உத்தம நபி உணவு உண்ணும் உயர்வு

உலக மக்களுக்கு உணவளிப்பவன் அல்லாஹ் என்று அறிவிக்கிறது அருமறை குர்ஆனின் 30-40 மற்றும் 51-58 ஆவது வசனங்கள்.
உத்தம நபி உணவு உண்ணும் உயர்வு

உலக மக்களுக்கு உணவளிப்பவன் அல்லாஹ் என்று அறிவிக்கிறது அருமறை குர்ஆனின் 30-40 மற்றும் 51-58 ஆவது வசனங்கள். அல்லாஹ் அளிக்கும் உணவை உண்மையாய் உழைத்து ஈட்டிய பொருளைக் கொண்டு வாங்கி உண்பதே உயர்ந்தது என்பதை "நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவைகளிலிருந்தே உண்ணுங்கள்'' என்னும் 2-172 ஆவது வசனம் உறுதிப்படுத்துகிறது.

ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எவ்வுணவிலும் எக்குறையும் கூறாது இறைவன் திருப்பெயரை மொழிந்து உடனிருப்போருடன் பகிர்ந்து உண்பார்கள். உணவில் குறை கூறாத நிறைநபி (ஸல்) அவர்களின் உயர்ந்த குணத்தை அபூஹுரைரா (ரலி) வியந்துரைப்பது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ நூற்களில் உள்ளது. இறைவன் திருப்பெயரைப் பொருத்தமாய் கூறி உத்தம நபி (ஸல்) அவர்கள் உணவு உண்ண துவங்குவதை ஹுதைபா (ரலி) ஆயிஷா (ரலி) கூறுவது முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ நூற்களில் உள்ளது.

காருண்ய நபி (ஸல்) அவர்கள் கால்களை மடக்கி பணிவாய் உட்கார்ந்து உண்பார்கள். ""நான் சாய்ந்து கொண்டு உண்பவன் அல்லன்'' என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்ததை அபூஜுஹைபா (ரலி) கூறுவது ஸýனனில் உள்ளது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குந்தி உட்கார்ந்து பேரீச்சம் பழத்தை உண்டதைக் கண்டதாக உரைக்கிறார் அனஸ் (ரலி) நூல் முஸ்லிம், அபூதாவூத். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனக்கென சிறிய தட்டில் உணவு உண்டதில்லை. அதுபோல தனக்கென தனி சுப்ரா (உணவு உண்ண விரிக்கப்படும் விரிப்பு) விலும் உணவு உண்டதில்லை என்று உரைக்கிறார் அனஸ் (ரலி) நூல்- புகாரி, திர்மிதீ. இந்த அறிவிப்பு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனித்து உண்டதில்லை; எவ்வுணவையும் பெரிய தட்டில் பலரோடு பகிர்ந்துண்டார்கள் என்பதைப் பறைசாற்றுகிறது.

அந்த அறிவிப்பிற்கு அபூஹாசிம் (ரலி) கதாதா (ரலி) அவர்களிடம் விளக்கம் கேட்டபொழுது ஒரு சாதாரண துணியை விரித்து உணவு உண்டதாக உரைத்தார்கள்.

மா நபி (ஸல்) அவர்கள் மைதா மாவு ரொட்டி உண்டது உண்டா? என்று ஸஹ்லுப்னு ஸஃது (ரலி) அவர்களிடம் கேட்டபொழுது கேண்மை நபி (ஸல்) அவர்கள் தூதுத்தவம் பெற்றதிலிருந்து மரணம் வரை மைதா மாவு ரொட்டி உண்டதில்லை என்றும் மாவு சலிக்கும் சல்லடைகளையும் பயன்படுத்தவில்லை என்றும் பகர்ந்தார்கள். நூல் -புகாரி, திர்மிதீ.

வேக வைக்காத பூண்டு தின்பதைத் திரு நபி (ஸல்) அவர்கள் தடை செய்த செய்தியைச் செப்புகிறார் அலி (ரலி) நூல்- அபூதாவூத், திர்மிதீ. சூடான உணவை உத்தம நபி (ஸல்) அவர்கள் உண்ணமாட்டார்கள். "உங்களுக்கு இடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்'' என்று எச்சரிக்கிறது ஏற்ற குர்ஆனின் 2-188 ஆவது வசனம். இக் குர்ஆன் வசனத்திற்கு இசைய இனிய நபி (ஸல்) அவர்கள் இயம்பியது "எவரும் பிறருடைய கால்நடையில் உரியவரின் அனுமதி இன்றி பால் கறப்பது கூடாது'' அறிவிப்பவர் -இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், மு.அத்தா, அபூதாவூத்.

ஒரு சமயம் உதுமான் (ரலி) கொண்டு வந்த ரவா பாயசத்தைச் சிறிது சுவைத்து "இதை எப்படி தயாரித்தீர்கள்?'' என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

நெய், ரவா, தேன் இதற்குரிய உணவுப்பொருள்கள். நெய்யையும் தேனையும் கலந்து கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் கோதுமையை பொடிப் பொடியாக நொறுக்கி கொட்டி சூடாக்க வேண்டும். சிறிது நேரம் சூடானதும் அந்த கலவையை கிண்டி கிளறினால் இப்பாயசம் தயாராகும் என்று உதுமான் (ரலி) உரைக்க, இவ்வுணவு இன்சுவை உணவு என்று இதமாய் இயம்பினார்கள் இனிய நபி (ஸல்) அவர்கள்.

தோழமை நபி (ஸல்) அவர்கள் தொவிக் கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் சாப்பிடுவார்கள். சுரைக்காய் சாப்பிடும்பொழுது உப்பைத்தொட்டு கொள்வார்கள். சுரைக்காயின் நீர்மையால் மூட்டுவலி முதலிய நோய்கள் ஏற்படாது தடுக்கவே உப்பைச் சேர்த்து கொண்டார்கள். உத்தம நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் யூனூஸ் நபியின் ஆகாரம் என்று அறிவித்தார்கள்.

ஒரு சமயம் ஒரு கையில் கனியையும் மறுகையில் அக்கனியின் தோலையும் வைத்திருந்தார்கள் வையம் வாழ வழிகாட்டிய வள்ளல் நபி (ஸல்) அவர்கள். அப்பக்கம் வந்த ஆடு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருகில் நின்று இடக்கையில் இருந்த தோலையும் கொட்டையையும் தின்ன, வலக்கையில் வைத்திருந்த பழத்தைச் சாப்பிட்டார்கள் பண்பு நபி (ஸல்) அவர்கள். ஆடு தின்று திரும்பிச் செல்லும் வரை பொறுமையோடு அமர்ந்திருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பல்லுயிர் ஓம்பும் பாங்கை நமக்குக் கற்று தருகிறார்கள். 

பெருமானார் நபி (ஸல்) அவர்கள் பேரீச்சை கனிகளை உண்டபின் நிறைய நீர் பருகுவார்கள். பேரீச்சைப் பழத்தைப் பாலுடன் சேர்த்தும் பருகுவார்கள். நீரும் பாலும் பேரீச்சையின் சூட்டைக் குறைக்கும். பூமான் நபி (ஸல்) அவர்கள் ரொட்டியுடன் நெய்யை சேர்த்து சாப்பிடுவார்கள். ஆட்டின் காலையும் தோள்பட்டை கறியையும் விரும்பி உண்பார்கள். ரொட்டியையும் இறைச்சியையும் சேர்த்து சாப்பிட்டால் கையை நன்றாகக் கழுவிக் கொள்வார்கள். உண்டு முடித்ததும் கை விரல்களைச் சூப்பியபின் கையைத் துணியில் துடைப்பார்கள். சாப்பிட்டு முடித்ததும் இறைவனுக்கு நன்றி கூறுவார்கள். நீரை நிம்மதியாக நிறுத்தி நிறுத்தி மும்முறை குடிப்பார்கள். நிறுத்தி நீர் குடித்தால் தொண்டை அடைப்பு, விக்கல் ஏற்படாது. மண் பாத்திரத்தில் நீர் குடிப்பார்கள். வெள்ளிப் பாத்திரத்தை வெறுத்து ஒதுக்குவார்கள். ""வெள்ளிப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தனது வயிற்றில் மிடறு மிடறாக நரக நெருப்பை விழுங்குகிறான்'' என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் விளம்பியதை அன்னை உம்மு சலமா (ரலி) உரைத்தது புகாரியில் உள்ளது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் புது பேரீச்சம் பழத்துடன் தர்பூஸ் பழத்தைச் சாப்பிட்டதோடு தர்பூஸின் குளிர்ச்சி பேரீச்சையின் சூட்டைத் தணித்து விடும் என்று தாஹா நபி (ஸல்) அவர்களின் மணிமொழியை அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் உள்ளது. பூமான் நபி (ஸல்) அவர்கள் புது பேரீச்சம் பழத்துடன் வெள்ளரிக்காயைச் சாப்பிட்டதாக விளம்புகிறார் அப்துல்லாஹ் இப்னு ஜாபர் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.

உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்ததோடு உயர்வாய் உண்டு காட்டிய முறையில் நாமும் உயர்வைப் பேணி அயர்வின்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் உண்பதை உண்டு, தவிர்ப்பதைத் தவிர்த்து உயிர்ப்புடன் உன்னதமாய் வாழ்வோம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com