பிரமிப்பூட்டும் பிரம்மதேசம்! 

தமிழ் மணம் கமழும் பொதிகை மலைச்சாரலை அடுத்து வளம் அளிக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் பல சிறப்புமிகு திருக்கோயில்கள் அமைந்துள்ளன
பிரமிப்பூட்டும் பிரம்மதேசம்! 

தமிழ் மணம் கமழும் பொதிகை மலைச்சாரலை அடுத்து வளம் அளிக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் பல சிறப்புமிகு திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பா சமுத்திரத்திற்கு வடக்கில் சுமார் 3 கி.மீ. தொலைவில் இயற்கை அழகு சூழ்ந்த பிரம்மதேசம் என்ற ஊரில் கலையழகு மிக்க சிற்பங்களுடன், வழிபாடு சிறப்பு மிக்க ப்ருஹந் நாயகி (பெரிய நாயகி) சமேத கைலாச நாதர் கோயில் அமைந்துள்ளது.

பிரம்மாவின் பேரனான ரோமசமுனிவர் இக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவனை வழிபட்டதால் பிரம்மதேசம் என்ற பெயர் வழங்கப்படுவதாக புராண வரலாறு கூறுகிறது.  மேலும் காஞ்சி காமகோடி பீடத்தின் மூன்றாவது ஆசார்யாள் ஸ்ரீ சர்வக்ஞாத்மேந்திர சரசுவதி சுவாமிகள் அவதரித்த தலம் இவ்வூர் என்ற சிறப்பும் உண்டு.

தலச்சிறப்பு: தென் தமிழ்நாட்டில், நவத்திருப்பதிகள் சிறப்பாக வழிபடுவதைப்போல, நவகைலாசத் தலங்களும் வழிபடப் பெறுகின்றன. அதில் பிரம்மதேசம் முதன்மையாகக் கருதப்பட்டு, நவக்கிரகத் தலங்களில் சூரியன் தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவனை உத்திராயணம், தட்சிணாயன காலத்தில் ஒளிக்கதிர்களால் சூரியன் வழிபடும் காட்சி சிறப்பானது.

வரலாற்றுச்சிறப்பு: பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில் ராஜராஜ சோழன் காலத்தில் எடுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றுப் படித்துறையில் காணப்படும் முதலாம் ராஜராஜனின் வட்டெழுத்துக் கல்வெட்டு இதனை எடுத்துக் கூறுகிறது. 

மேலும்  இக்கோயிலில் காணப்படும் பூதலவீர உதய மார்த்தாண்டன் (கி.பி. 1515) கல்வெட்டில் இவ்வூர் முள்ளிநாட்டு ராஜராஜ சதுர்வேதி மங்கலத்து பிரம்மதேசம் எனவும், இறைவன் கைலாயமுடையார் எனவும் குறிப்பிடப்படுவதைக் காணலாம். விஜயநகர மன்னர் வீர பிரதாப சதாசிவ தேவ மகாராயர் கல்வெட்டும் காணப்படுகிறது.

மகா மண்டபத்திற்கு நுழையும் முன் இக்கோயிலின் திருப்பணிகளை சிறப்பாக நடத்தியும், கோபுரங்களை எடுப்பித்த விசுவநாத நாயக்கர் இறைவனை வணங்கும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவரைப் போற்றி வணங்கும் விதமாக விழா நாட்களில் இவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகின்றது.

ஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய திருக்கோயில். வாயிலில் ஏழு நிலை கோபுரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. வாயிலின் முன்பு பிரம்மதீர்த்தம் என்ற குளம் அமைந்துள்ளது. கோபுர வாயிலின் இருபுறமும் பிள்ளையார், ஆறுமுகன் சந்நிதிகள் அமைந்துள்ளன. 

கோயிலுக்குள் நுழைந்ததும் நந்தியெம்பெருமான் பெரிய உருவ வடிவில் கம்பீரமாக அமர்ந்து காட்சி அளிப்பதைக் காணலாம். அவரது கழுத்தில் மணிகள், அணிகலன்கள் மற்றும் உடலில் பட்டையான ஆடை அலங்காரத்துடன் சிற்ப வேலைப்பாடு மிக்கதாக அமைந்துள்ளது. பிரதோஷ வேளையில் இவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு, சந்திரனுக்கும் சூரியனுக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.  உட்பிரகாரத்தில் சப்தமாதர்கள், ஆத்மவியாக்கியாண தட்சிணாமூர்த்தி, புனுகு சபாபதி என்ற பெயர் கொண்ட நடராஜப் பெருமான் வழிபடப் பெறுகின்றனர்.

கருவறையில் கைலாசநாதர் மிகப்பெரிய வடிவில் லிங்க வடிவாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அம்மன் சந்நிதிக்கு செல்லும் வழியில் உள்ள சோமவார மண்டபத்தின் தெற்கில் உள்ள சபை மண்டபத்தில் சிவபெருமான் கங்காளமூர்த்தியாக காட்சி தருகிறார். அவரது அருகில் இசைக்கருவிகளை வாசிக்கும் சிவ கணங்கள், அஷ்டதிக்பாலர், முனிவர்கள், சூரியன், சந்திரன் ஆகிய அனைத்து தெய்வங்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பாகும். இங்கு பைரவரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இம்மண்டபத்திற்கு அருகில் ஆதிமூலலிங்கம் எனப்படும் பத்ரிவனேசுவரர் (இலந்தையடிநாதர்) எழுந்தருளியுள்ளார். இக்கோயிலின் தலவிருட்சமாக இலந்தை மரம் விளங்குகிறது.

சோமவார மண்டபத்தை அடுத்து அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. அம்பாள் பெரிய நாயகி என்னும் பெயர் கொண்டு இருகரங்களுடன் வலக்கரத்தில் மலர் ஏந்தி இடக்கரம் தொங்கவிட்ட நிலையில், கருணை பொங்க அருள்பாலிக்கும் அற்புத வடிவினைக் கண்டு வணங்கலாம். திருச்சுற்றில் வல்லப கணபதி, சரசுவதி, சக்தி வாய்ந்த காளி அம்மனான ஸ்ரீ நாலாயி ரத்தம்மன் ஆகிய வடிவங்களை வணங்கலாம்.

சனிபிரதோஷ வழிபாடு: பிரமிப்பூட்டும் கலையழகு மிக்க சிற்பங்களும், கட்டடக்கலைச் சிறப்பும் மிகுந்த பிரம்மதேசம் கோயிலில் இவ்வருடத்தில் வரும் முதல் சனி மகாபிரதோஷ (25.03.2017) வழிபாட்டு காலத்தில் சுவாமி, அம்பாள், நந்திகேசுவரருக்கு 1008 செவ்விளநீரால் அபிஷேகம் நடக்க உள்ளது. மேலும் இந்நாளில் அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் தாமரை, செண்பகம், மனோரஞ்சித மலர்களால் அலங்காரம் செய்யப்பட உள்ளது. 

இந்த சனி மகாபிரதோஷ வழிபாடு வைபவத்தில், திருநெல்வேலி மாவட்டம் மேலத்திடியூரில் உள்ள பி.எஸ்.என் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊர் மக்களும் பக்தர்களும் இணைந்து அழகாகத் திட்டமிட்டபடி லட்சத்து எட்டு அகல் விளக்கு தீபம் ஒரே நேரத்தில் ஏற்றுகின்றனர். உலக நன்மைக்காகவும், அவரவர் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள குறைகள் நீங்கி வளமான வாழ்வு வாழ வேண்டி விளக்குகள் ஏற்றப்படுகின்றன. அனைத்து ஏற்பாடுகளும் மகாராஷ்டிர மாநிலம் சத்குரு ஸ்ரீ கஜானன் மகராஜ் பக்தர்களால் அமைக்கப்பட்ட பேரவை சார்பில் நடக்க உள்ளது. (அம்பாசமுத்திரத்திலிருந்து பிரம்ம தேசம் செல்ல பேருந்து வசதிகள் 
உள்ளன).
தொடர்புக்கு: 81486 81247/ 83002 57762. 
- கி. ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com