திருவரங்கத் திருப்பங்கள்! ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு தரிசனம்

ராமானுஜர் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் ஏற்று, பல புதிய நற்செயல்களைச் செய்தார். அவ்வூரில் உரிமை கொண்டு
திருவரங்கத் திருப்பங்கள்! ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு தரிசனம்

குறுந்தொடர்: 7 தொடர்ச்சி..
ராமானுஜர் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் ஏற்று, பல புதிய நற்செயல்களைச் செய்தார். அவ்வூரில் உரிமை கொண்டு இருந்தவர்களும் கோயிலை தங்களுக்கு ஏற்றபடி நிர்வாகத்தை நடத்தி வந்த சிலருக்கும் உடையவரின் சீர்திருத்தங்கள் மனத்தாங்கலை உண்டாக்கியது. எம்பெருமானாரை வெளிப்படையாக எதிர்க்காமல் மனத்துள் பகையை மறைத்து வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தனர். ராமானுஜர் வழக்கமாக மாதுகரம் பெற்றுவரும் வரும் ஏழு வீடுகளில் ஒன்று கோயில் ஊழியர் ஒருவருடையது. அவர் வீட்டுக்கு மாதுகரத்தில் விஷத்தைக் கலந்து அவரைக் கொல்ல ஏற்பாடு செய்தனர்.

ஒருநாள், மாதுகரத்திற்கு வந்தபோது கோயில் ஊழியர் ஒருவரின் மனைவி நஞ்சு கலந்த அன்னத்தை அவர் கலத்தில் இட்டாள். அவளின் வழக்கமான நடவடிக்கை மாறுபாடாக  இருந்ததைக் கண்டு சந்தேகப்பட்டார் ஜீயர். காவிரிக்கரை சென்றதும் கலத்தில் விழுந்த அவ்வுணவைப் பிரித்து, காக்கைக்கு வைக்க, கவ்விய காக்கை தலை சுற்றி கீழே விழுந்தது. நஞ்சுணவை உண்ணாமல் புதைத்து விட்டு நீரில் கழுவி, சில நாள்கள் மாதுகரத்துக்குச் செல்லாமல் உபவாசம் கிடந்தார் எம்பெருமானார். அவரைக் கொல்ல நடந்த சதி திருக்கோஷ்டியூர் நம்பியால் முறியடிக்கப்பட்டு கிடாம்பி ஆச்சான் என்பவர் அவருக்கு தினமும் பிரசாதம் செய்து பரிமாறும் பணியை மேற்கொண்டார்.

ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு ஸ்ரீ வைணவம் நாளுக்கு நாள் ஓங்கி வளருவது கண்டு, பல சமயத்தவர்களும் வாதப்போர் புரிந்து ராமானுஜரை வீழ்த்த எண்ணினர். மஹாவித்வான் யக்ஞமூர்த்தி என்பவர், கோயில் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்த உடையவரைத் தன்னிடம் தர்க்கம் செய்ய அழைத்தார். தர்க்கத்தில் தாம் வெற்றி பெற்றால் வைணவத்தைப் பற்றி நினைப்பதையே கைவிட வேண்டும் என்ற நிபந்தனையில் தர்க்கம் பதினெட்டு நாள் செய்து, முடிவு செய்ய கெடு குறிக்கப்பட்டது.

பாரதப்போர் போல வாதப்போர் துவங்கி பதினாறு நாள்கள் யக்ஞமூர்த்தி தனது ஆரவாரமான மாயாவாதச் சிறப்புக்களின் மூலம் அனைவரையும் மயங்க வைத்தார். ஆனால் ராமானுஜர் வாதங்கள் அடக்கமாய் தெளிவாயிருந்தன. 17 ஆம் நாள் மடத்துக்குத்  திரும்பிய யதிராஜர் தம் திருவாராதனப்  பெருமாள் வரதராஜரை வணங்கினார். ஆழ்வார் தொடங்கி ஆளவந்தார் வரை இத்தனை ஆண்டுகள் ஓராண் வழியாக நிலைத்து வந்த இந்த தரிசனம் என்னும் "வைணவ மார்க்கம் என்னால் தோற்கலாமா' என்றவாறே கவலையுடன் தூங்கிப்போனார். பேரருளாளன் அன்றிரவு கனவில் தோன்றி, "கவலைப்படாதீர் உடையவரே, உமக்கு ஒத்த ஒரு சீடனை உமக்கு உண்டாக்கித் தந்தோம். உம்முடைய பரமாச்சார்யர் அருளிச் செய்த மாயாவாத கண்டனத்தைச் சொல்லி, அவனை வெற்றி கொள்ளும்' என்று கூறி அருளாளன் மறைந்தார்.

மறுநாள் காலை தெளிவு பிறந்த மனத்தோடு சென்ற ராமானுஜரின் திவ்ய ஒளியையும் மனோதிடம்மிக்க கம்பீர நடையையும் கண்டு யக்ஞமூர்த்தி மனதுக்குள் தளர்ந்துவிட்டார். "என் பக்குவமில்லாத கல்விச் செருக்கு என்னைக் கெடுத்துவிட்டது. உண்மை உணராது குழந்தைபோல் செயல்பட்டேன். உம்மைச்சரண் அடைகிறேன். அடியேனை ஆட்கொண்டருளும்'' என்று காலில் விழுந்து சரணடைந்தார். உடையவரும் இரவு ஆண்டவன் சொன்னதின் பொருளுணர்ந்து அவரின் பெயரை "அருளாளப் பெருமாள் எம்பெருமானார்' என்று திருநாமம் சூட்டி ஏகதண்டத்திற்கு பதிலாக முக்கோல் தந்து முனிவராக்கினார். காவேரிக்கரையில் அவருக்கு ஒரு மடமும் கட்டிக் கொடுத்து ஆழ்வார்களின் அருள் செயல்களைப் பயிற்றுவிக்கும் பணியளித்தார். ஞானமுதிர்ச்சி பெற்று, அரியநூல்களை இயற்றி பின்னர் தேவராஜமுனி என அழைக்கப்பட்டார். 

உலகோர் அதினிலும் எளிய வழியைப் பின்பற்ற உரியநெறியை அவரது கருணையுள்ளம் நாடியது. அதன் விளைவே முழுசரணாகதி தத்துவமாகும். ராமானுஜர் தன்னை எய்தினார்க்கு உரிய வழியைக் காட்டுவது என்பதும் எம்பெருமானையும் விடுத்து எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று பற்றுவதே சரம உபாயமாயிற்று. இந்த எளிய வழியைப்பற்ற ஏராளமானோர் ஸ்ரீரங்கம் வந்து கூடினர். "உய்ய ஒருவழி; உடையவர் திருவடி' என்பது உறுதியாயிற்று.
- இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com