தாமிரபரணி நதிக்கரையில் முதல் விஷ்ணு ஆலயம்!

திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி நதியின் வடகரையில் ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று சிறிய ஸ்ரீ புருஷோத்தம பெருமாள் கோயில் அமையப் பெற்றுள்ளது.
தாமிரபரணி நதிக்கரையில் முதல் விஷ்ணு ஆலயம்!

திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி நதியின் வடகரையில் ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று சிறிய ஸ்ரீ புருஷோத்தம பெருமாள் கோயில் அமையப் பெற்றுள்ளது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஆண்ட சோழ மன்னன் ஒருவன் குழந்தைச் செல்வம் இல்லாமல் வருந்தினான். அவைப்புலவர் சொற்படி, பொருநை (தாமிரபரணி) நதி தீரத்தில் ஒரு விஷ்ணு ஆலயம் அமைத்தான். அவ் வாறே, அவனுக்கு குழந்தைச் செல்வம் அமைந்தது.

இந்த நதிக் கரையில் அமைந்த முதல் விஷ்ணு ஆலயம் இதுவேயாகும். சிறிய கோயிலாக இருந்தாலும் இன்றும் பொலிவுடன் திகழ்கிறது என்பதற்கு கருவறையில் உள்ள ஸ்ரீ புருஷோத்தம பெருமாளின் திருக்கோலமே ஆதாரம்.

கோயிலின் இரு புறங்களிலும் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு வரை மக்கள் வசித்த வீடுகள் இருந்தன என கல்வெட்டுகளில் காண முடியும்.

இவ்வாலயத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட உற்சவம், மார்கழி ஸ்ரீவைகுண்ட ஏகாதசி, ஸ்ரீஹனுமத் ஜெயந்தி ஆகியன இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

கருவறையில் ஸ்ரீ புருஷோத்தம பெருமாள், அலர்மேல் மங்கை தாயார் அமைந்துள்ளனர். அர்த்த மண்டபத்தில் துவாரபாலகர்கள், பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் உடையவர், விஷ்வக்சேனர், ஸ்ரீவேணுகோபாலகிருஷ்ணன் வீற்றிருக்கின்றனர். மகா மண்டபத்தில் ஸ்ரீ ஜோதி ஆஞ்சநேயர், சந்நிதி கருடன், துவஜஸ்தம்பம், மகாபலிபீடம் ஆகியவை கொண்டும் விளங்குகிறது.

கோயிலின் வடகிழக்குப் பகுதியில் ஸ்ரீ புருஷோத்தம புஷ்கரணி எனும் திருக்கேணியில் இருந்து தினமும் தீர்த்தம் எடுத்து மூலவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. கோயிலின் வடகிழக்கில் ஸ்ரீ மூலகருட பகவான் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

கருவறையில் கருட பகவான் ஒருகால் மடித்து மறுகால் ஊன்றி அமைந்திருக்க, அவரது ஒரு திருக்கையில் பெருமாளின் திருப்பாதத்தை ஏந்தியவாறும் மற்றொரு திருக்கையில் மலர்ந்த தாமரை மலரை ஏந்தியவாறும் அமைந்துள்ளார். தோளின்மேல் உள்ள பீடத்தில் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் இடது காலை மடித்து, வலது காலை கருடபகவானின் கையில் வைத்தவாறு தன்னுடைய பத்தினியை தன் இடது மடியில் அமர்த்தி அஷ்டகரங்களைக் கொண்டு சப்தரிஷிகளின் அம்சமாக ஆதிசேஷன் என்னும் ஏழு நாகங்கள் குடை பிடிக்க வரதஹஸ்தம் கொண்டவாறு அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பெருமாளுக்கு வேறு எங்கும் காணப்படாத ஒரு திருக்கோலம். இவர் அஷ்டதிருக்கரங்களுடன் எழுந்தருளியிருப்பதால் இவரை "அஷ்டபுயகரப் பெருமாள்' எனவும் கூறுகின்றனர். அஷ்டதிருக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தியவாறு அருள் பாலிக்கிறார்.

தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு சாந்த சொரூபியாகவும், அதர்மத்தை அழிக்க வந்த கலியுகவரதனாகவும் காட்சியளிக்கிறார். அலர்மேல்மங்கை தாயாருடன் மட்டும் காட்சியளிப்பதால் இவரை ஏகபத்தினி விரதர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அம்சமாகவும் கருதுகின்றனர்.

ஸ்ரீ அலர்மேலு மங்கை நாச்சியார், பெருமாளின் இடது மடியில் அமர்ந்து தன்னுடைய இடது கையில் தாமரை மலர் ஏந்தி, கருடனின் கையில் உள்ள தாமரை மலர் மீது தன்னுடைய திருப்பாதங்கள் அமைய மலர்ந்த முகத்தைக் கொண்டு அருள்பாலிக்கிறார்.

கோயிலின் கருவறையின் மேல் உள்ள விமானம் இந்திர விமானம். இது மூன்று நிலைகளை கொண்டு விளங்குகிறது. முதல்நிலையில் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியின் தசாவதார காட்சியும் இரண்டாம் நிலையில் மேற்கே இந்திரன், வடக்கே ருத்திரன், தெற்கே பிரம்மன், கிழக்கே ஹயக்கிரீவ மூர்த்தியை கொண்டு விளங்குகிறது.

மூன்றாம் நிலையில் வட்ட வடிவ கட்டுமானத்தின் மேல் கலசம் அமைந்துள்ளது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது போல் இவ்விமானம் நம்முடைய பாவத்தை போக்கி ஜீவமோட்சத்தை வழங்கும் சக்தியாக உயர்ந்து காணப்படுகிறது. இப்பெருமாளை இந்திரன், சிவன், பிரம்மா, முனிவர்கள் பலர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.

108 திவ்விய தேசங்களிலும், நவ திருப்பதிகளிலும் எழுந்தருளியுள்ள ஸ்ரீமந்நாராயணமூர்த்தி இங்கு கலியுக வரதனாகவும், எதிர்வரும் இடர் காப்பவனாகவும் பொருநை நதிக்கரையில் ஸ்ரீபுருஷோத்தம பெருமாளாகவும் எழுந்தருளி அருள்செய்கிறார்.

இத்திருக்கோயிலையும் இத்தல பெருமாளையும் ஒருமுறை கண்டால் மறுமுறையும் காணவேண்டும் என்ற ஆவல் ஏற்படும். எனவே ஆனந்தம் கொள்ளும் வகையில் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 49 ஆண்டுகள் ஆகின்றன. கும்பாபிஷேம் நடத்தும் வகையில் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் 35 கி.மீ தொலைவில் அம்பாசமுத்திரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
தொடர்புக்கு: 90956 49236.
- சா. ஷேக்அப்துல்காதர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com