சபரிமலையில் பிரதிஷ்டாதின உற்சவங்கள்!

மனிதனின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு ஜபம், தபம், ஹோமங்கள், பூஜைகள், யாத்திரை முதலியவைகள் மிகவும் தேவை.
சபரிமலையில் பிரதிஷ்டாதின உற்சவங்கள்!

மனிதனின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு ஜபம், தபம், ஹோமங்கள், பூஜைகள், யாத்திரை முதலியவைகள் மிகவும் தேவை. இதில் யாத்திரை என்றால் இறைவன் உறையும் திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து அவரது அருளுக்குப் பாத்திரர்களாவது ஆகும்.  அந்த பகவானின் அநேக ரூபங்களில் சபரிமலையில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தாவும் ஒன்று. லட்சக்கணக்காண பக்தர்கள் விரதமிருந்து ஆண்டுதோறும் யாத்திரை செல்லும் இடம். புராண வரலாற்றின்படி திருமாலின் அவதாரமான பரசுராமர் திருக்கரங்களினால் கேரளாவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 18 சாஸ்தா ஆலயங்களில் முதன்மையானது சபரிமலை.  

விக்ரக பிரதிஷ்டாதினம் : காலத்தின் கோலத்தால் பல மாற்றங்கள் அடைந்து, தற்போது நாம் சபரிமலையில் தரிசிக்கும் சாந்நித்யம் மிகுந்த ஸ்ரீ ஐயப்பன் விக்ரகம், சுமார் 65 வருடங்களுக்குமுன் நிறுவப்பட்டதாகும். இன்றும் ஒவ்வொரு ஆண்டும் பிரதிஷ்டாதினம் சபரிமலையில் விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. அவ்வகையில் இவ்வாண்டு பிரதிஷ்டா தின நாள் ஜூன்-4 ஆம் தேதி அமைகின்றது. இதனை முன்னிட்டு ஜூன் 3 ஆம் தேதி நடை திறக்கப்படுகின்றது.

நூதன கொடிமரப் பிரதிஷ்டை விழா: சபரிமலையில் 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த கொடிமரத்தின் கீழ் பகுதியில் சேதம் அடைந்துள்ளதால் புதியதாக தேக்குமரத்தில் கொடிமரம் நிறுவுவதற்கு திருவாங்கூர் தேவசம் போர்டு கடந்த ஆண்டு முடிவு செய்தது. தேவப்பிரசன்ன வழிகாட்டுதலின்படி இதற்கான தேக்குமரம் (64 வருட வயது உடைய மரம்) தேர்வு செய்யப்பட்டு பம்பைக்கு கொண்டுவரப்பட்டு எண்ணெய்க் காப்பில் வைக்கப்பட்டு வேலைகள் நடந்தேறின. சுமார் 45 அடி நீளத்தில் உள்ள இந்த கொடிமரம் பாரத ஐயப்ப சேவாசங்கத்தினர்கள் பங்கேற்று மே 22 ஆம் தேதி பம்பையிலிருந்து சந்நிதானத்திற்கு தங்கள் தோளிலே சுமந்து கொணர்ந்தனர். இதற்காக முறைப்படி விரதம் மேற்கொண்டு இந்த கைங்கர்யத்தில் ஈடுபட்ட சுமார் 2000 அங்கத்தினரின் சேவை பாராட்டுக்குரியது. 

கொடிமரம் முழுவதும் தங்கத் தகடு வேயப்பட்டு பீடத்தில் ஜூன் 25 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு மேல் மதியம் 1.40 மணிக்குள் நிறுவப்படுகின்றது. இதற்கான கொடிமரப் பிரதிஷ்டை விழா ஜூன் 20 முதல் தொடங்கி நடைபெறுகின்றது. ஜுலை 7 இல் பம்பையில் ஆராட்டுடன் முடிவடைகின்றது. ஐயப்ப பக்தர்கள் மாதாந்திர வழிபாட்டிற்காக ஜூன் 14 முதல் தொடர்ச்சியாக ஜூலை 7 ஆம் தேதி வரை நடைதிறக்கும். சபரிமலையில் ஐயனை தரிசிக்க ஓர் அருமையான வாய்ப்பாகும்.
தொடர்புக்கு: 96772 77277.
- கே. கணேஷ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com