நம்பியவரைக் காக்கும் நாடியம்மன்! 

தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாலும் பக்தர்களின் உயிர்நாடியாக விளங்குவதாலும்தான் இவ்வம்
நம்பியவரைக் காக்கும் நாடியம்மன்! 

தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாலும் பக்தர்களின் உயிர்நாடியாக விளங்குவதாலும்தான் இவ்வம்மனை "நாடியம்மன்' என்று அழைக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒன்றுகூடி பெருந்திருவிழாவாக மாவிளக்கு போடுவது இக்கோயிலில் மட்டுமே நிகழும் அதிசயமாகும். 

கி.பி. 1600, மராட்டியர் ஆண்ட காலம். தஞ்சையிலிருந்து 45 கி.மீ. தெற்கேயுள்ள ஊர் பட்டுக்கோட்டை. அச்சமயம், இப்பகுதியை ஆட்சி செய்தவர் பட்டு மழவராய நாயக்கர். மழவராயர் ஒரு முறை வேட்டைக்குச் சென்றார். அங்கே தெய்வீகக் களையோடு ஒரு பெண்மணி நிற்கக் கண்டார். அரசரைப் பார்த்ததும் அந்த பெண் ஓட ஆரம்பிக்க, தன்னந்தனியே காட்டில் நிற்கும் அவளைக் காண அரசரும் அவளைத் துரத்திக் கொண்டு ஓடினார். அவ்வாறு ஓடும்போது, "அம்மா ஓடாதே; நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்,'' என்று கூறியும் அவள் நிற்காமல் ஓடிச் சென்று மன்னரை நோக்கிப் புன்னகைத்தபடி, அருகில் உள்ள புதரில் மறைந்து விட்டாள். அவளுடைய புன்னகை மன்னரை சற்று யோசிக்க வைத்தது. வேந்தன் தன்னுடன் வந்த ஜனங்களை புதர் அருகே பார்க்குமாறு கூற அங்கே ஓர் அழகான அம்மன் சிலை பளபளத்தது. அவர் மனமுருகி, "தாயே நாடி வந்து எங்களை ஆட்கொண்டவளே, இந்த ஊர்மக்களையும், என் குலத்தையும் நோய் நொடி இடர்பாடின்றிக் காப்பாற்றம்மா,' என்று வேண்டிக்கொண்டு அங்கு கோயிலை எழுப்பினார்.

வயல்வெளி, பெரிய குளம் சூழ்ந்திருக்க பெரிய பெரிய குதிரை சிலைகளோடு அழகாக காட்சி தருகிறது அன்னையின் கோயில். கருவறையில் தீ ஜுவாலை, கிரீடம் நான்கு கரங்களில் கத்தி, சூலம், கேடயம், கபாலம் ஏந்தி ஆயுதபாணியாக சுகாசனத்தில் அமர்ந்தவாறு காட்சி தருகிறாள் அம்பிகை. அம்மன் சிலையின் நெற்றியில் ஒரு சிறியவடு தென்படுகிறது. அதற்கும் செவி வழி தகவல் ஒன்று உண்டு. அதாவது, தஞ்சையை ஆண்ட மன்னர் ஒருவர் இங்கு வேட்டைக்கு வந்தபோது ஒரு முயல் புதருக்குள் ஓடி ஒளிய, அவருடன் வந்த ஏவலர்கள் முயலைப் பிடிக்க புதரை கடப்பாரையால் தோண்டியபோது, ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. புதர் முழுவதும் தோண்டி தேடிப் பார்க்கும்போது, ரத்தக் கறையுடன் அம்மன் சிலையைப் பார்த்தனர். கடப்பாரை வெட்டே அம்பிகையின் நெற்றியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இங்கு, மொட்டை போடுதல், அங்கப்பிரதட்சணம் போன்றவற்றோடு தாழம்பூ பாவாடை சார்த்துதல், வெண்ணெய் படையல் என்ற வித்தியாசமான நேர்த்திக் கடன்களும் வழக்கத்தில் உள்ளன. பெüர்ணமி பூஜை செய்து இங்குள்ள நாகலிங்க மரத்தில் சரடு கட்டினால் எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். எலுமிச்சை மாலை சார்த்துவது மிக விசேஷம்! ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் இப்பகுதியில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு "நாடி' என்று பெயர் சூட்டுகின்றனர். இத்திருக்கோயிலில் அம்பிகைக்கு வரகரிசிமாலை கோர்த்து கட்டுவது விசேஷம். ஆரப்பள்ளம், அணைக்காடு, பண்ணை வயல், மகராச சமுத்திரம், கரம்பயம் இந்த ஐந்து ஊர் மக்களும் தேர்வடம் பிடித்து அம்பாளை பயபக்தியோடு வழிபடுகின்றனர். 

இத்திருக்கோயிலில் பங்குனியில் சிறப்பாக உற்சவம் நடைபெறுகிறது. இவ்வருடம் இவ்விழா மார்ச் மாதம் 28ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.

ஏப்ரல் -4 உற்சவ மண்டபத்தில் மண்டகப்படி சிறப்பாக நடைபெறும். அதைத் தொடர்ந்து காமதேனு, யானை, அன்னம், பூதம், சிம்மம், ரிஷபம், வெட்டுக் குதிரை ஆகிய வாகனங்களில் தினமும் அம்பிகை வீதி உலா வருவாள். இதில் எப்ரல்- 9, சிம்ம வாகனத்தன்று வரகரசிமாலை போடுதல் சிறப்பாக நடைபெறும். வரகரசி மாலை என்பது வரகு என்னும் தானியத்தை ஊறவைத்து பக்குவப்படுத்தி மாலையாகக் கோர்த்து அம்மனுக்கு சாற்றுவதாகும். ஏப்ரல்- 11, வெட்டுக் குதிரை வாகனத்தன்று, வெண்ணெய்த் தாழி எனப்படும் நவநீத சேவையும் 12 ஆம் தேதி பெருந்திருவிழா அன்று மாவிளக்கு போடுதலும் நடைபெறும். பல்லாயிரக் கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டு மாவிளக்கு போடுவதே அம்பிகையின் பெருமைக்கு சாட்சி! ஏப்ரல் 13, 14 ஆம் தேதிகளில் தேர் திருவிழா நடைபெறும். 15 ஆம் தேதி அபிஷேக ஆராதனைகளுடன் விழா இனிதே முடிவடையும்.

"தன்னை நாடி வரும் அடியவர்க்கெல்லாம் நலம் தருவதில் எந்தக் குறையும் வைப்பதில்லை அன்னை நாடியம்மன்' என்கின்றனர் பட்டுக்கோட்டை பகுதி மக்கள். 
தொடர்புக்கு: 94437 53808 / 90475 19899.
- என். பாலசுப்ரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com