மலேஷியாவில் ஸ்ரீ மகா மாரியம்மன்!

மலேஷியாவின் சிரம்பான் நகரில் புக்தி திம்போ என்ற இடத்தில் 127 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது.
மலேஷியாவில் ஸ்ரீ மகா மாரியம்மன்!

மலேஷியாவின் சிரம்பான் நகரில் புக்தி திம்போ என்ற இடத்தில் 127 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம், இந்தியாவிலிருந்து ரயில்வே பணி செய்வதற்காக முன்பு மலேசியா சென்று அங்கு தங்கிய தமிழர்களின் பெரும் பங்களிப்புடன் அமைக்கப்பட்டது. இங்கு தன்னை வழிபடும் பக்தர்களுக்கு மங்கலம் அருள்பவளாக விளங்குகிறாள் ஸ்ரீ மகாமாரியம்மன்!

கோயிலின் முகப்பில் உள்ள வளைவின் வழியே உள்ளே சென்றால், அம்மன் பச்சை வண்ணப் பட்டாடை உடுத்தி காட்சி தருகிறாள். ஆலயத்தை சுற்றி வரக்கூடிய பிரகாரம் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாலயத்தில் விநாயகர், சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியே சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சமயம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெறவும் அன்னம்பாலித்தல் நடைபெறவும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலில் நித்திய பூஜைகள் நடைபெற ஏதுவாக சிவாசாரியார் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நாள்களில் சிறப்பான முறையில் 108 வலம்புரிச் சங்காபிஷேகம் நடைபெறும்.

மார்கழி மாதத்தில் திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி , திருவாதிரை, ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இங்குள்ள இந்திய வம்சாவளித் தமிழ்க்குடும்பங்கள், கோயிலில் நடைபெறும் விழாக்களுக்கான உதவிகளைத் தாராளமாகச் செய்து விழாக்களைச் சிறப்புற நடத்துகின்றனர்.

ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் பத்துநாள் ‘கொடிமரத்திருநாள்’ சிறப்பானது. இவ்வாண்டு, 21.6.2017} 30.6.2017 வரை இந்த கொடிமரத்திருநாள் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் 9 ஆம் நாள் அன்று தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறும். அன்றைய தினம், யாக பூஜை, சிறப்பு பூஜைகள், கொடிமர பூஜை, வசந்த மண்டப பூஜை, குங்கும அர்ச்சனை, அம்மன் உலா தரிசனம் முதலியவை நடைபெறும்.

மேலும், அன்றைக்கு நடைபெறும் தீர்த்தத் திருவிழாவின் போது ஏராளமான பெண்கள் கலந்து கொள்வர். இவ்விழாவில் நாள்பூஜை, கொடிமரப்பூஜை, அபிஷேகம், பேரிதாடனம் (கணபதி தாளம்), சூர்ண உற்சவம் (திருப்பொற்சுண்ணம் இடித்தல்) சுவாமி வீதி உலா தரிசனம், வெளிவீதி உலா, தீர்த்தமாடுதல், மஹாபூர்ணாகுதியாக உத்வாகனம், மகாஅபிஷேகம், அருள்பிரசாதம், அன்னதானம் முதலியன மிகுந்த பக்தியுடன் நிகழும்.

இந்த அம்மன் ஆலயத்திலேயே பெரும் பொருள் செலவில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சந்நிதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து சந்நிதி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நூற்றாண்டுப் பழைமை வாய்ந்த, ஸ்ரீ மகா மாரியம்மன், மலேஷியா நாட்டின் "சிரம்பான்' பகுதித் தமிழ் மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றது.
-முனைவர் ச. சுப்புரெத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com