பராபரத்தை பரவிய பரம புருஷர்!

புலமை நலங்கனிந்த சிவஞானச் செல்வர்களுள் தாயுமானவரும் ஒருவர். திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாத்ருபூதேஸ்வர சுவாமியின் திருவருளால் ஞானக் குழந்தையாக
பராபரத்தை பரவிய பரம புருஷர்!

புலமை நலங்கனிந்த சிவஞானச் செல்வர்களுள் தாயுமானவரும் ஒருவர். திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாத்ருபூதேஸ்வர சுவாமியின் திருவருளால் ஞானக் குழந்தையாக வேதாரண்யத்தைச் சேர்ந்த கேடிலியப்பர் கஜவல்லி அம்மை என்னும் தம்பதிகளுக்கு பிறந்தவர். அருளாளராக வளர்ந்த அவரை மலைக்கோட்டை இறைவனின் பெயரைக் கொண்டே தாயுமான சுவாமிகள் என அனைவராலும் போற்றப்பட்டார். இவர் இல்லத்தில் இருந்த காலத்திலும் துறவறம் மேற்கொண்ட நிலையிலும் நடந்த இரு நிகழ்ச்சிகளைக் காண்போம்.

நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் தம் தந்தையின் வழியில் திருச்சியில் அந்தக்காலத்தில் அரசாங்கத்தின் பெரியபதவியான சம்பிரிதி என்று சொல்லப்படும் அதிகாரியாய் வாழ்க்கையை நடத்தி வந்தார். (சம்பிரதி என்றால் நாட்டை ஆளும் அரசனுக்கு நிதி மற்றும் நிர்வாகத்தில் அறிவுரை கூறி அவரது பிரதிநிதியாகச் செயல்படுவர் என்று அர்த்தம்) ஒரு நாள் இவர் பனையோலையில் பதிவு செய்து வைத்திருந்த அரிய அரசாங்கப் பத்திரம் ஒன்றை ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருந்தார். அப்போது திடீரெனத் தம்முடைய இரண்டு கரங்களாலும் அந்த ஓலையை கசக்கித் துகள் துகள்களாகப் பாழ்படுத்தினார். 

அருகில் இருந்த இதர காரியஸ்தர்கள் இச்செயலைப்பார்த்து வியப்படைந்து காரணம் கேட்டனர். அதற்கு தாயுமானவர். திருவானைக்கா அம்பிகை அகிலாண்டேஸ்வரியின் துகிலில் வீழ்ந்து பற்றிய கற்பூரத்தீயை கசக்கி அணைக்க முயன்றேன்: அதனால் என்னையறியாது என் கையிலிருந்த இந்த அரிய அரசாங்கப் பத்திரம் பாழ்படுத்தப்பட்டது, அதைக்குறித்து நான் மிகவும் வருந்துகிறேன் என்றார்.

அதே சமயம் திருவானைக்காவிலிருந்து ஒரு செய்தி அரண்மனைக்கு வந்தது. அர்ச்சகர் கற்பூர தீபாராதனை பண்ணும் பொழுது, நெருப்பு தவறி அம்பிகையின் ஆடையில் வீழ்ந்து தீப்பற்றிக் கொண்டதாகவும், ஆயினும் அது எளிதில் அணைக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. 

இதனால் தாயுமானவரின் புகழ் ஓங்கியது. அவ்வமயம், நாட்டை ஆண்ட அரசியும் இவரை தகுந்த ஆசனத்தில் அமரச்செய்து இவருடைய பக்தியையும், பரநாட்டத்தையும் பெரிதும் பாராட்டினார்.

பின்னாளில் அரச பதவியைத் துறந்து துறவியாகமாறி, கோவணத்தை மட்டும் தரித்துக் கொண்டு பிச்சை எடுத்துப் புசித்து, இறைச் சிந்தனையிலேயே மூழ்கியிருந்தார் தாயுமானவர். 

குளிர்காலத்தில் ஒருநாள் அதிகாலையில் போர்வையேதும் இல்லாது நடமாடிக்கொண்டிருந்த அவரைக் கண்ணுற்ற ஓர் அன்பர் தன்னிடம் உள்ள உயர்ந்த காஷ்மீர் சால்வையை அவர் மீது போர்த்தினார். சில தினங்களில் அதே சால்வை கட்டழகு வாய்ந்த வேலைக்காரி ஒருத்தி அணிந்து கொண்டு செல்வதைக் கண்ட சிலர், தாயுமானவரை சந்தேகக் கண்களுடன், வினவினர். 

அதற்கு அந்த அருளாளர், நான் வணங்கும் தெய்வமாகிய அகிலாண்டேஸ்வரி, அன்றொரு நாள் குளிரில் நடுங்கிக்கொண்டு வீதியில் வந்தாள். அந்த அம்பிகைக்கு அந்தச் சால்வையை சார்த்தினேன் என்றார். பார்க்கும் இடமெங்கும் தேவியையே காணும் தெய்வீகப் பார்வையை உடையவர் தான் என்பதை நிரூபணம் செய்தவர் தாயுமானவர்.

பரிபூரணப் பொருளைத் தாயுமானவர் தேடிச்செல்லுங்கால், இறைவன் அவருக்கு மலைக்கோட்டையில் மௌனகுருவின் சந்திப்பை ஏற்படுத்தினார். "சிந்தையறச் சும்மா இரு' என்று அவர் கூறிய உபதேசமொழியே தாயுமானவரின் பல பாடல்களுக்கு பீஜமந்திரமாக (விதை, வேர்) அமைந்திருக்கிறது என்பது பக்திபூர்வமாக அப்பாடல்களை ஓதுகிறவர்களுக்குத் தெளிவாக விளங்கும்.

சான்றோர்கள் சாதாரணமாக கையாளுகிற முறைப்படி தாயுமான சுவாமிகளும் தமிழ்நாட்டிலுள்ள சில புண்ணியத் தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு பக்தி நெறியைப் பரப்பினார். ராமேஸ்வரத்தில் இருக்கும்போது அங்கு எழுந்தருளியிருக்கும் பர்வதவர்த்தனி அம்மனை போற்றி இவர் பாடியுள்ள பாடல்கள் ஆத்ம சாதகர்களுக்கு என்றென்றும் அருள்விருந்தாகும்.

சமய நுணுக்கமும் சமரசப் பொறுமையும் கொண்டன தாயுமானவர் பாடல்கள். பணிந்த அன்போடும், தணிந்த உணர்வோடும் திகழுபவை அவருடைய பாடல்கள் "எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே!' என்பதும் இவருடைய பாடல் வரிகள் ஆகும். 

இவர்தம் பாடல்களும், தலைப்புகளும் (56 தலைப்புகளில் 1452 பாடல்கள்) மாணிக்கவாசகரின் திருவாசகத்தைத் தழுவியே அமைந்துள்ளனவாகக் கருதப்படுகின்றன. கடவுள் ஒன்று. மதங்கள், மதத்தத்துவங்கள் எல்லாம் ஒன்று. வீண் சண்டைகள் வேண்டாம். எல்லோரும் நன்னெறியில் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்த எளிய தமிழில் பல இனிய பாடல்கள் இயற்றியுள்ளார் தாயுமானவர். திருக்குறள், திருமந்திரம், தேவாரம் முதலிய நூல்களின் கருத்துகளும், சொற்களும் இவருடைய படைப்புகளில் இடம் பெற்றுள்ளன.

சுவாமிகள் வடமொழியிலும் பெரும் விற்பன்னராகத் திகழ்ந்தார். ஒரு தைமாதம் விசாக நட்சத்திரன்று (1783-இல்) ஸ்ரீ தாயுமான சுவாமிகள் மகாசமாதி அடைந்தார். ராமநாதபுரத்தில் லட்சுமிபுரம் பகுதியில் வெளிப்பட்டினத்தில் உள்ள இவருடைய சமாதித் திருக்கோயில் தற்போது திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. 

சமாதிவளாகத்தில் பிரதி விசாக நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடும், பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் ஸ்ரீ தாயுமான சுவாமி பாடல்கள், திருவாசகம் ஓதுதல் ஆகியன நடைபெறுகின்றன.

ஸ்ரீ தாயுமான சுவாமி தபோவனத்தில், எதிர்வரும் ஜனவரி 22 ஆம் தேதி ஞாயிறு அன்று (தை 9- விசாகம்) மகானுடைய குருபூஜை விழா சிவநாமஜபம், தாயுமான சுவாமிகள் பாடல் சமர்ப்பணம், மஹேஸ்வர பூஜை, சான்றோர்களின் சமயச்சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் போன்ற வைபவங்களுடன் நடைபெறுகின்றது. 

முதல் இரண்டு தினங்கள் தாயுமானவர் பாடல் முற்றோதுதல் நடைபெறும். தொடர்ந்து பிப்ரவரி 9- ஆம் தேதி வியாழனன்று ஸ்ரீ தாயுமானவர் சுவாமி கோயில் கும்பாபிஷேகமும், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் பவளவிழா நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. யாக சாலை பூஜைகள் பிப்ரவரி 8- ஆம் தேதி தொடங்குகிறது. 
தொடர்புக்கு: 94438 53033 / 94424 62468.
- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com