பித்ர் தரும பெருநாள்

பாவத்தைக் கரித்து நோவும் நரகத்திலிருந்து காப்பாற்றும் கண்ணியம் மிகுந்த ரமலான் மாதத்தின் முப்பது நாள்களும் தப்பாது புண்ணிய நோன்பை நோற்று எண்ணிலா நன்மைகளைப் பெற்ற மகிழ்ச்சியோடு
பித்ர் தரும பெருநாள்

பாவத்தைக் கரித்து நோவும் நரகத்திலிருந்து காப்பாற்றும் கண்ணியம் மிகுந்த ரமலான் மாதத்தின் முப்பது நாள்களும் தப்பாது புண்ணிய நோன்பை நோற்று எண்ணிலா நன்மைகளைப் பெற்ற மகிழ்ச்சியோடு பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் ஊரோடு கூடி குதூகலமாய் கொண்டாடும் பெருநாளே ஈகைத் திருநாள். இவ்வாண்டு, இந்நந்நாள் 26.6.2017 இல் வருகிறது.

இருப்போர் இல்லாதோருக்குக் கொடுத்து இல்லை என்று இல்லில் இருந்து தொல்லை துயரத்தோடு துவண்டு ஒதுங்காது ஒன்றுகூடி நன்றாய் நல்விழாக்களைக் கொண்டாடும் வண்ணம் ஈந்துவப்பதை, இருப்பதைப் பகிர்வதை, பங்கு வைத்து பரவலாக்கி செல்வ செழிப்பையும் சமுதாய சமத்துவத்தையும் சகோதர பாசத்தையும் நேசத்தையும் பலப்படுத்துவதே இஸ்லாமிய விழாக்கள்.

இந்த கொள்கை கோட்பாட்டின் அடிப்படையில் ஏற்று நோற்ற நோன்பில் எங்கேனும் தெரிந்தோ தெரியாமலோ மறந்தோ குறை ஏற்பட்டிருந்தால் குறையை நிறைவு செய்வதற்காக பித்ரா என்ற ஈகையை பெருநாள் தொழுகைக்குப் பள்ளிவாயிலுக்குச் செல்லும் முன்னரே ஏழைகளுக்கு ஈந்திடுவதால் இப்பெருநாள் ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது.

நோன்பினால் ஏற்படும் அகமிய, ஆன்மிக நன்மைகள் எண்ணற்றவை. இந்த புண்ணியத்தோடு பிற புலப்படும் புற நன்மைகளும் பல உள. அவற்றில் ஒன்று பசியறியாது புசித்து வாழ்வோரும் நோன்பு நோற்பதால் பசியின் வருத்தத்தை அறிந்து தெரிந்து புரிந்து பாருலகில் யாரும் பசியால் வருந்தாது உண்ண உணவு கொடுக்கும் உயர்ந்த குணத்தைப் பெறுகின்றனர். அதனால்தான் நோன்பு முடிந்து கொண்டாடும் ஈத் பெருநாள் தொழுகைக்குச் செல்லும் முன்னரே எந்த நாட்டில் எந்த உணவு பிரதானமான உணவோ அந்த உணவு தானியத்தை (நம் நாட்டில் அரிசி, கோதுமை) ஒரு குடும்ப தலைவனின் பொறுப்பில் அந்த குடும்பத்தில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வொருவருக்கும் இரண்டு கிலோ வீதம் கணக்கிட்டு கொடுக்க வேண்டும். ஆண்டுதோறும் ஆதரவற்றோரை ஆதரித்து உணவு வழங்கும் பழக்கத்திற்கு வித்திடுவதே இந்த ஈதுல் பித்ர் தர்மம்.

குர்ஆனின் 87-15 ஆவது வசனத்தில் "தஸக்கா' என்ற அரபி சொல்லுக்குத் தூய்மை படுத்திக்கொண்டவர் என்பது பொருள். ஈதுல்பித்ர் தொழுகைக்காக உளூ என்னும் உறுப்புகளைக் கழுவி தூய்மை படுத்திக்கொள்வதையும் தொழுகைக்குச் செல்லும்முன் பித்ரா தர்மம் கொடுப்பதையும் "தகர' என்ற அரபி சொல்லுக்கு அல்லாஹ்வின் பெயரை மொழிதல் என்று பொருள். அல்லாஹ்வின் திரு பெயரைப் புகழ்ந்து மொழியும் தக்பீர் சொல்லி கொண்டு பெருநாள் தொழுகைக்கு மசூதிக்கோ அல்லது ஈத்கா (தொழுகை மைதானம்) விற்கோ செல்வதையும் "ஸல்வா' என்ற சொல் ஈத் பெருநாள்தொழுகையை கூட்டாக தொழுவதையும் குறிப்பதாக விரிவுரையாளர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். முக்காலம் உரைக்கும் குர்ஆன் பிற்காலத்தில் பின்பற்றப்படும் ஈத் பெருநாள் பித்ர் தர்மம் குறித்து கூறியிருப்பதாக கூறுகின்றனர்.

எகிப்திய மன்னன் பிர்அவ்னின் அரசவையில் மூசா நபியிடம் தோற்ற சூனியக் காரகர்கள் மூசா நபியிடம் சரணடைந்து ஏக இறை கொள்கையை ஏற்றது இந்த நாளில்தான். மூசா நபிக்கு "தவ்ராத் வேதம்' முழுமைப் படுத்தப் பட்டதும் இந்நாளில் தான்.

ஹதீது }நந்நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளின் முதல் தொகுப்பு "சஹீஹுல் புகாரி' என்னும் நூலை வெளியிட்ட அறிஞர் சைய தினா அபூ அப்தில்லாஹ் முஹம்மதுப்னு இஸ்மாயில் அல்புகாரி ஹிஜ்ரி 256 ஆம் ஆண்டில் பெருநாள் இரவில் இஷா தொழுகைக்குப்பிறகு இறந்தார்கள். பெருநாள் } ஈதுல் பித்ர் தொழுகைக்குபின் லுகர் (நடுபகல்) தொழுகை முடிந்ததும் ஜனாஸô } பிரேத தொழுகை நடத்தி அடக்கம் செய்யப்பட்டார்கள்.

ஈதுல் பித்ர் காலையில் சூரியன் உயருமுன் உத்தம நபி (ஸல்) கனிகளை ஒற்றைப் படையில் புசித்ததைப் பார்த்ததாக நேச தோழர் அனஸ் (ரலி) அறிவிப்பது புகாரியில் உள்ளது. இன்றும் இப்பழக்கம் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. மசூதிகளில் ஈதுல் பித்ர் பெருநாள் காலை சுபுஹு (வைகறை) தொழுகைக்குப்பிறகு பேரீத்தம் பழம் வழங்கப்படுகிறது. தொழுது முடித்து வீட்டிற்குச் செல்வோர் ஒற்றைப்படையில் அப்பழங்களை எடுத்து உண்பது வழக்கம்.

ஈதுல் பித்ர் பெருநாளில் வாழும் நாள் எல்லாம் வறியோருக்கு உரியன வழங்கி உண்ண உணவு கொடுத்து இல்லாமை இல்லாத எல்லாரும் எல்லாமும் பெற்று பெரு மகிழ்வோடு பேராளன்அல்லாஹ்வை வணங்கி வாழும் தாழாத உலகு உருவாக உறுதி ஏற்போம்.

- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com