திருமுறைத்தமிழ் தந்த வள்ளல்! 

கடலூர் மாவட்டம், குமராட்சி அருகில் திருநாரையூரில் அனந்தேச சிவாசாரியாருக்கு மகனாகப் பிறந்தவர் நம்பியாண்டார் நம்பி.
திருமுறைத்தமிழ் தந்த வள்ளல்! 

ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி குருபூஜை -29.5.2017
கடலூர் மாவட்டம், குமராட்சி அருகில் திருநாரையூரில் அனந்தேச சிவாசாரியாருக்கு மகனாகப் பிறந்தவர் நம்பியாண்டார் நம்பி. ஒரு வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல இருப்பதால் திருநாரையூர் ஸ்ரீ பொல்லாப்பிள்ளையாருக்கு பூஜை செய்யும்படி கட்டளை இடுகிறார் தந்தை. அதனை சிரமேற்கொண்டு பூஜைக்கு செல்கிறார் சிறுவனான நம்பியாண்டார் நம்பி. பூஜை செய்து விட்டு பிரசாதத்தை உண்ணும்படி விநாயகரிடம் மூன்று முறை மனமுருக வேண்டுகிறார். விநாயகர் வராதது கண்டு கல்லில் மோதி உயிர் துறக்க முயல்கிறார். உடனே, பொல்லாப்பிள்ளையார் காட்சி தந்து பிரசாதத்தை சாப்பிடுகிறார். அதைக் கண்டு மகிழ்ந்து தமக்கு ஞானம் வேண்டும் என்று வேண்டுகிறார் நம்பிகள். அப்படியே அருள்கிறார் பிள்ளையார். ஞானம் பெற்ற நம்பி,

என்னை நினைத்தடிமை கொண்டென் இடர் கெடுத்துத் 
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசு மகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்
அரசு மகழ் அத்தி முகத்தான் 
- என்று பாடுகிறார். 

இது, ஸ்ரீ நம்பியாண்டார் நம்பியின் முதல் பாடல்.

சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாரையூர். இத்தலத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத சௌந்தர்யேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. நாரையாக இருந்த கந்தர்வன் சிவபெருமானை பூஜித்து முக்தி பெற்ற தலம். இவ்வாலயத்தின் இடது பக்கத்தில் பொல்லாப்பிள்ளையாரின் சந்நிதி அமைந்துள்ளது. இவ்விநாயகர், சுயம்பு திருமேனியுடையவர். இத்தலம் விநாயகரின் ஆறாவது படைவீடு என்பது குறிப்பிடத்தக்கது.  

நம்பிகள், விநாயகரிடம் வேண்டி திருமுறைகள் பெற்றவர். தில்லையில் திருமுறைகள் பாதுகாப்பாக இருந்ததை ராஜராஜ சோழனின் வேண்டுகோளை ஏற்று, தில்லைவாழ் அந்தணர்களிடம் பெற்று வகைப்படுத்தியவர். திருமுறையில் 11 ஆம் திருமுறையைத் தந்தவர். நம்பியாண்டார் நம்பி இல்லையென்றால் இன்றைக்கு தேவாரமும் இல்லை; திருமுறைகளும் இல்லை.

நம்பியாண்டார் நம்பிகளின் குருபூஜை விழா திருமுறை விழாவாக, இத்தலத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம், புனர்பூசம் நட்சத்திரத்தில் (இவ்வாண்டு- 29.5.2017) வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பதால் இந்த குருபூஜை விழாவில் அன்னதானம் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் திருக்கோயில் அன்னதான அறக்கட்டளை மூலம் இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. பக்தர்களும் பொதுமக்களும் இவ்விழாவில் பங்கேற்று நலம் பெறலாம். தொடர்புக்கு: 98944 06321.

- உ. வெங்கடேச தீக்ஷிதர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com