாவிலேயே மிகச் சிறந்த சிற்பக் கலைகள் மிகுந்த முக்கிய மூன்று தென்னிந்திய கோயில்கள், உலக அமைப்பான யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில் கங்கை கொண்ட சோழீச்சுரமும் ஒன்று என்பது பெருமைப்பட வைக்கிறது.

சுமார், 13.25 அடி உயரத்தில் பெரிய சுற்றளவுடன் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட லிங்க ஸ்வரூபமாக அருள்மிகு பிரகதீஸ்வரர் கடவுள் சிலையை காண தவம் செய்திருக்க வேண்டும்.  திருச்சுற்றில் உள்ள வடகைலாயப்பகுதியில் சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பெரியநாயகி அம்மன் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் அழகிய வடிவினைக் காணலாம். விசேஷ நாள்களில் ஸ்ரீ சக்கரத்திற்கு நவாவரண பூஜையும் திருவிளக்கு பூஜையும் நடப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இங்கு கொலு கொண்டிருக்கும் துர்கை மங்கள சண்டி மிகவும் சக்திவாய்ந்த தெய்வம் என்றும், ராஜேந்திரசோழன் இந்த அம்பாளிடம் தன் வாளை வைத்து வணங்கிவிட்டுத்தான் போருக்குச் செல்வார் என்றும் வரலாறு கூறுகிறது.

கருவறை தேவ கோட்டங்களில் காணப்படும் சிற்ப வடிவங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. நடனமாடும் கணபதி, தட்சிணாமூர்த்தி, அரிகரன், ஆடவல்லான், கங்காதரர், லிங்கோத்பவர், சுப்ரமணியர், காலாந்தகர், இரு தேவியருடன் பிரம்மா, காமதகன மூர்த்தி, சண்டேச அனுக்கிரகமூர்த்தி, ஞான சரஸ்வதி ஆகிய தெய்வவடிவங்களைக் கண்டு வணங்கலாம். மேலும் சூரிய பீடம், மகிஷமர்த்தினி வடிவம், செங்கமேட்டில் உள்ள காளி, கணக்குப்பிள்ளையார் போன்றவை வழிபாட்டு சிறப்பு உடையதாகத் திகழ்கின்றன.  

இக்கோயிலில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பு வாய்ந்தது. காஞ்சி மகாசுவாமிகளால் துவங்கப்பட்டு, சிறப்பாக ஆண்டு தோறும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனை குறைவில்லாமல் நடத்துவதற்கு ஏதுவாக ஸ்ரீ காஞ்சி காமகோடி அன்னாபிஷேகக் கமிட்டி என்ற பிரத்யேக அமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் ஆலய வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

வரலாற்றுச் சிறப்பும், வழிபாட்டுச் சிறப்பும் உடைய இத்திருக்கோயில் மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் போற்றிப் பராமரித்து வருவதுடன், தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உயிரோட்டத்துடன் நித்ய பூஜை முதலியன செய்யப்பட்டு வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகின்றது.

இக்கோயிலில் சுமார் 85 ஆண்டுகளுக்குப்பின் ஜீர்ணோத்தாரன மகாகும்பாபிஷேகம் பிப்ரவரி -2 ஆம் தேதி நடைபெறுகின்றது. பிரம்மாண்டமான யாகசாலைகள் அமைக்கப்பட்டு பூர்வாங்க ஹோமங்கள், பூஜைகள் ஜனவரி-27 இல் தொடங்குகின்றன. சிவநேயச் செல்வர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய விழா!  

திருச்சியிலிருந்து அரியலூர் வழியாக சிதம்பரம் செல்லும் சாலையில் 100 கி.மீ. தொலைவிலும்; சென்னை-குடந்தை சாலையில் மீன்சுருட்டி அடுத்து, ஜெயங்கொண்டம் வழியாகவும் இக்கோயிலை அடையலாம்.
தொடர்புக்கு: 94439 49692, 98401 33800.
- கி. ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com