தஞ்சை பங்காரு காமாட்சி! 

தஞ்சை பங்காரு காமாட்சி! 

அம்பிகை வழிபாடு பாரதத்தின் தொன்மையான வழிபாடு. அவள் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அகிலாண்டேஸ்வரி,

அம்பிகை வழிபாடு பாரதத்தின் தொன்மையான வழிபாடு. அவள் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அகிலாண்டேஸ்வரி, அன்னபூரணி, அபிராமி, புவனேஸ்வரி, ராஜராஜேஸ்வரி போன்ற பல பெயர்களில் அருள்பாலிக்கிறாள். அதில் ஒரு ரூபமான காமாட்சியின் ரூபம் தத்துவத் திருவுருவமாகும். காமாட்சி என்பது அடியவர்கள் விரும்புகின்ற வரத்தினையெல்லாம் அருள் மழையாக பொழியக் கூடியவள் என்று பொருள்படும். 

மாசியும், பங்குனியும் சேரும்போது செய்யப்படும் காரடை நோன்பில் காமாட்சி தேவியே பூஜிக்கப்படுகிறாள். கணவனும், மனைவியும் கருத்தொருமித்து வாழ வேண்டி, சிவ சக்தி ஐக்ய ரூபிணியான காமாட்சியை இந்த நோன்பில் பூஜிக்கிறார்கள். 

காஞ்சி க்ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்பாள் ஆலயத்தில், பிரம்ம தேவர் தவம் செய்து தேவியின் அனுக்கிரகத்தைப் பெற்று அங்கு தங்கம் போல ஜ்வலிக்கும் பங்காரு காமாட்சியை ஸ்தாபிதம் செய்தார். 

கி.பி. 16-ஆம் நூற்றாண்டில், விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் நம் நாட்டின் மீது படையெடுத்து நம் புராதனக் கோயில்களை நாசப்படுத்தியும், கொள்ளையடித்தும் நம் பெண்களை மானபங்கப் படுத்தியும் வந்த அந்நியர்கள் காஞ்சியை நோக்கி வருவதாகக் கேள்விப்பட்டவுடன், பங்காரு காமாட்சியை காப்பாற்ற, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொண்டு, தஞ்சை வந்தார். அன்றைய தஞ்சை அரசர் பிரதாபசிம்மர் அம்பிகைக்கு ஒரு திருக்கோயில் அமைத்துக் கொடுத்தார். அன்று முதல் பங்காரு காமாட்சி தஞ்சையிலேயே குடிகொண்டு விட்டாள். 

அன்னை பங்காரு காமாட்சி ஆலயம் தஞ்சை மேல ராஜ வீதியில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் அன்னை பங்காரு காமாட்சி இரு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். பொன்மயமாக ஜ்வலிக்கும் அம்பிகைக்கு ஆண்டிற்கு பதினொன்று நாள்களுக்கு மட்டுமே அபிஷேகங்கள்! நவராத்திரியின் ஒன்பது நாள்கள், ஐப்பசி மாதம் பூரம் நட்சத்திரமான அன்னையின் ஜென்ம நட்சத்திரம், பங்குனி உத்திரம் ஆகிய இந்த பதினோரு நாள்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாள்களில் உற்சவருக்கே அபிஷேகம். அம்மன் சந்நிதியில் வைணவ திருத்தலங்களைப் போல சடாரி வழக்கம் உண்டு. தற்போது பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, புனருத்தாரண, ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் வரும் 23.03.2017 அன்று  9.25 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94431 56411.
- எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com