நிறைவான குடும்ப வாழ்வருளும் குன்னத்தூரான்!

வேலூர் மாவட்டம், அரக்கோணத்திலிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் சுமார் 16 கி.மீ. தொலைவில் நெமிலி வட்டத்தில் உள்ளது
நிறைவான குடும்ப வாழ்வருளும் குன்னத்தூரான்!

வேலூர் மாவட்டம், அரக்கோணத்திலிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் சுமார் 16 கி.மீ. தொலைவில் நெமிலி வட்டத்தில் உள்ளது குன்னத்தூர் கிராமம்! 14 ஆம் நூற்றாண்டில் கற்றறிருந்த வைணவப் பெரியோர்கள் வாழ்ந்திருந்து, சிறந்த வைணவ கேந்திரமாக திகழ்ந்த பெருமையுடையது. வைணவ ஜகதாசார்யரான பகவத் ராமானுஜரின் முக்கிய சீடர்களில் ஒருவரான திருமலை அனந்தாழ்வான் சந்ததியில் தோன்றிய திருமலை அனந்தான்பிள்ளை அனந்தாச்சார்யர் திருப்பதியிலிருந்து இவ்வூருக்கு குடிபெயர்ந்து ஏற்கெனவே சிதிலமடைந்த நிலையில் இருந்த ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தை புணரமைத்து, விக்ரங்கள் பிரதிஷ்டை செய்து பெருமாளுக்கு நித்ய கைங்கர்யம் செய்து வந்தார்.

சுமார் 700 ஆண்டுகள் பழைமையானதாய், கருங்கல் கட்டட அமைப்புடன் நுழைவுவாயிலை அடுத்து பலி பீடம், துவஸ்தம்பம், பெரிய திருவடிசந்நிதியை அடுத்து மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறையுடன் கூடியதாய் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.

இங்கு மூலஸ்தானத்தில் ஸ்ரீநிவாஸன் என்ற திருநாமத்துடன் மூலவர் மட்டுமே சந்நிதிகொண்டுள்ளது சிறப்பு. தாயார் அமிர்தவல்லி என்ற திருநாமத்துடன் அமர்ந்த கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றாள். இதைத் தவிர, ஆண்டாள் நாச்சியாருக்கும், ஜனார்த்தன பெருமாளுக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. பக்த ஆஞ்சநேயரும் தனி சந்நிதியில் அருள்பாளிக்கின்றார்.

தாயாருக்கும், உபய நாச்சியார்மார்களுக்கும், பெருமாளுக்கும் அமைந்துள்ள உற்சவ திருமேனிகள் அக்காலத்தில் செய்யப்பட்டிருந்தாலும், இன்றும் புதியதோற்றத்துடன் பரிமளிக்கின்றன. மூலஸ்தானத்தில் பல்வேறு சாளக்கிராம கற்கள் பூஜிக்கப்படுகின்றன. இவ்வாலயத்தின் தனிச்சிறப்பே, பிரத்யேகமாக காணப்படும் காளிங்க நர்த்தன கண்ணனின் கையில் நவநீதம்
(வெண்ணெய்) இருப்பதுதான்.

ஆசார்யர்கள், ஆழ்வாராதிகள் வரிசையில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், உடையவர் உற்சவ விக்ரகங்கள் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. தற்போது புதியதாக குன்னத்தூர் ஐயன் என்று பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதரே திரு உள்ளம் உகுந்து பட்டப்பெயர் சூட்டிய திருமலை அனந்தான் பிள்ளை வரதாச்சார்யார் ஸ்வாமிகளுக்கு (இவ்வூரில் பிறந்தவர்) கற்திருமேனி விக்ரகம் பிரதிஷ்டையாக உள்ளது. இவ்வாலயத்தில் சித்திரையில் ஆரம்பித்து பங்குனி வரை நிகழும் முக்கியமான வைணவ உற்சவத்தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. வாகனங்கள் இல்லாததால் பிரம்மோற்சவம் தடைபட்டு 50 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது.

தன்னை நாடி தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருமணப்பேறு, மழலைப்பேறு, நல்கி நிறைவான குடும்பவாழ்வினை அருளுகின்றார் குன்னத்தூர் பெருமாள். தற்போது இவ்வாலயத்தில் பல திருப்பணி வேலைகள் மேற்கொள்ளவேண்டி 2016-ஆம் வருடம் பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. நூதன கொடிமரம், மடப்பள்ளி அமைத்தல், பழுதடைந்த விமானங்கள் செப்பனிடுதல் உட்பட பல்வேறு வேலைகள் திருமால் அடியார்கள் உதவியுடன் மிகுந்த சிரமத்துடன் நடைபெறுகின்றன.

இக்கோயிலில் 29.5.2017 ஆம் தேதி மஹாஸம்ப்ரோஷணம் நடைபெறுகின்றது. பழைமையான இவ்வாலய திருப்பணி கைங்கர்யத்தில் பக்தர்கள் பங்கு கொண்டு பெருமாளின் அருளைப் பெறலாம்.

தொடர்புக்கு: ஆர். நித்தியக்கல்யாணம் ஐயங்கார்- 97897 77750 / 0-98494 64014.
- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com