தூய இருதயப் பெருவிழா

இயேசு கிறிஸ்துவின் போதனைகளை இரு முக்கியமான மறையுண்மைகளில் அடக்கிவிடலாம்.
தூய இருதயப் பெருவிழா

இயேசு கிறிஸ்துவின் போதனைகளை இரு முக்கியமான மறையுண்மைகளில் அடக்கிவிடலாம். அவை இறையன்பு, பிறரன்பு என்பவையாகும். அன்பைப் பற்றி பைபிளில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

"என் உடமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை. அன்பு பொறுமையுள்ளது, தன்னலம் நாடாது, தீங்கு நினையாது' (கொரிந்தியர் 13: 3,4) "உன் மீது அன்பு கூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக' ( உரோமையர் 13:9)

அன்பே கடவுள், கடவுளே அன்பு என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டே இயேசுவின் திருவுருவப் படமானது இதயம் வெளிப்படையாகத் தெரியுமாறு வரையப்படுகிறது. எனவேதான், இயேசுவின் தூய இருதயப் படங்கள் இல்லாத கிறிஸ்துவ வீடுகளே இல்லை எனலாம். சிறப்பாக ஜூன் மாதத்தில் வீட்டில் உள்ள தூய இருதயப் படங்களை மந்திரிக்குமாறு குருக்கள் வீடுகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். இதனால் ஜூன் மாதம் "தூய இருதய வணக்க மாதம்' என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேவாலயங்களில் இயேசுவின் தூய இருதய அன்பை நினைவு கூரும் விதமாக சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடைபெறுகின்றன.

"என்னுடைய இருதயப் படம் ஸ்தாபிக்கப்பட்டு, வணங்கப்படும் வீடுகளில் உள்ளோர் ஒரு நாளும் அவலமாகச் சாகமாட்டார்கள்' என்று இயேசு மார்கரீத் என்னும் புனிதைக்கு வாக்குக் கொடுத்துள்ளார்.

இயேசுவின் இதயத்தில் உள்ளது அன்பு, இரக்கம், மன்னிப்பு, அரவணைப்பு மற்றும் ஆறுதல் போன்ற பண்புகளாகும். இருகரம் விரித்துஇதயத்தைத் திறந்தவராய் காத்திருக்கும் ஆண்டவர் இயேசு அன்று, தம் போதனைகளைக் கேட்க வந்த மக்களின் பசி போக்கினார்; நோயுற்றோரைக் குணமாக்கினார்; பேயை ஓட்டினார்; செத்தவனை உயிர்பித்து விதவைத் தாயிடம் ஒப்படைத்தார்; சமூகம் தீண்டலாகாது என ஒதுக்கிய தொழுநோயாளரை தொட்டு நலமாக்கினார். இவற்றையெல்லாம் அன்று செய்த இயேசுவின் இதயம் இன்றும் நமக்கு இவற்றையெல்லாம் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறது. " சுமை சுமந்து சோர்வுற்றோரே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்' மத்தேயு (11:28,29)

சென்னையில் எழும்பூரிலுள்ள தூய இருதய ஆண்டவரது கோயிலும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூர் தூய இருதய ஆண்டவர் கோயிலும் கொடைக்கானலிலுள்ளஇருதய ஆண்டவர் கோயிலும் பிரசித்தி பெற்றவையாகத் திகழ்கின்றன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இக்கோயில்களில் நடைபெறும் பூசை மற்றும் ஆராதனைக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதைக் காணலாம். இம்மாதம், 23 ஆம் தேதியன்று இயேசுவின் தூய இருதயப் பெருவிழா கொண்டாடப்படுகிறது.

எண்ணற்ற கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் இன்று சமூக சேவை, மருத்துவ சேவை, கல்விப்பணி போன்ற அன்புப் பணிகளில் ஆர்வம் காட்டுகிறதென்றால் அதற்கு மூலகாரணம், கிறிஸ்து போதித்த இந்த அன்பெனும் தத்துவம்தான். நடமாடும் புனிதையாகத் திகழ்ந்த அன்னை தெரசாவின் அன்புப் பணிகளை உலகமே அறியுமன்றோ? இயேசுவின் அன்பை உணரும் நாமும் அவரது இதயத்தைப் போல் கனிவான இதயம் கொண்டவர்களாக மாற முயல்வோமாக.
-பிலோமினா சத்தியநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com