அவதாரம்! குறுந்தொடர் 7

வைணவ பரமாச்சாரியாரான ஸ்ரீ ஆளவந்தாரைச் சந்திக்கத் தமது 21 ஆம் வயதில் கி.பி. 1038 இல் பெரிய நம்பியுடன் திருவரங்கம்
அவதாரம்! குறுந்தொடர் 7

திருவரங்கத் திருப்பங்கள்! ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு தரிசனம்

வைணவ பரமாச்சாரியாரான ஸ்ரீ ஆளவந்தாரைச் சந்திக்கத் தமது 21 ஆம் வயதில் கி.பி. 1038 இல் பெரிய நம்பியுடன் திருவரங்கம் கோயிலுக்குக் காஞ்சியிலிருந்து சென்றார். ஸ்ரீ ஆளவந்தார் திருநாடு அலங்கரித்தார் என்ற தகவலை திருவரங்கத்தில் நுழைந்தவுடனே ராமானுஜர் கேள்விப்பட்டார்.

ஆளவந்தாரின் 3 கொள்கைகள் நிறைவேறாமல் இருப்பதனால் அவரது 3 விரல்கள் மூடி இருக்கின்றன என்பதும் கேள்விப்பட்டார்.

வியாச பராசரர் நினைவாக அந்த ரிஷிகளின் பெயரையாவது நமது பிள்ளைகளில் ஒருவருக்குச் சூட்டி அழைக்க வேண்டும்; நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்குத் தக்க உரை காணவேண்டும்; வியாசரின் பிரம்ம சூத்திரத்துக்கு விசிஷ்டாத்வைத அடிப்படையில் ஸ்ரீ பாஷ்யம் இயற்ற வேண்டும். 

- இம்மூன்று குறைகள் காரணமாக அவரது விரல்கள் மூடி இருக்கின்றன எனவறிந்த   ராமானுஜர், "என் உடம்பும் திடமாக இருந்து குருவின் ஆசி, இறைவனின் கருணை இருந்தால், இந்த மூன்று குறைகளையும் நான் என் வாழ்நாளிலேயே நிறைவேற்றி வைக்கிறேன்'' என்று கூறினார். ஆளவந்தாரின் விரல்கள் திறந்தன. பின்னர் அவற்றை ராமானுஜர் நிறைவேற்றினார் என்பது வரலாறு!

முக்கோல் பிடித்து யதிராஜர் ஆன ஸ்ரீ ராமானுஜர், கி.பி. 1056 ஆம் ஆண்டில் தாசரதி என்னும் முதலியாண்டான், கூரத்தாழ்வான் உடன் வர, ஸ்ரீரங்கம் சென்றார்.

யதிராஜர் ஸ்ரீரங்கத்தின் பட்டணப் பிரவேசம் முடிந்ததும் முறைப்படி அரங்கனை அணுகித் திருவடி தொழுதார். தென்னரங்கன் கோயில் பணிகள் படிப்படியாக உடையவர் பொறுப்பாயிற்று. பெரிய நம்பியின் சீரிய தலைமையில் கோயில் பணிகளோடு, ஸ்ரீ ஆளவந்தாரின் சீடர்கள் வாயிலாக விளக்கங்களும் அர்த்தங்களைக் கேட்டு கற்கும் செயலிலும் ஈடுபட்டார் உடையவர். 1 பெரிய நம்பி, 2. திருக்கோஷ்டியூர் நம்பி, 3. பெரிய திருமலை நம்பி, 4.

திருமாலையாண்டான், 5. திருவரங்கப்பெருமாளரையர் ஆகிய ஆசான்களின் துணையால் தன் ஞானத்தை வெகுவாக பெருக்கிக் கொண்டார். உடையவர் 18 முறை திருக்கோஷ்டியூர் சென்று, "நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை ஞானோபதேசம் பெற்றார். அதனை அனைவரும் உய்ய விமானத்தின் மீதேறி பலரும் அறியும் வகையில் உபதேசம் செய்தார்.

திருவரங்கம் பெரிய கோயிலைப் பழுது பார்த்து, செப்பனிடும் பணியில் ஈடுபட்டார் உடையவர். உரிய நேரம் தவறாது திருக்கோயில் தளிகைகளைத் தயாரித்து, அரங்கனுக்கு  அமுது செய்வித்து உரிய முறையில் விநியோகிக்க, பல ஏற்பாடுகள் செய்தார். மண்டபங்கள், நந்தவனங்கள், மலர்ச்சோலைகள், மருத்துவச் சாலைகள், நூல் நிலையங்கள் அனைத்துக்கும் அரங்கன் திருமுற்றத்தில் இடம் கொடுத்து சீராக நடக்க வழி வகுத்தார்.

எம்பெருமானாரின் ஆசார்யர் பெரிய நம்பியின் ஒரே மகள் அத்துழாய் என்பவள். அவளுக்கு  மணம் செய்து புக்ககம் அனுப்பினார் பெரியநம்பி. புகுந்த வீட்டில் ஒருநாள் அத்துழாய் நீராடச் செல்லும்போது மாமியாரைத் துணைக்கு அழைத்தாள். மாமியாரோ, "உனக்கு யாராவது சீதன வெள்ளாட்டி வந்திருந்தால் கூட்டிக் கொண்டு போகலாமே'' என்று ஏளனமாகக் கூறினாள்.

அந்நாள்களில் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்போர் சீர் சிறப்புக்களோடு, ஒரு சீதனப் பணிப் பெண்ணையும் அனுப்புவது வழக்கம். பெரிய நம்பிக்கு அதற்கு வசதி  இல்லை என்று குத்திக் காட்ட இவ்வாறு பேசினார் மாமியார். 

அத்துழாய்க்குத் தன் தகப்பனாரின் ஏழ்மை நிலையைக் குறிப்பிட்டு மாமியார் பேசியது பொறுக்காமல் தகப்பனாரிடம் வந்து தெரிவித்தாள். 

வழக்கம்போல் அவர், "எதுவானாலும் உன் ஜீயரிடம் சென்று சொல்லு'' என்றார். எம்பெருமானார்க்கு தகவல் வந்ததும் முதலியாண்டானை அழைத்து "அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியாய் சென்று வா' என்று அனுப்பினார்.

முதலியாண்டான் அத்துழாயின் பணிப்பெண்ணாக அவளது மாமியார் வீடு சென்று உதவிகள் புரிந்தார். பலர் அறிந்த அரங்கன் கோயில் மணியம் அவர். பரம பாகவதர்.  எம்பெருமானாரின் முக்கோலான முதலியாண்டான் நமக்கு ஏவல் செய்வது மகாபாவம் என உணர்ந்து மனம் திருந்திய மாமியார் எம்பெருமானாரிடம் ஓடி வந்து திருவடிகளில் விழுந்து மன்னிப்புக் கேட்டு முதலியாண்டானைத் திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டாள். சம்மதித்தார் உடையவர். 

அந்தக் காலங்களில் சந்நியாசிகள் ஆசிரமத்தில் எவ்வளவு செல்வம் இருந்தாலும் தினமும் ஏழு இல்லங்களுக்குச் சென்று பிச்சை எடுத்து அதை புசித்துப் பசியாறுவது வழக்கம்.  இவ்வாறு செய்வதற்கு "மாதுகரம்' என்று பெயர். ஆசார வழி ஒழுகுபவர்களின் இல்லங்களில் மட்டும்தான் பெறுவர். சமைக்கப்படாத எந்த பொருளையும் சந்நியாசிகள் பெறமாட்டார்கள். மாதுகரம் வேண்டி வரும் யதிகளுக்கு அந்தவீட்டின் பெண்கள்தான் நன்கு பக்குவமாக சமைக்கப்பட்ட பதார்த்தமாகப் பிச்சையிடவேண்டும். சந்நியாசிகள், பெண்கள் கைகளால் (மாதுக்களின் கரம்) பெறுவதால் அதற்கு "மாதுகரம்' எனப்பெயர்.  
(அடுத்த இதழில்)
- இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com