எங்கும் ஏகன் அல்லாஹ்

அங்கிங்கெணாதபடி எங்கும் இருக்கிறான் இறைவன் என்னும் கருத்துக்கு மாற்று கருத்து மாற்றாரிடமும் இல்லை
எங்கும் ஏகன் அல்லாஹ்

அங்கிங்கெணாதபடி எங்கும் இருக்கிறான் இறைவன் என்னும் கருத்துக்கு மாற்று கருத்து மாற்றாரிடமும் இல்லை. இக்கருத்தின் அடிப்படையில் அமைந்ததே எங்கும் ஏகன் அல்லாஹ் என்னும் இத்தலைப்பு. இறைவன் நமக்கு அருகில் நம்முடன் நெருங்கி இருப்பதை இயம்பும் இறைமறை குர்ஆனின் வசனங்கள். "நீங்கள் எங்கிருப்பினும் அல்லாஹ் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான்'' (57-04). "அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன்'' (2-284, 3-29) "நீங்கள் செய்யும் மறைவான அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்'' (2-271) "அல்லாஹ் அவனின் அடியார்களை உற்று நோக்கியவனாக இருக்கிறான்'' (3-20). "நாம் மனிதனைப் படைத்தோம். அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் அவனின் பிடரி நரம்பை விட நாம் அவனுக்கு அருகில் இருக்கிறோம்'' (50-16), "(நபியே) உங்களிடம் என் அடியார்கள் என்னைப் பற்றி கேட்டால் நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடை அளிப்பேன். ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பவும். அவர்கள் நேரான வழியை அடைவார்கள் (2-186). "இறக்கும் நிலையில் உள்ளவனுக்கு அருகில் இருக்கின்றோம். நீங்கள் பார்ப்பதில்லை'' (56-85). சிரமத்தில் சிக்கிய மனிதனின் அபய குரலைக் கேட்டு அல்லாஹ் அவனின் சிரமத்தை நீக்குவான்'' (27-62).

அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் மக்கத்து குறைஷிகளின் கொடூர தொல்லைகளை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணம் புறப்பட்டனர். மக்காவிற்குத் தெற்கே மூன்று மைல் தொலைவில் இருந்த தௌர் குகையில் தங்கினர். கோமான் நபி (ஸல்) அவர்களைக் கொல்ல நினைத்து ஏமாற்றம் அடைந்த கொலைகாரர்கள் பல குழுக்களாகப் பிரிந்து பல குன்றுகளிலும் தேடினர். ஒரு குழு தௌர் குகையை அடைந்து வாயிலில் நின்றது. அவர்கள் உள்ளே சென்று பார்க்கலாமா? என்று பேசியதைக் கேட்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் நாம் இருவர் தானே இங்கு இருக்கிறோம். கொலை வெறியர் பெருங்குழுவாக நிற்கின்றனரே என்றார்கள். ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் "நாம் இருவரல்ல. நம்மோடு அல்லாஹ் இருக்கிறான். அஞ்சற்க!'' என்றுரைத்து அச்சம் தவிர்த்தார்கள். கோமான் நபி (ஸல்) அவர்கள் கூறிய பதிலைக் குர்ஆனின் 9-40 ஆவது வசனம் உரைக்கிறது.

தௌர் குகை வாயிலில் சிலந்தி வலையையும் புறா கூட்டையும் கண்டு உள்ளே மனிதர்கள் இருக்க மாட்டார்கள் என்று கொலை வெறி கூட்டம் திரும்பிய நிகழ்ச்சியைச் சிலந்தி நூற்ற வலையாலும் புறா கட்டிய கூட்டினாலும் அல்லாஹ் அளித்த பாதுகாப்பு உயர்ந்த கோட்டைகளைக் காட்டிலும் மேலான பாதுகாப்பாகி விட்டது என்று புர்தா ஷரீப் என்ற அரபி காவியத்தில் பூசரி இமாம் (ரஹ்) கவினுற காட்சி படுத்துகிறார்கள்.

இந்நிகழ்ச்சியைச் சதாவதானி செய்குதம்பி பாவலர் செய்தமிழில் பாடுகிறார்.
"ஒன்னலரோ பற்பலர்நா மோவிருவர் உற்றடந்தா
லென்ன செய்வதென்ற ழுங்க இல்லையில்லை யாமூவர்
பன்னரிய யீசனும்நம் பக்கமுளன் அஞ்சலீரென்
நுன்னரிய வாய்மைசொற்ற ஊக்கநிலை நோக்கமோ''
"நாங்கள் கைபர் போருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். நாங்கள் மேட்டின் மீது ஏறும்பொழுதும் கணவாய்களில் இறங்கும்பொழுதும் "அல்லாஹ் அக்பர்' (இறைவன் மிக பெரியவன்) என்று உரக்க கூறினோம். எங்கள் அருகில் வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "உங்களை நீங்கள் கட்டுப்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் காது கேளாதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. நன்கு செவியுறுபவனையும் நானிலத்தில் நடப்பதை நன்கு அறிபவனையும் அழைக்கிறீர்கள், உங்களில் ஒருவர் தனது வாகனமான ஒட்டகத்திற்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்களோ அதனினும் நெருக்கமாக உங்களுடன் இருக்கிறான் அல்லாஹ்'' அறிவிப்பவர். அபூமூசா அல் அஷ் அரி (ரலி) நூல்- புகாரி.

"அல்லாஹ் மறைந்தவன் அல்ல. மறக்கப் பட்டவன் அல்ல. உன்னை நீ பக்குவப்படுத்தி கொண்டால் உன் அகப் பார்வையால் அவனைக் காண்பாய்'' என்று இப்னு அதாவுல்லா இஸ்கந்தரி (ரஹ்) அறிவிப்பது ஹிகம் என்ற நூலில் உள்ளது. மகான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நம் துன்பங்களுக்கான காரணத்தைக் கூறுகிறார். "நம் சகல கேடுகளுக்கும் மூல காரணம் இறைவனை விட்டு விலகி தொலைவில் கிடப்பதும் இறைவன் அல்லாதவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பதும்தான்''.

இறைவனை விட்டு விலகாதிருக்க வீணான செயல்களில் ஈடுபடாதிருக்க மனிதர்களை எச்சரிக்கிறது புனித குர்ஆனின் 4-1 ஆவது வசனம். "மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயம் அல்லாஹ் உங்களை கண்காணிக்கிறான்''. இக் குர்ஆன் கூற்றுப்படி அல்லாஹ், நம் அருகில் கண்காணிப்பதை அறிந்து புரிந்து உணர்ந்து அல்லாஹ்விற்கு அஞ்சி அருமறை குர்ஆன் கூறும் அறநெறியில் ஓழுகி ஓப்புயர்வற்று செப்பமுற வாழ்ந்து காட்டிய வள்ளல் நபி (ஸல்)
அவர்களின் வழியில் வாழ்வோம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com