வரங்களை அள்ளித் தரும் மாணிக்க விநாயகர்!

வரங்களை அள்ளித் தரும் மாணிக்க விநாயகர்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ளது. "வடமாத்தூர்'. இங்கு அற்புதமான வடிவில் அமைந்துள்ளது மாணிக்க விநாயகர் திருக்கோயில்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ளது. "வடமாத்தூர்'. இங்கு அற்புதமான வடிவில் அமைந்துள்ளது மாணிக்க விநாயகர் திருக்கோயில்.

சேயாறு: ஜவ்வாது மலையில் தோன்றி திருவண்ணாமலை மாவட்டத்திற்குப் பாய்ந்து வளம் சேர்க்கும் ஆறாகத் திகழ்வது, சேயாறு. இது பாலாற்றின் துணை ஆறு! இந்த சேயாறு தோன்றியது குறித்து புராணக்கதை உண்டு. முருகப்பெருமான் தன் அன்னை பார்வதிக்காக நீரூற்று தோன்றிட அம்பெய்தி உருவாக்கிய ஆறாகும். இத்தலத்தில் சுயம்புவாகத் தோன்றி அருள் வழங்குகிறார் அருள்மிகு மாணிக்க விநாயகர்.

ஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய ஆலயம், எளிய நுழைவுவாயிலைக் கொண்டு விளங்குகின்றது. வாயிலின் மேற்பகுதியில் விநாயகர், சிவபெருமான், முருகன் என சுதை வடிவங்கள் அழகுறக் காட்சி தருகின்றன. உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சி தர, நாம் மேலும் உள்ளே நுழைகின்றோம்.

கருங்கல் கூரை கொண்ட கருவறை முன்மண்டபத்தை அடுத்து இடதுபுறம் எளிய வடிவில், அழகுறக் காட்சி தருபவர் சுயம்பு மூர்த்தியான மாணிக்க விநாயகர். இவரே கல்லில் இருந்து பொலியாமல் தன் உருவத்தினை மெல்ல மெல்ல வெளிப்படுத்தி இன்று தன் சுய உருவைக் காட்டி அருள் வழங்கி வருகின்றார்.

நடு நாயகமாக இறைவன் மதுரநாதீஸ்வரர் புதுப்பொலிவோடு கிழக்கு முகமாய் வாயிலை நோக்கி காட்சி தருகின்றார். கருவறைச் சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, கஜலஷ்மி, சண்டிகேசுவரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.

அன்னை மரகதாம்பிகை சந்நிதி கி.பி. 1921 இல் கட்டப்பட்டு, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அன்னை மரகதாம்பிகை நின்ற கோலத்தில் எளிய வடிவுடன் அருளாசி வழங்குகின்றார். அம்மன் சந்நிதியின் இடதுபக்கமாக உற்சவமூர்த்திகள் காப்பறை அமைந்துள்ளது. மாணிக்க விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான், சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகர், மரகதாம்பிகை என உற்சவர் திருமேனிகள் அழகுற அமைந்துள்ளன.

ஈசான்ய மூலையில் நவக்கிரக சந்நிதியும், அதன் அருகே மேற்கு பார்த்த காலபைரவர் சந்நிதியும் அமைந்துள்ளன.

தலவரலாறு: சுமார் ஐந்து தலை முறைகளுக்கு முன்பு இவ்வூரில் வாழ்ந்த சீதாராம ரெட்டியார் என்ற அடியார்க்குத் தனது ஊரில் வழிபட ஏதும் ஆலயம் இல்லையே என்ற குறை இருந்து வந்தது. அதனால் நெடுந்தொலைவில் இருந்து ஒரு விநாயகர் சிலையை எடுத்து வந்து, தன் வீட்டின் அருகே வைத்திருந்தார். அவரையே மூலவராக்கி ஆலயம் எழுப்பவும் முடிவு செய்திருந்தார்.

ஆனால் அன்று இரவு அவருக்கு கனவு தோன்றியது. அதில் விநாயகப் பெருமானே காட்சி தந்து, "உன் ஊரிலேயே பல நூறு ஆண்டுகளாக நான் மண்ணில் மறைந்திருக்கிறேன். என்னை எடுத்து நீ ஆலயம் எழுப்பு. அதில் நான் வெளிப்படுவேன். நான் இருக்குமிடம் நீ ஏர் உழும்போது வெளிப்படும்' என்று கூறி, தான் இருக்கும் அமைவிடத்தினையும் சுட்டிக் காட்டி மறைந்தார் விநாயகப் பெருமான்.

திடுக்கிட்டு எழுந்த ரெட்டியார், விடிந்ததும், ஏர்க்கலப்பையைத் தூக்கிக்கொண்டு மாடுகளைப் பூட்டி வயலை உழ ஆரம்பித்தார். நெடுநேரம் உழுதும் ஏதும் தென்படவில்லை. என்றாலும், மனம் தளராமல் உழுதுகொண்டே வந்தார். அப்போது அந்த ஆச்சரியம் வெளிப்பட்டது. ஏர்க்கலப்பையை மூன்று கருங்கற்கள் தடுத்து நிறுத்தின. அதைத் தோண்டி எடுத்தபோது அவற்றில் இரண்டு உருண்டை வடிவிலும், மற்றொன்று சிறிய மூஞ்சூறு வடிவிலும் காட்சி தந்தன. இதனால் மனம் மகிழ்ந்த அடியார், அதனை தன் இல்லத்திற்குக் கொண்டு வந்தார். அவருக்கு மீண்டும் குழப்பம். உருவமற்ற இதில் எதை விநாயகராக பாவிப்பது என்றசிந்தனையிலேயே அன்றிரவு கண் அயர்ந்தார்.

மீண்டும் விநாயகப் பெருமான், அவர் கனவில் தோன்றி, உன் விருப்பப்படியே ஏதேனும் ஒரு கல்லை மூலவராக்கிக் கொள். அதிலிருந்து நான் என் உருவத்தில் வெளிப்படுத்துவேன் என்று கூறி மறைந்தார். அதன்படியே மறுநாள் தன் வீட்டின் அருகே கிழக்கு நோக்கியவாறு தனக்குப் பிடித்த அந்த உருண்டைக் கல்லையும், அதன் எதிரே சிறிய மூஞ்சுறு கல்லையும் நிறுவினார். மற்றொரு கல்லைத் தனியே ஆலயத்திற்குள் வைத்திருந்தார்.

காலச் சக்கரத்தில் அந்த உருண்டைக் கல்லில் இருந்து விநாயகரின் உருவம் வெளிப்படத் தொடங்கியது. அது முதல் அடியார் மட்டுமே வழிபட்டு வந்த இந்த விநாயகர், அப்பகுதி மக்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

இத்திருக்கோயில் பழைய கட்டுமானங்களை மாற்றாமல், புதிய கட்டுமானப் பகுதிகளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு, இக்கோயில் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடந்தேறியது.இவ்வாலயம் அர்ச்சகருக்குத் தனி வீடு, அன்னதானம் செய்ய மண்டபம், நந்தவனம், வாகனங்களைப் பராமரிக்க தனி வாகனக் கொட்டகை என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி தன்னிறைவு பெற்று திகழ்கின்றது.

தோஷம் நீக்கும் பரிகாரத்தலம்: மூன்று சதுர்த்திகள், இத்தலம் வந்து மாணிக்க விநாயகரை வழிபட்டுச் சென்றால் செவ்வாய் தோஷம், ராகு, கேது, காலசர்ப்ப தோஷம் என சகல தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், திருமணத்தடை நீங்க, கணவன், மனைவி பிணக்கு தீர, தாலி பாக்கியம் நிலைத்திடவும் இத்தலம் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. தலமரமாக வில்வமும், தலத்தீர்த்தமாக ஆலயத்திற்குள் கிணறு வடிவில் கங்கா தீர்த்தமும் அமைந்துள்ளன.

அமைவிடம்: திருவண்ணாமலைக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் வடமாத்தூர் அமைந்துள்ளது. இவ்வூரில் காளியம்மன், மாரியம்மன், வேடியப்பன் ஆலயங்களும் அமைந்துள்ளன.

திருவண்ணாமலை - காஞ்சி (காஞ்சிபுரம் அல்ல) பேருந்து வழித்தடத்தில் பெரியகுளம் நிறுத்தத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. பயணம் செய்தால் வடமாத்தூரை அடையலாம். பேருந்து வசதி அடிக்கடி உள்ளது.

தரிசன நேரம்: காலை 6.00 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
- பனையபுரம் அதியமான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com