பிஸ்மியில் துவங்கி துலங்கு

இறைவனைத் துதித்து துவக்கும் எச்செயலும் எளிதில் நினைத்தபடி நிறைவேறி எண்ணிய எண்ணியாங்கு எய்தி எண்ணற்ற பயனைப் பெறுவது அனைவரும் அறிந்த அனுபவ உண்மை.
பிஸ்மியில் துவங்கி துலங்கு

இறைவனைத் துதித்து துவக்கும் எச்செயலும் எளிதில் நினைத்தபடி நிறைவேறி எண்ணிய எண்ணியாங்கு எய்தி எண்ணற்ற பயனைப் பெறுவது அனைவரும் அறிந்த அனுபவ உண்மை. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம் என்பதின் சுருக்கு சொல்லே பிஸ்மி, பிஸ்மில்லாஹ். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் அருட்பெயரால் ஆரம்பிக்கிறேன் என்பது முழு சொற்றொடரின் பொருள்.

துவக்கம் துலங்கின் முடிவு விரும்பிய வண்ணம் அமையும். கடைக்காரர்கள் கடை திறந்ததும் முதல் வியாபாரத்தை ரொக்க விற்பனையில் துவக்குவர். கடனின்றி கடன் கொடுத்து காசு வாங்கும் சிரமம் இன்றி சீரான விற்பனைக்குச் சீரான துவக்கம் என்று கூறுவர். அரசு பொருள்களில் அரச முத்திரை இடுவது போல நம்முடைய செயலின் வெற்றிக்கு அல்லாஹ்வின் முத்திரை பிஸ்மில்லாஹ் என்னும் ஆரம்பம்.

அல்லாஹ் என்னும் திருப்பெயர் இறைவனின் இணையற்ற தன்மைகள் அனைத்தையும் இணைத்து முழுமையாய் காட்டும் பெயர். இப்பெயரால் பிஸ்மி சொல்லி துவங்கும் எச்செயலும் முழுமை பெறும். பிஸ்மில்லாஹ் என்னும் சொல்லின் முதல் எழுத்தான பே-யோடு அல்லாஹ்வைச் சேர்த்து பில்லாஹி என்ற இணைப்பு அடியான் அல்லாஹ்விற்குப் பணியும் ஆரம்ப நிலையைக் காட்ட பிஸ்மில்லாஹ் என்று ஆரம்பிக்கிறது. அடுத்து வரும் ரஹ்மான், ரஹீம் என்னும் சொற்கள் ரஹம்-உள்ளம் மென்மையானது என்ற மூல சொற்களிலிருந்து பிறந்தவை. ரஹ்மான் என்பது புவியில் வாழும் அனைவருக்கும் பொதுவான ஐம்பூதங்களையும் வழங்குபவன் அல்லாஹ். இந்த ஐம்பூதங்களின் பயனை அல்லாஹ் மக்களுக்கு நேராக வழங்குவதை ரஹ்மானிய்யத் என்று கூறுவர். ரஹீம் என்னும் சொல் சிலருக்குச் சில சிறப்புகளை வழங்கி அவற்றின் பயனை ஒரு மனிதனிடமிருந்து மற்றவருக்குக் கிடைக்க செய்வதை ரஹீமிய்யத் என்று கூறுவர்.

உலகில் மக்கள் புரியும் அநீதிகளுக்கு அளவில்லை. ஆயினும் அல்லாஹ் மக்களுக்கு மாறாது அருள்புரிந்து கொண்டிருக்கிறான். இதனையே இறைமறை குர்ஆனின் 7-156 ஆவது வசனம், ""என் அருள் சர்வ பொருள்களின் மீதும் பரவி உள்ளது"" என்று கூறுகிறது. குற்றம் புரிவோருக்கும் நன்றி மறந்தோருக்கும் நற்கிருபை செய்பவன் அல்லாஹ் என்பதையே இவ்வசனத்திலுள்ள அர் ரஹ்மான் என்ற சொல் குறிக்கிறது. எல்லாருக்கும் எல்லாமும் இம்மை மறுமை ஈருலக வாழ்விலும் எல்லையின்றி வழங்குபனான அல்லாஹ் நிகரற்ற அன்புடையோன் என்பதையே அர்ரஹீம் என்னும் சொல் குறிக்கிறது. இறைவனின் 99 திருப்பெயர்களில் அல்லாஹ், ரஹ்மான், ரஹீம் என்ற மூன்று பெயர்களும் உண்டு. அல்லாஹ் என்பது தாத்தி. ரஹ்மான், ரஹீம் என்பவை ஸிபாத்தி. தாத்தி என்பது இயற்பெயர். ஸிபாத்தி என்பது இயற்பெயருக்குரியவரின் சிறப்பினைக் குறிப்பது. நூல்-தப்ஸீல் கபீர், தப்ஸீர் அஜீஸி.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற சொற்றொடர் முதலில் ஆதம் நபி அவர்களுக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆதம் நபி என் சந்ததியினர் இதன் மீதிருக்கும் வரை நரக நெருப்பில் வீழ்த்தப்பட மாட்டார்கள் என்றறிந்ததாக கூறினார்கள். நாசகார நம்ரூது இப்ராஹீம் நபியை நெருப்பு குண்டத்தில் எறிய கவண்கல் பட்டைக்குள் வைத்திருந்த பொழுது பிஸ்மி சொற்றொடர் அவர்களுக்கு அருளப்பட்டது. இச்சொற்றொடரை ஓதியதால் இப்ராஹீம் நபிக்கு நெருப்பும் குளிர்ந்தது. பின்னர் மூசா நபியும் இச்சொற்றொடரை ஓதி அவர்களைப் பின்பற்றியோரை அழைத்துக் கொண்டு நைல் நதியைக் கடந்தார்கள். அவர்களைத் துரத்தி வந்த பிறழ்நெறியன் வெறியன் பிர்அவ்னையும் அவனின் படைகளையும் நைல் நதி விழுங்கியது. சுலைமான் நபிக்குப் பிஸ்மி சொற்றொடர் அருளப்பட்ட பொழுது வானவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சுலைமான் நபி அவர்களின் அரசு பூரணத்துவம் பெற்றதாக வாழ்த்தினர். சுலைமான் நபி ஸபா நாட்டு அரசி பல்கீஸுக்கு எழுதிய மடலை பிஸ்மி சொற்றொடரில் துவக்கினார்கள். இச்செய்தி குர் ஆனின் 27-30 ஆவது வசனத்தில் கூறப்படுகிறது. பிஸ்மி சொற்றொடரில் பத்தொன்பது எழுத்துகள் உள்ளன.

நூஹ் நபியும் அவர்களைப் பின்பற்றியோரும் வெள்ளப் பிரளயத்தில் இருந்து தப்ப கப்பலில் ஏறும்பொழுது பிஸ்மி சொல்லி ஏறியதால் கப்பல் பத்திரமாக ஜூது மலையில் கரை சேர்ந்தது. இஸ்லாமிய எதிரிகள் காலீத் பின் வவீத் (ரலி) அவர்களிடம் நஞ்சைக் குடிக்க சொன்ன பொழுது அந்நபி தோழர் பிஸ்மி சொல்லி குடித்ததால் நஞ்சு கிஞ்சிற்றும் அவர்களைக் கொல்லவோ செயல் இழக்கவோ செய்யவில்லை. எதிரிகள் இல்ஸôத்தை ஏற்றனர். ரோமாபுரி மன்னர் ஹிக்கலின் தலைவலி நீங்க கலீபா உமர் (ரலி) ஒரு தொப்பியை அனுப்பினார்கள். தொப்பியைத் தலையில் அணிந்து இருக்கும் பொழுது தலைவலி இல்லை. தொப்பியைக் கழற்றினால் தலைவலி வந்தது. மன்னர் ஹிக்கல் தொப்பியைச் சோதனை செய்தபொழுது தொப்பியில் பிஸ்மி எழுதிய தாள் தைக்கப்பட்டிருந்தது.

பிஸ்மி சொல்லி துவக்கும் செயல்கள் வெற்றியுறும். பிஸ்மி சொல்லாது செய்யும் செயல்கள் தோல்வியுறும். சவாரி செய்ய குதிரை, ஒட்டகங்களில் ஏறி அமரும் முன்னும் போக்குவரத்து ஊர்திகளில் புறப்படும் முன்னும் பிஸ்மி சொல்லி பயணத்தை துவக்குவது ஆபத்தில்லாத பயண ஆரம்பம். பிஸ்மி சொல்லி உண்ணும் உணவு உடலுக்கு நன்மை பயக்கும். பிஸ்மி சொல்லி உட்கொள்ளும் மருந்து உடனே நோயை நீக்கும். மூசா நபி வயிற்றுவலி ஏற்பட்டு இறைவனிடம் முறையிட்டார்கள்: இறைவன் காட்டிய மரத்தின் இலையைப் பறித்து பிஸ்மி சொல்லி தின்றார்கள்: வயிற்றுவலி நீங்கியது. சிலகாலம் கழித்து மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டபொழுது குறிப்பிட்ட மர இலையைப் பறித்து தின்றும் வலி தீரவில்லை. மூசா நபி இறைவனிடம் முறையிட்டார்கள். பிஸ்மி சொல்ல மறந்ததை இறைவன் நினைவூட்டினான். மூசா நபி அதே இலையை பிஸ்மி சொல்லி சாப்பிட்டார்கள். நோய் நீங்கியது. ஹராமான, தடுக்கப்பட்ட செயல்களில் ஈடுபடும் பொழுது பிஸ்மி சொல்லி துவங்கினாலும் அச்செயல்கள் வெற்றி பெறாது. 

"உங்கள் இறைவனின் திருப்பெயரைக் கொண்டு ஓதுவீராக. அவனே உங்களைப் படைத்தவன்" என்ற 96-1 ஆவது வசனமே வள்ளல் நபி (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் முதன் முதலில் அறிவித்த பிஸ்மி சொல்லி துவங்க சொன்ன, துவக்கி வைத்த முதல் குர் ஆன் வசனம். 

மனைவியோடு தாம்பத்திய உறவுக்கு முன் பிஸ்மி சொல்லி சாத்தானை விட்டும் விலகி இருக்க இறைவனின் பாதுகாப்பை நாடினால் பிறக்கும் குழந்தைகளும் சாத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பைப் பெறுவர் என்ற பெருமானார் நபி (ஸல்) அவர்களின் அருள்மொழியை அறிவிப்பவர்-இப்னு அப்பாஸ் (ரலி) நூல்-புகாரி, முஸ்லீம், ஆபூதாவூத், திர்மிதீ.

குழந்தை பருவத்தில் பாசநபி (ஸல்) அவர்களின் பராமரிப்பில் வளர்ந்த அம்ரு பின் அபீஸலமா (ரலி) அவர்களுக்கு பிஸ்மில்லாஹ் கூறி உணவு உண்ண துவங்க வேண்டும் என்று கேண்மை நபி (ஸல்) அவர்கள் கற்பித்ததை அம்ருபின் அபீஸலமா (ரலி) கவனமாய் கூறுவது புகாரி, முஸ்லிம் நூல்களில் உள்ளது. இஸ்லாமிய விருந்துகளில் விருந்தளிப்பவர் பிஸ்மி சொல்லி விருந்தாளிகளைச் சாப்பிட சொல்லும் பழக்கம் இன்றும் நிலவுகிறது.

நாம் நாடியது நாடியபடி நன்மையில் நடக்க நாளும் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்க செல்லும் வரை செய்யும் செயல்களைப் பிஸ்மி சொல்லி துவக்குவோம். இஸ்முல் அஃலம் (அழகிய திருப்பெயர்) அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com