சிலிர்க்க வைக்கும் சிரசுத் திருவிழா!

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று கெங்கையம்மன் கோயில் சிரசுத் திருவிழா.
சிலிர்க்க வைக்கும் சிரசுத் திருவிழா!

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று கெங்கையம்மன் கோயில் சிரசுத் திருவிழா. பிரசித்தி பெற்ற இத் திருவிழா, இம்மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்திருக்கோயில் குடியாத்தம் கோபாலபுரத்தில் கவுண்டன்யா நதியின் கரை ஓரத்தில் அமைந்துள்ளது. 

முகப்பில் வேப்பமரமும், பின்புறம் அரச மரமும் கொண்டு அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயிலின் மூலவர் கெங்கையம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்த வண்ணம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மன் சந்நிதியைச் சுற்றிலும் துர்கை, பைரவி, வராகி, தாட்சாயிணியும், முகப்பில் ஒருபுறம் விநாயகரும், மற்றொருபுறம் பாலமுருகர் சந்நிதியும் அமைந்துள்ளன. அம்மன் சந்நிதியின் பின்புறம் நாககன்னிகளும், நாக தேவதை சிலையும் அமைந்துள்ளது. 

விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி மீண்டும் உயிர்ப்பித்த புராணக் கதையை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் வைகாசி 1-ஆம் தேதி இத்திருக்கோயிலில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுகிறது. 

விதர்ப தேசத்தை ஆண்டுவந்த ரைவதன் என்ற அரசன் மழலைச் செல்வம் வேண்டி பிரம்மனை நோக்கிக் கடும் தவமிருந்து அவர் அருளால் ரேணுகா தேவியை மகளாகப் பெற்றெடுத்தான். அவள் வளர்ந்து தக்க பருவம் எய்தியவுடன் தனக்கு வேண்டிய கணவரை தானே தேர்ந்தெடுக்கிறேன் என்று கூறி மூவுலகங்களையும் சுற்றி வர படையுடன் புறப்பட்டாள். இடையில் ஜமதக்னி முனிவரே தன் கணவர் என்ற அசரீரி வாக்குக்கிணங்க நேராக ஜமதக்னி முனிவரைக் காண வந்தாள். தன் ஞானதிருஷ்டியால் ரேணுகையின் பிறப்பறிந்த ஜமதக்னி முனிவர் அவளைத் திருமணம் செய்துகொண்டார். அது முதல் முனிவரின் யாகத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வந்தாள். 

தினமும் அதிகாலையில் எழுந்து ஆற்றுக்குச் சென்று நீராடியபின், கணவரை நினைத்து, இறைவனை துதித்து ஆற்று மணலால் ஒரு குடம் செய்வாள். அவளுடைய கற்பின் வலிமையால் இது அவளுக்கு சாத்தியமாயிற்று. அக்குடத்தில் ஆற்று நீரை நிரப்பியபின் தியானிக்க, அங்கு ஒரு நாகம் தோன்றும். அந்நாகத்தை சுருட்டி சும்மாடாக தலையில் வைத்துக்கொண்டு, அதன் மீது நீர் நிரம்பிய மண் குடத்தை எடுத்து வந்து கணவரின் பூஜைக்கு கொடுப்பாள். இதற்கிடையில் ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் நான்கு குழந்தைகள் பிறந்தன. நான்காவதாகப் பிறந்தவரே பரசுராமர்! 

ஒரு நாள் வழக்கம் போல் ரேணுகா தேவி விடியற்காலையில் ஆற்றுக்கு சென்று நீராடுகையில் விண்ணில் பாடிக்கொண்டே பறந்து செல்லும் கந்தர்வனின் பிம்பத்தை நீரில் கண்டு அவன் அழகில் மனசஞ்சலமடைந்தாள். பின்னர் சுதாரித்துக்கொண்டு மண்பானை செய்ய முயல, முடியாமற் போனது. வேறு வழியின்றி தனது குளியலை முடித்துக்கொண்டு ஆஸ்ரமம் திரும்பி தன் கணவரிடம் நடந்ததைக் கூறினாள்.

நடந்ததை தன் ஞானதிருஷ்டியால் அறிந்த ஜமதக்னி முனிவர் தன் மனைவி மனத்தளவில் கற்பு நெறி தவறிவிட்டாள் என்று கருதி தன் பிள்ளைகளிடம் ரேணுகாவின் சிரத்தை அறுக்குமாறு கேட்டுக்கொண்டார். முதல் மூன்று பிள்ளைகளும் ஒத்துழைக்காததால், அவர்களை சபித்துவிட்டு, பரசுராமரிடம் அப்பணியை ஒப்படைத்தார். தன் மகனுக்கு பழிச்சொல் ஏற்படுவதை விரும்பாத ரேணுகா, அவ்விடத்திலிருந்து ஓடி, இடுகாட்டு வெட்டியான் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தார். அவளைத் தொடர்ந்த பரசுராமர், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றபடி உடனே தன் கோடலியால் அன்னையின் சிரத்தை வெட்ட முயல, வெட்டியானின் மனைவி அவனைத் தடுத்தாள். அதனால் ஆத்திரம் கொண்ட பரசுராமர், முதலில் வெட்டியான் மனைவியின் தலையைத் துண்டித்து பின் ரேணுகாவின் தலையைத் துண்டித்தார். 

பின் தந்தையிடம் சோகமே வடிவாக வந்து நிற்க, மகனின் வேதனையின் காரணமறிந்த முனிவர் அவரை சமாதானப்படுத்தி, அவருக்கு வேண்டும் வரத்தைக் கொடுப்பதாகக் கூற, உடனே பரசுராமர் தன் தாய்க்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டுமென்று கூற, அவ்வாறே ஆகுக என்று வரமருளிய முனிவர், பரசுராமரிடம் தன் கமண்டல நீரைத் தந்து, ரேணுகா தேவி வெட்டுப்பட்டு கிடக்கும் இடம் சென்று தலையுடன் உடலை பொருத்தி நீரைத் தெளிக்க அன்னை உயிர் பெறுவாள் என்று கூறினார்.

ஜபம் செய்த கமண்டல ஜலத்துடன் தன் தாய் வெட்டுண்டு கிடந்த இடத்தை அடைந்த பரசுராமர், தன் தாய் சீக்கிரம் உயிர் பிழைக்க வேண்டுமென்ற பதட்டத்திலும் அவசரத்திலும் தன் தாயின் தலையுடன் அங்கு வெட்டுண்டு கிடந்த வெட்டியான் மனைவியின் உடலைப் பொருத்தியும், தாயின் உடலுடன் அந்த பெண்ணின் தலையைப் பொருத்தியும் நீர் தெளிக்க இருவரும் உயிர் பெற்று எழுந்தனர். இந்த புராணக் கதையை விளக்கும் வகையில், கெங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 17 ஆம் தேதி, காப்புகட்டுதலுடன் துவங்கும் இத்திருவிழாவில் திருக்கல்யாண வைபவமும், சித்திரை மாதம் 30 ஆம் தேதி தேர் திருவிழாவும் நடைபெறும். வைகாசி முதல் நாள் சிரசு திருவிழாவும் வைகாசி 3 ஆம் நாள் புஷ்ப பல்லக்கும் சிறப்பாக நடைபெறுகிறது. வைகாசி முதல் நாள் அதிகாலை தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிரசு, பக்தர்கள் புடைசூழ தாரை தப்பட்டைகள் முழங்க எடுத்துவரப்பட்டு, கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்படும். அங்கு அலங்கரிக்கப்பட்ட உடலில் அம்மன் சிரசு பொருத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மனுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஒரு நாள் திருவிழாவைக் காண வேலூர் மாவட்ட மக்கள் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கிறார்கள். குடியாத்தம் நகரமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். கோலாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் ஊர்வலத்தில் இடம் பெறும். இத்திருவிழாவில் கூழ்வார்த்தலும், சூரைத்தேங்காய் உடைத்தலும் மிக பிரபலம். அம்பிகையை வேண்டி, தங்கள் வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிரசு ஊர்வலத்தின்போது வழி நெடுகிலும் சூரைத் தேங்காய் உடைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சிரசு ஊர்வலத்தில் மட்டும் சுமார் 3 டன் தேங்காய் உடைக்கப்படுகிறது. கோயிலில் மட்டும் சுமார் 5 டன் தேங்காய் பக்தர்களால் உடைக்கப்படுகிறது.

பின்னர் மீண்டும் சிரசு எடுக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சுண்ணாம்பு பேட்டை சலவை படித்துறையில் சிரசு ஊர்வலம் நிறைவடைகிறது. மீண்டும் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் அம்மன் சிரசு வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். பின்னர் அம்மன் உடல் கரைப்பு நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவும், அதைத் தொடர்ந்து வைகாசி 3 ஆம் நாள் புஷ்பப்பல்லக்கு விழாவும் நடக்கிறது. பின்னர் விடையாற்றி உற்சவத்துடன் கெங்கையம்மன் விழா நிறைவுபெறுகிறது. 
- ரஞ்சனா பாலசுப்ரமணியம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com