யானை தாங்கும் திருக்கோயில்!

ஒருசமயம், சிவபெருமான் வெண் நாவல் மரத்தினடியில் எழுந்தருளியபோது, மரத்தின் சருகுகள் சிவபெருமான் மீது விழாதவாறு சிலந்தி ஒன்று

ஒருசமயம், சிவபெருமான் வெண் நாவல் மரத்தினடியில் எழுந்தருளியபோது, மரத்தின் சருகுகள் சிவபெருமான் மீது விழாதவாறு சிலந்தி ஒன்று வலை பின்னிக் காத்தது. யானை ஒன்றும் இறைவனை வழிபட விரும்பி நீரால் அபிஷேகம் செய்து வணங்கி வந்தது. தினமும் சிலந்தி வலையை பின்ன, யானை கோபத்துடன் வலையை பிய்த்து எறிந்து நீரால் அபிஷேகம் செய்தது. இப்படியே நடந்துவர, கோபம் கொண்ட சிலந்தி யானையின் தும்பிக்கையில் புகுந்தது. யானை கோபத்தால் தும்பிக்கையை ஓங்கி அடித்தது. இப்போரில் இரண்டுமே இறந்தன. இந்நிகழ்வு நடைபெற்ற தலம், திருச்சிக்கு அருகே உள்ள திருவானைக்காவல்!

சிவனருளால் அந்த சிலந்தியே பிறகு கோட்செங்கட் சோழனாகப் பிறப்பெடுத்தது. யானையால் தீங்கு ஏற்படக்கூடாது என்று எண்ணிய அச்சோழன் எழுபது மாடக்
கோயில்களை கட்டுவித்ததாக வரலாறு கூறுகிறது. அந்த வகையில், யானை ஏறாத் திருக்கோயிலாக முதல் மாடக் கோயிலாக விளங்குவது இந்த அரங்கநாதபுரம் திருக்கோயிலாகும். 

இத்திருக்கோயிலின் மூலவர், திருவனேஸ்வரர், அம்பாள் ஸ்ரீ காமாட்சி அம்மன் என்பதாகும். இறைவன் திருவனேஸ்வரரின் நெற்றியில் சிறிய வடிவில் பொட்டு போல யானையின் திருவுருவம் இருப்பதைக் காணலாம். இத்திருகோயிலின் எதிரே வஜ்ர தீர்த்த திருக்குளம் அமைந்துள்ளது. தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை, ஒருமுறை நேமம் திருத்தலத்தில் இறைவனை மெய்மறந்து வழிபட்டுக் கொண்டிருந்தது. அதைக் காணாது தேடித் திரிந்த தேவேந்திரன் கோபத்தோடு ஐராவதத்தின் மீது தன்னுடைய வஜ்ராயுதத்தை ஏவினான். அவ்வஜ்ராயுதம், சிவபெருமானின் ஓங்கார ஒலியால் தடுக்கப்பட்டு ஓர் இடத்தில் விழுந்தது. விழுந்த இடத்தில் நீரூற்று ஏற்பட்டு பெரிய குளமானது. இதுவே வஜ்ர தீர்த்தமாகும்.  தவறை உணர்ந்த தேவேந்திரன் இத்தலத்தில் ஒரு கிணறு தோண்டி, அத்தீர்த்தத்தினால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். அதுவே இந்திர கூபம்.

இனம் புரியாத நோயுள்ளவர்கள் முதலில் இந்திரகூபத்தில் குளித்து, பின் வஜ்ர தீர்த்தத்தில் மூழ்கி இறைவன்- இறைவியை பூரட்டாதி நட்சத்திரத்தில் வழிபட்டால் நோய் தீரும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய ஏற்ற தலம் இது. 

தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது அரங்கநாதபுரம் திருவனேஸ்வரர் திருக்கோயில்.
தொடர்புக்கு: 0431- 2710444.
- மழப்பாடி ராஜாராம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com