
பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்கும் வழி!
Published on : 19th May 2017 12:29 PM | அ+அ அ- |

பாவத்தில் விழுந்து புரண்டு கொண்டிருக்கும் மனிதர், அதிலிருந்து தாங்கள் வெளிவர வேண்டும் என்று நினைத்தாலும் வெளியே வரமுடியாத அளவு பாவம் அவர்களை இழுக்கிறது. ஒருவேளை குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையாகும்படி வேறுபழக்கம் ஆரம்பித்து, அதையும் விடமுடியாதபடி தவிப்பவர் ஏராளம். சிகரெட்டை விடவேண்டுமென்று தாங்களாகவே முயன்று, வேறு கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள் உண்டு. போதை பழக்கத்திலிருந்து வெளியே வரும்படி ஏங்கும் வாலிபர்கள் உண்டு, அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், தாங்கள் வெளியே வருவதை விரும்புவார்கள், ஆனால் விடுதலை பெறவோ அவர்களால் முடிவதில்லை. இறுதியில் அவை மரண வாசல்களாக மாறிவிடுகின்றன. பாவம் செய்வதற்கு வழிகள் ஏராளமாய் இருக்கின்றன. ஆனால் புண்ணியம் செய்வற்கு வழிகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
இதையே பரிசுத்த வேதாகமம் மத்தேயு 7:13,14- இல், இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
இயேசுகிறிஸ்து மேற்சொன்ன வசனத்தில் இரண்டு வாசல்களை குறித்து விளக்குகிறார். ஒன்று நரகத்துக்கு செல்லும் வழி, மற்றது பரலோகத்திற்கு செல்லும் வழி. இந்த நரகத்துக்கு செல்லும் வழியில், இது நரகத்திற்கு செல்லும் வழி என்று போடப்பட்டிருந்தால் யாரும் அதன் உள்ளே செல்ல முயல மாட்டார்கள். தானாகவே நரகத்திற்குச் செல்வதை யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால், பிசாசானவன் தன்னிடம் உள்ள சிற்றின்பங்களை அந்த நரகத்துக்கு செல்லும் வழியில் போடுகிறான். அவன் எதற்கு போடுகிறான் என்று அறியாதபடி நாம் அவன் கொடுக்கும் சிற்றின்பத்திற்கு அடிமையாகி, நரகத்திற்கு நேராக சென்று கொண்டிருக்கிறோம். எத்தனை பரிதாபம்? பிசாசானவன், சிற்றின்பங்களை காட்டி, அந்த வழிக்கு நேரே இழுத்து சென்று கொண்டிருக்கிறான். அவனது சிற்றின்பத்திற்கு தங்களை இழந்து, அவனுக்கு பின்னால் சென்று கொண்டிருப்பவர்கள்தான் அதிகம்.
இன்றைய நாம் கர்த்தராகிய இயேசு கற்பித்த வழியில் நடக்க வேண்டும், அவருடைய சித்தத்தின்படி செய்ய வேண்டும் என்று சொன்னால், அதன்படி செய்யவும் பிரயாசப்படவும் விரும்புவதில்லை. தங்களுக்கு சுகமான, தங்கள் இருதயம் விரும்புகிறபடி, சொல்லுகிறவர்களையே மனிதரின் இருதயம் நாடுகிறது. அதன்வழியே செல்லவே அநேகர் விரும்புகிறோம். ஆனால் அதன் முடிவோ அபாயமாக இருக்கிறது. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத்தேயு 7:21) என்று இயேசு கிறிஸ்து தெளிவாக இங்கு கூறுகிறார். ஆகவே இயேசு கற்பித்த நல் வழியில் நடப்போம் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்போம்.
- ஒய்.டேவிட்ராஜா