கோள் இடர் நீக்கும் கோளிலி பெருமான்!

கந்தர்வனொருவன் சாபம் காரணமாக ஒரு குரங்காக உருப்பெற்று ஒரு வில்வமரத்தின் மேல் அமர்ந்திருந்தான்.
கோள் இடர் நீக்கும் கோளிலி பெருமான்!

கந்தர்வனொருவன் சாபம் காரணமாக ஒரு குரங்காக உருப்பெற்று ஒரு வில்வமரத்தின் மேல் அமர்ந்திருந்தான். குரங்கு அங்கும் இங்கும் தாவுகையில் வில்வ இலைகள் கீழே உதிர்ந்தன.  அவ்வமயம் லோகநாயகனும், நாயகியும் மரத்தின் அடியில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். தங்களை அர்ச்சிப்பது யாராக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் இருவரும் மேல் நோக்க, குரங்காக இருந்தவன் சாபம் நீங்கப்பெற்றவனாய் சுய உருவைப்பெற்றான்.  இறைவன், இறைவியை வணங்கினான். தன்னை அறியாமல் செய்த செய்கையானாலும், வில்வத்தால் அர்ச்சித்ததால் அடுத்த பிறவியில் புகழ்பெற்ற சூரிய வம்சத்தில் மன்னனாகப் பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் அவன் விரும்பியபடியே குரங்கு முகத்துடன் முசுகுந்தன் என்ற பெயருடன் அரசாண்டு வந்தான்.

இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்க அசுரர்களை வென்று தேவர்களுக்கு உதவினான். நன்றிக்கடனாக தேவேந்திரன் ஏதாவது பரிசு அளிக்க விரும்பினான். முசுகுந்த மன்னரும் தேவேந்திரன் தினமும் ஆராதிக்கும் சோமாஸ்கந்த மூர்த்தியை தரும்படி கேட்டுக் கொண்டான். அம்மூர்த்தியைப் பிரிய மனமின்றி தேவதச்சன் மூலம், தான் வழிபடும் மூர்த்தியைப் போன்றே அச்சாக மேலும் ஆறுமூர்த்திகளை உருவாக்கினான். முசுகுந்தனை நோக்கி ஏழு மூர்த்திகளில் ஒன்றை எடுத்துக் கொள்ளும்படி கூறினான் தேவேந்திரன். ஆனால் இறைவன் அருளால் இந்திரன் அனுதினம் பூஜிக்கும் மூர்த்தியையே தேர்ந்தெடுத்தார் முசுகுந்தர். வேறு வழியின்றி ஏழு மூர்த்திகளையும் அவரிடம் அளித்தான் தேவேந்திரன். 

இந்திரனிடம் பெற்ற அவைகளில் மூல மூர்த்தியை திருவாரூரிலும் மற்றைய ஆறையும் திருநள்ளாறு, திருவாய்மூர், திருக்காறாயில் (திருக்காரவாசல்), திருக்கோளிலி (திருக்குவளை), திருமறைக்காடு (வேதாரண்யம்), திருநாகைக்கரோணம் (நாகப்பட்டினம்) என்று திருவாரூரைச் சுற்றியுள்ள ஆறு ஸ்தலங்களிலும் ஸ்தாபித்து வழிபட்டார் முசுகுந்த சக்ரவர்த்தி. இவை ஏழும் "ஸப்த விடங்கத் தலங்கள்' என அழைக்கப்படுகின்றன. விடங்கம் என்றால் உளி. உளிபடாமல் தோன்றியதால் அவ்விக்ரகங்கள் "விடங்கர்' என அழைக்கப்படுகின்றன. 

திருக்குவளை தலச்சிறப்பு: திருக்குவளை என்று தற்போது அழைக்கப்படும் திருக்கோளிலி தேவாரத்திருப்பதிகங்கள் பெற்ற காவிரிக்குத் தென் கரையில் 123 ஆவது திருத்தலமாகும்.  ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம் என்னும் முச்சிறப்பும் உடையது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் அருளிய திருப்பதிகங்களைப் பெற்றது. சுந்தரமூர்த்தி நாயனாருக்காக அவர் வேண்டியபடி குண்டையூர்கிழார் என்னும் நிலச்சுவன்தார் கொடுத்த நெல் மலையை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல இறைவன் பல பூதங்களை கொடுத்த ஸ்தலம். இவ்வைபவம், இன்றும் மாசி மாதத்தில் "நெல் மகோத்சவம்' என்ற பெயரில் நடைபெறுகின்றது. முக்கிய விழா நாள்களில் தியாகராசரின் பிரதிநிதியாக சந்திரசேகர் புறப்பாடு நடைபெறும் தலம் இது. 

தல மூர்த்தங்களின் சிறப்பு: இத்தல மூலமூர்த்தி பிரமபுரீஸ்வரர் வெண் மணலால் ஆனவர்.  ஒவ்வொரு அமாவாசைத் தினத்தன்றும் அர்த்தஜாம வழிபாட்டில் சாம்பிராணித் தைலத்தை அருகம்புல்லால் தோய்த்து திருமேனி மீது தடவுவர். இதுவே இவருக்குச் செய்யும் சிறப்பு அபிஷேக வழிபாடு. பெரும்பாலும் திருக்குவளை (கவசம்) சார்த்தியே காணப்படுவார். குவளை மலர்கள் சார்த்தப்படுவது வழக்கம் அம்மையின் பெயர் வண்டமர் பூங்குழலாள் இந்த நாமத்திற்கு ஏற்ப அம்மன் சந்நிதியில் தேனடை ஒன்று நெடுங்காலமாக இருந்து வந்த செய்தியை அறியலாம். அம்மன் சந்நிதியில் உள்ள சக்திதீர்த்தம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகின்றது. இத்தலத்தில் அருள்புரியும் தியாகராஜ மூர்த்தியின் திருநாமங்கள் ஊழிப்பரன், அவனிவிடங்கத்தியாகர் என்பதாகும். திருவாரூருக்கு அடுத்தபடியாக தியாகேசப் பெருமான் இத்தலத்தில் சிறந்து விளங்குகிறார். விநாயகர், தியாக விநாயகர், சிவலோக விநாயகர் என்றும் முருகப் பெருமான் சுந்தரவடிவேலர் என்றும் பெயர் கொண்டு அருள்பாலிக்கின்றனர். இத்தலத்தில் தியாகராஜப் பெருமான் பிருங்க நடனம் ஆடுகின்றார் என்பர்.

இத்தலத்தில் நவக்கிரகங்கள் வக்ரமின்றி ஒரே வரிசையில் தெற்கு நோக்கி உள்ள அபூர்வ அமைப்பு உடையது. ஒரே இடத்தில் ஒன்பது கிரகங்களுக்குமான பரிகாரத்தையும் செய்ய வாய்ப்பளிக்கும் பதி திருக்கோளிலி. கோள்களால் (நவக்கிரகங்களால்) வரும் துன்பங்களை எல்லாம் நீக்குகின்றது என்பதனை கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே என்று ஞானசம்பந்தரும், உயிர் வர்க்கங்களுக்கு ஏற்படுகின்ற எண்ணற்ற நோய்களை நீக்கும் வைத்தியநாதனாக இருந்து அருள்பவன் என்பதை "மண்ணுளார் வினை தீர்க்கும் மருந்தினை' என்று அப்பர் பெருமானும் தங்கள் பதிகங்களில் குறிப்பிடுகின்றனர்.

கல்வெட்டுச் சான்றுகள்: புராண வரலாற்றுச் சிறப்புடன் திகழும் இக்கோயிலில் இருபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவைகள், சோழமன்னர்கள், பாண்டிய மன்னர்கள் காலத்தனவாகும். அதில் இத்தலத்து இறைவர் திருக்கோளிலி உடைய நாயனார் என்றும், தியாகராசர் "அவனி விடங்கத்தியாகர்' என்றும் அழைக்கப்பட்டதை  குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள திருமறைக் காடுடையான் மண்டபத்தில் இறைவன் எழுந்தருளும் செய்தியும் தெரிவிக்கப்படுகின்றது. திருக்கோயிலில் நிரந்தரமாக நந்தாவிளக்கு (தூண்டா விளக்கு) எரிப்பதற்கு தானம் அளித்த செய்திகளும், சிவன்படவர் (செம்படவர்) இனத்தைச் சேர்ந்த ஆலன் என்பவர் அதிபத்தநாயனார் திருமேனியின் வழிபாட்டிற்குத் தானம் அளித்த செய்திகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

வைகாசி வசந்தன்: தருமையாதீன அருளாட்சிக்கு உட்பட்ட திருக்கோயில்களுள் ஒன்றான இவ்வாலயத்தில் நடைபெறும் வைகாசிப் பெருந்திருவிழா (24 நாள்கள் நடைபெறும்) முக்கியமானது. ஏனென்றால், அந்த வைபவத்தில்தான் வசந்தன் என்று அழைக்கப்படும் திருவிழா நாளில் தியாகராஜப்பெருமான் தன் ஆஸ்தான இருப்பிடமிருந்து வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி 10 நாள்களுக்கு பக்தர்களுக்கு காட்சி நல்குவார். தேர்த்திருவிழாவன்று அவரே திருத்தேரில் வீதியில் பவனி வருவார். வைகாசி விசாகத்தன்று தீர்த்தவாரி நடைபெற்று அவரது வலது பாத தரிசனம் கிடைக்கப்பெறும். மறுநாள் யதாஸ்தானம் திரும்புவார். இவ்வாண்டு, வசந்தன் உற்சவம்: மே 29,  தேர்த்திருவிழா: ஜுன் 4, வலது திருப்பாத தரிசனம்: ஜுன் 7.

தலஇருப்பிடம்: நாகை மாவட்டம், நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் கீழையூரிலிருந்து 5 கி.மீ. தூரம்.
தொடர்புக்கு: 04366 245412 / 94864 46358.
- எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com