அழகு பெறவேண்டும் அழகீஸ்வரர் ஆலயம்!

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள பேரணக்காவூரில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்
அழகு பெறவேண்டும் அழகீஸ்வரர் ஆலயம்!

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள பேரணக்காவூரில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட 
அன்னபூரணி உடனுறை ஸ்ரீ அழகீஸ்வரர் ஆலயம் சிதிலமடைந்திருந்த நிலையைக் காணப்பொறுக்காமல் கிராம மக்கள் மற்றும் சில அடியார் பெருமக்களும் இணைந்து திருப்பணி வேலைகளை கடந்த 3 ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். 

திருக்கோயிலின் சிறப்பு: ஸ்ரீ அழகீஸ்வரர் அக அழகையும், புற அழகையும் மேன்மையுறச் செய்பவர். மேனி அழகு என்பது புற அழகு. தீய எண்ணங்கள், தீய குணங்கள் போன்றவற்றை நீக்கி நல்லெண்ணம், நற்குணங்கள்  உள்ளடக்கியதே அக அழகாகும்.

ஸ்ரீ அழகீஸ்வரரை சந்திரன், மன்மதன், ரதி மற்றும் 27 நட்சத்திரங்கள் ஆராதனை செய்து அழகைப் பெற்றனர் என்ற கர்ணபரம்பரை தல வரலாற்றுடன் திகழும் இத்தல ஈசன் மற்றும் அன்னபூரணி அம்பிகையை ஆராதிப்பதனால் அன்னத்திற்குக் குறைவில்லாமலும், திரவியத்திற்குக் குறைவில்லாமலும், மனக்குறைகள் நீங்கியும், வாழ்க்கை பரிபூரண நிலை அடையும். தலவிருட்சம் நெல்லிமரம். தலதீர்த்தம் அன்னதீர்த்தம் ஆகும்.

திருக்கோயிலின் அமைப்பு: வயல் வரப்பு மீதுதான் நடந்துதான் ஆலயத்தை அடையவேண்டும். கிழக்கு நோக்கிய வாயில் கொண்ட தலமாக அமைந்துள்ளது. பலிபீடமும், நந்தியும் ஒரேமேடையில் அமையப்பெற்று, அதற்கு தனியே மண்டபமும் கட்டப்பட்டு வருகின்றது. ஆலயத்தின் உள்ளே அந்தராளம், கருவறை என்ற அமைப்பில், கருவறையில் ஸ்ரீ அழகீஸ்வரர் சதுர பீட ஆவுடையாருடன் அமைந்திருந்து அருளுகின்றார். இங்கு நாகரூபத்தில் சித்த புருஷர்களும், மகான்களும் இறைவனை ஆராதிப்பதாக ஐதீகம்.

இருகோலங்களில் அம்பிகை சந்நிதி: அம்பிகை ஸ்ரீ அன்னபூரணி அபய ஹஸ்த வரத முத்திரையுடன் தெற்கு நோக்கி வீற்றிருந்து திருவருள் புரிகிறார்.

அம்பிகையின் முன் இரண்டு பாதங்கள் பிரதிஷ்டையாகி உள்ளன. இதனைப் பார்க்கையில் அம்பாள் நின்ற, அமர்ந்த இரு கோலங்களிலும் தென்படுவது வேறெங்கும் காண இயலாத அமைப்பு. முருகப்பெருமான் மயில் மீதமர்ந்த கோலத்தில் சிறிய சிற்ப வடிவிலும், சனீஸ்வர பகவான் சிறிய சிற்ப வடிவிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். பக்தர்கள் இத்திருப்பணியில் பங்கு கொண்டு நலம் பெறலாம்.

ஆலயம் செல்ல: செங்கல்பட்டிலிருந்து அரசு நகரப்பேருந்துகள் பேரணக்காவூர் செல்கின்றன.
தொடர்புக்கு: 98407 55274 / 93827 83542.
- க. கிருஷ்ணகுமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com