பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

சித்தும் ஜடமும் கூடிய விவகாரமே மனம். சித்து ரூபமான மனதுக்கு பிரம்மம் எட்டும், ஜட ரூபமான மனதுக்கு பிரம்மம் எட்டாது.

• சித்தும் ஜடமும் கூடிய விவகாரமே மனம். சித்து ரூபமான மனதுக்கு பிரம்மம் எட்டும், ஜட ரூபமான மனதுக்கு பிரம்மம் எட்டாது. அகமுகப்பட்ட மனதுக்கு பிரம்மம் அறியப்படும். பகிர்முக மனதுக்கு பிரம்மம் அறியப்படாது.
- கைவல்ய நவநீதம்

• ஆமையைப் போல ஐம்புலன்களை அடக்கிய இடத்தில் ஒரு பெரிய சுகம் ஆரம்பமாகிறது. ஒரு மனிதன் வெளியிலே கண்டபடி அலைந்து திரியும்போது துன்பம் உண்டாகும். வீட்டில் போய் நிழலில் சற்று ஆறுதலாக உட்கார்ந்தவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா அதுபோல, புலன்கள் வெளிப்பட்டு உழலும்போது கவலை உண்டாகிறது. அவற்றை அகமுகப்படுத்தும்போது ஆறுதல் உண்டாகிறது. இதுவே மோட்சமாகிய பேரானந்தம்.
- கந்த புராணம்

• சிவ வழிபாட்டிற்குரிய மலர்கள் எட்டு. அவையாவன: 1.கொல்லாமை, 2. புலனடக்கம், 3. பொறுமை, 4. இரக்கம், 5. அறிவு, 6. மெய், 7. தவம், 8. பக்தி.
- சிவாகமங்கள்

• ஆத்மா பிறப்பு இல்லாதது. பிறப்பு இல்லாத காரணத்தால் அது இறப்பும் இல்லாதது. ஜனன மரணம் இல்லாத ஆத்மாவுக்குப் பிறப்பு, வளர்ச்சி, மாற்றம், குறைதல், மரணம் என்பவையும் இல்லை.
- வேதாந்தம்

• இச்சை இருக்கும் வரையில் உண்மையான சந்தோஷம் வராது. யாராலும் அடக்க முடியாத மனதை ஆசை அடக்கி விடுகிறது. தான் உயர்ந்த நிலைக்குப் போக வேண்டும் என்று நினைப்பவன், முதலில் பேராசையை விடவேண்டும். ஆசையற்ற நிலையே தீவிர வைராக்கியம் எனப்படும்.
- ஞானவாசிட்டம்

• மனிதன் பிறக்கும்போது, தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பித்ருக்களுக்கும் (முன்னோர்களுக்கும்) மக்களுக்குமாக நான்கு வகைகளில் கடன்பட்டிருக்கிறான். ஆண்டவன் கொடுக்கும் பொருளை, தன்னுடையது என்று கருதாமல் தேவர்களுக்கு அர்ப்பித்து வேள்விகளைச் செய்வதால் தேவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் தீருகிறது. வேதமாகிய செல்வத்தைப் பயிலுவதாலும் காப்பாற்றுவதாலும், ரிஷிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் தீருகிறது. இல்லறத்தில் நல்லறம் புரிந்து நல்ல மக்களைப் பெறுவதால், பித்ருக்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் தீருகிறது. மக்களுக்கு உடையும் உணவும் அளித்துக் காப்பதனால், ஒருவனின் வாழ்க்கை பயனுள்ளதாகிறது. இவ்விதம் நான்கு கடமைகளையும் நிறைவேற்றியவன், உலகிலுள்ள அனைத்தையுமே பெற்றவனாகிறான்.
- சதபதப் பிராம்மணம் 172

• சத்தியத்தினால் புனிதமாக்கப்பட்ட பேச்சையே ஒருவன் பேச வேண்டும். அவன் உள்ளத்தால் புனிதமானது என்று உணர்ந்த காரியத்தையே செய்ய வேண்டும்.
- பத்ம புராணம்

• பிரயாண காலத்தில் தன்னைவிட பெரியவரோ, தனக்கு ஒப்பானவரோ துணையாக வாராதிருந்தால், ஒருவன் தானே தனியாக நடப்பது சிறப்பாகும். பேதையர் துணை நல்ல துணையாகாது.
- தம்மபதம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com