துயர் தீர்க்கும் ஈஸ்வரன்!

புலியூர் என்ற பெயரில் உள்ள ஐந்து ஊர்கள் பெரும்பற்றப்புலியூர், பெரும்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திருஎருக்கத்தம்புலியூர் என்பனவாகும்.
துயர் தீர்க்கும் ஈஸ்வரன்!

புலியூர் என்ற பெயரில் உள்ள ஐந்து ஊர்கள் பெரும்பற்றப்புலியூர், பெரும்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திருஎருக்கத்தம்புலியூர் என்பனவாகும். புலிக்கால் முனிவரால் (வியாக்ரபாதர்) பூசிக்கப்பெற்றதால் புலியூர் என்றும், வேத ஓமங்களில் (வேள்விகளில்) சிறப்புற்றதால் "ஓமம் புலியூர்' எனப் பெயர் பெற்றது. இவ்வூர் பிற புலியூர்களிலிருந்து வேறுபாடறியும் பொருட்டு "ஓமம் ஆம்புலியூர் - ஓமமாம்புலியூர்' எனப்பட்டது. சம்பந்தர் பாடலில் ஓமமாம்புலியூர் என்றே வருகிறது. ஆனால் அப்பர் பாடலில் ஓமாம்புலியூர் என்று வருகிறது. இது தேவார பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில்  அமைந்துள்ள 31 ஆவது தலமாகும். 

இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்தத் தலம் என்றும் பிரணவப் பொருளுபதேசம் நடந்த தலமாதலின் ஓம்-ஆம்-புலியூர்  ஓமாம்புலியூர் என்றாயிற்று என்றும் கூறுவர்.

இறைவன் பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர் என்று வழங்கப்பெறுகிறார். இறைவியார் புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி என்று திருப்பெயர்கள் தாங்கியுள்ளார். 

தல மரம்: வதரி (இலந்தை). தீர்த்தம்: கொள்ளிடம், கெளரிதீர்த்தம் (கோயில் எதிரில் உள்ளது).

கிழக்கு நோக்கிய திருக்கோயிலில் ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையதாக விளங்குகிறது. எதிரில் கெளரி தீர்த்தமும் உள்ளது. அதன் கிழக்கு கரையில் தனியே ஒரு சிவாலயம் "வடதளி' என அழைக்கப்பெறுகின்றது. கோபுர வாயிலில் இடது புறம் விநாயகரும், வலது புறம் முருகனும் உள்ளனர். உள்ளே, சுவாமி சந்நிதி எதிரில் முகப்பு மண்டபம் அழகிய தூண்களுடன் காணப்படுகிறது. மண்டப சுவரில் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும், மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன. 

இறைவன் கிழக்கு நோக்கி சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் காட்சி தருகின்றார். அம்பிகை நின்ற கோலத்தில் தெற்கு நோக்கியபடி உள்ளார்.

இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகச்சிறப்புடையவராக விளங்குகிறார். குருமூர்த்தியாக உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி, இறைவன், இறைவி சந்நிதிகளின் நடுவில் உள்ள அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். கம்பீரமான பெரிய சிலா ரூபம் அதனால் இவர் "ராஜகுரு' எனவும் அழைக்கப்படுகிறார். 

பிரகாரத்தில் முதலில் அர்த்த மண்டப சுவரில் நடராசர் தெற்கு நோக்கியபடி உள்ளதை காணலாம். அருகில் விநாயகரும், மகாலட்சுமியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். அடுத்து கருவறை கோட்டத்தில் நின்ற நிலையில் விநாயகரும், தென்முக கடவுளும் லிங்கோத்பவரும், பிரம்மனும், துர்க்கையும் உள்ளனர். வடபுறம் ஒரு வேம்பின் கீழ் நாகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள சிறு மண்டபத்தில் பைரவர், சனீஸ்வரன், சூரிய சந்திரர்கள் அமைந்துள்ளனர். கோயிலின் எதிரில் உள்ள குளத்தில் முன்னொருகாலத்தில் சதானந்தன் என்ற மன்னன் நீராடி தனக்கு ஏற்பட்ட குட்ட நோய் நீங்க பெற்றதாக வரலாறு உண்டு.

இந்த  குளக்கரையின் கீழ் கரையில் வடதளி நாதர் கோயில் உள்ளது இதுவே பாடல் பெற்ற தலம் எனவும் கூறுவர். இங்கு பெரிய உருவில் ஒரு லிங்க வடிவமும் தெற்கு நோக்கிய அம்பிகை ஒருவரும் உள்ளனர். வேறு சந்நிதிகள் இங்கு இல்லை. 

இத் திருக்கோயிலில் சோழமன்னரில் மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரின் காலத்து கல்வெட்டு ஒன்றும் பல்லவரில் சகல புவனசக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்க தேவருடைய காலத்துக் கல்வெட்டு ஐந்தும் ஆக ஆறு கல்வெட்டுகள் இருக்கின்றன. சோழ மன்னர் காலத்து கல்வெட்டில் இறைவரின் திருப்பெயர் வடதளி உடையார் என்றும், பல்லவர் காலத்துக் கல்வெட்டில் வடதளி உடைய நாயனார் எனவும், வடதளி உடையார் வரும் துயரம் தீர்த்த நாயனார் எனவும் கூறப்பெற்றுள்ளது. இங்கு குறித்தபடி, சோழர் பல்லவர் காலங்களில் இவ்வூர் "வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிருமதேயம், ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழ சதுர்வேதிமங்கலம்' எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இத்தலத்திற்கு அருகிலேயே தேவாரப்பாடல் பெற்ற மூன்று திருத்தலங்கள் அமைந்துள்ளன.

விருதராசபயங்கர வளநாட்டின் உட்பகுதியாய் அடங்கிய நாடுகளில் காநாடு என்பது ஒன்றாகும். அது மேற்காநாடு, கீழ்க்காநாடு என்னும் இருபகுதிகளை உடையது, இவற்றுள் ஓமாம்புலியூர், திருக்கடம்பூர் இவைகள் மேற்காநாட்டைச் சேர்ந்தவனவாகும்.  ஓமாம்புலியூர்க்குக் கிழக்கேயுள்ள திருக்கானாட்டு முள்ளூர், கீழ்க்காநாட்டைச் சேர்ந்ததாகும். 

ஓமாம்புலியூர்க்கு அண்மையில் ஆதனூர் என்னும் ஊர் இருக்கிறது. இதுவே திருநாளைப் போவார் பிறந்த தலமாகும். இவ்வூரை சேக்கிழார் மேற்காநாட்டு ஆதனூர் என்று குறித்திருப்பதை அறிய இவ்வூர்க் கல்வெட்டுப் பெரிதும் பயன்படுகிறது. இங்கு மாசி மாதம் தீர்த்தவாரி உற்சவம் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. 
- கடம்பூர் விஜயன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com