சேவை செய்ய ஓய்வு ஏது?

பிற உயிர்களை தம் உயிர் போல் நேசித்துச் சேவை செய்ய முன்வருபவர்கள்தான் உண்மையிலேயே தேவனின் பிள்ளைகள்.
சேவை செய்ய ஓய்வு ஏது?

பிற உயிர்களை தம் உயிர் போல் நேசித்துச் சேவை செய்ய முன்வருபவர்கள்தான் உண்மையிலேயே தேவனின் பிள்ளைகள். சேவை செய்வதற்குக் காலமோ; நேரமோ; இடமோ தேவையில்லை. ஒருவருக்குச் சேவை மனப்பான்மை தோன்றுவதற்குப் பிறவியும் மனமும்தான் முக்கிய காரணமாகத் திகழ்கின்றன. 

கிருஸ்துவானவர் ஓர் ஓய்வு நாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே சென்று அவர் போஜனம் (உணவு) பண்ணும்படிக்குப் போயிருந்தார். அப்போது, அங்கு நீர்க்கோர்வை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோ என்று ஜனங்கள் அவர் மீது நோக்கமாயிருந்தார்கள். 

இயேசுவானவர், நியாய சாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து "ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா?' என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது, இயேசு, நீர்க்கோர்வையுள்ள அம் மனுஷனை அழைத்துக் குணப்படுத்தி அனுப்பிவிட்டு, அவர்களைப் பார்த்து, "உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வு நாளிலே துரவிலே (பள்ளம்) விழுந்தால், அவன் அதை உடனே தூக்கி விடானோ?'' என்றார். அதற்கு அவர்கள் ஒன்றும் பேச முடியாது இருந்தார்கள், இவ்வாறாக, முதல் நாளிலே ஓர் ஓய்வு நாளில் இயேசு ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணிக் கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் நிமிர முடியாத கூனியாக இருந்தாள். 

இயேசு, அவளைக் கண்டு தம்மிடத்தில் அழைத்து, "ஸ்திரீயே! உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய்!'' என்று சொல்லி, அவள் மேல் தமது கைகளை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து தேவனை மகிமைப் படுத்தினாள் (லுக்கா 13:13).

இயேசு அவளை ஓய்வு நாளிலே குணமாக்கியதால், ஜெப ஆலயத் தலைவன் கோபமடைந்து ஜனங்களை நோக்கி, "வேலை செய்கிறதற்கு ஆறு நாள்கள் உண்டே. அந்த நாள்களிலே நீங்கள் வந்து குணமாக்குங்கள். ஓய்வு நாளிலே அப்படிச் செய்யலாகாது'' என்றான்.

கர்த்தர் அவனுக்குக் கூறலானார். "மாயக்காரனே! உங்களில் எவனும் ஓய்வு நாளில் தன் எருதையாவது கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டுபோய் அதற்கு தண்ணீர் காட்டுகிறதில்லையா? இதோ! சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிராகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வு நாளில் இந்த கட்டிலிருந்து அவிழ்த்து விட வேண்டியதில்லையா?'' என்றார்.

அவர் (இயேசு) இப்படிச் சொன்னபோது அவரைப் பகையாளியாகப் பார்த்த அனைவரும் வெட்கப்பட்டார்கள்.
- முனைவர் கா. காளிதாஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com