ஐயத்தை மெய்யாக்காதே

விண்கலத்தில் நுண்ணியதையும் நுணுகி ஆயும் கணினி யுகத்தில் வலைதளங்களில் முகநூலில் அகத்தில் தோன்றும் அநாவசிய அநாகரித ஐயங்களை எல்லாம் மெய்யாக்கி மேதினியில் உலவவிட்டு
ஐயத்தை மெய்யாக்காதே

விண்கலத்தில் நுண்ணியதையும் நுணுகி ஆயும் கணினி யுகத்தில் வலைதளங்களில் முகநூலில் அகத்தில் தோன்றும் அநாவசிய அநாகரித ஐயங்களை எல்லாம் மெய்யாக்கி மேதினியில் உலவவிட்டு கலகம் விளைவிப்போருக்கும் களங்கம் உண்டு பண்ணுவோருக்கும் விளங்கும் வண்ணம் வள்ளல் நபி (ஸல்) அவர்கள் " யார் சந்தேகத்திற்கு உரியவற்றைத் தவிர்த்து கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் மானத்தையும் காப்பாற்றி கொள்கிறார்'' என்று நவின்றதை நமக்கு உரைக்கிறார் நூஃமான் பின் பஷீர் (ரலி) நூல்- முஸ்லிம்.

சந்தேக நோய் சகலரிடத்திலும் சகவாசம் செய்யும். அதற்கு யாரும் பகையே கிடையாது. ஆனால் அது புகைய ஆரம்பித்தால் உலக பகையே உருவாகும். "சந்தேக எண்ணங்களைப் பற்றி எச்சரிக்கிறேன். சந்தேகம் பொய்யான பேச்சாகும்'' என்ற பெருமானார் நபி (ஸல்) அவர்களின் அருள்மொழியை அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.

நம்பிக்கையாளர்கள் சந்தேகங்களிலிருந்து விலகி கொள்ள வேண்டும். சந்தேகங்களில் சில பாவங்களாக இருக்கின்றன. பிறரின் குற்றங்களைத் துருவி துருவி விவசாரிப்பது விபரீதத்தை விளைவிக்கின்றது என்று எச்சரிக்கிறது எழில்மறை குர்ஆனின் 49-12 ஆவது வசனம். இவ்வசனத்திற்குச் சந்தேகம் என்பது ஒரு பொய் கூற்று. சந்தேக எண்ணங்களைத் தவிர்த்து கொள்ள வேண்டும்., சந்தேக எண்ணங்கள் குற்றம் புரிய கூட்டிச்செல்லும் என்று விளக்கம் தருகின்றனர். ஒருவரைப் பற்றி நன்கு அறியாத அவரைப் பற்றிய மற்றொருவரின் கருத்து சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் அமையலாம். எண்ணியதைத் திண்ணியமாய் தெரியாதவரைப் பிறரிடம் கூறுவது குற்றமாகும். 

"நடைபாதை குறித்து உங்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் ஏழு முழங்கள் அகலம் உள்ள நிலம் பொது வழியாக ஆக்கப்படும்'' என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தீர்வைத் தெரிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம். நடைபாதை அமைப்பதில் அந்நடைபாதையை உருவாக்குவோர் உபயோகிப்போர் இடையே ஒத்த கருத்து ஏற்படாமல் ஒருவருக்கொருவர் இடையே ஐயம் ஏற்பட்டு அவரவர் ஐயத்தை மெய்யாக்க முற்பட்டு மோதல் உண்டாவதைத் தடுக்க இந்த நந்மொழியை நவின்றார்கள் நந்நபி (ஸல்) அவர்கள்.  

"நீங்கள் உண்மையை அறிந்துகொண்டே  அதனை மறைத்து பொய்யை உண்மை என புரட்டிவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறது குர்ஆனின் 2-42 ஆவது வசனம். முந்திய இறைத்தூதர்களைப் பின்பற்றியோர் காலத்திற்கேற்ப கருத்துகளை மாற்றி உண்மையை மறைத்து பொய்யை உலவவிட்டு வேதத்தை மாற்ற முயற்சித்ததைக் கண்டிக்கிறது இவ்வசனம். இவ்வகை தகாத மாற்றங்கள் மனிதர்களைப் பாழ்படுத்தி அறவழியிலிருந்து விலகி பிற வழிகளில் தரமாய் திருத்த அல்லாஹ் அவ்வப்பொழுது தூதர்களை அனுப்புகிறான்.

"எதைப்பற்றி உனக்கு அறிவில்லையோ அதனை நீ பின்பற்றாதே'' என்று மொழிகிறது வழிகாட்டும் குர்ஆனின் 17- 36 ஆவது வசனம். ஹலால் (ஆகுமானது) ஹராம் (ஆகாதது- விலக்கப்பட்டது) தெளிவாக உள்ளவை. இவ்விரண்டிற்கும் இடையில் ஐயத்திற்குரியவையும் உண்டு. ஐயத்திற்குள்ளதில் வீழ்ந்து விடுவது விலக்கப்பட்டதில் விழுவது போன்றதே என்ற விளக்கத்தை விளம்புகிறார் நுஃமான் பின் பஸீர் (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம். உங்களுக்கு ஐயமானதை விட்டுவிட்டு ஐயமற்றதை மெய்யாக கடைபிடிக்க காருண்ய நபி (ஸல்) அவர்கள் ஏவியதை எடுத்துரைக்கிறார் ஹசன் பின் அலி (ரலி) நூல்- திர்மிதீ. 

தெரியாததைத் தெரிந்தது போல் காட்டி நடப்பது கூடாது. பார்க்காத ஒன்றைப் பார்த்ததாக தெரிவிப்பதோ கேட்காத ஒன்றைக் கேட்டதாக கூறுவதோ தெரியாத ஒன்றைத் தெரிந்ததாக நெஞ்சறிய வஞ்கமாக தெரிவிப்பதோ  கூடாது. பொய்சாட்சியும் இதில் அடங்கும். எச்செய்தியையும் அதன் உண்மையை உணராது அறியாது புரியாது தெரிந்தது போல தெளிவற்று இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஒருவரிடம் ஒன்றைச் சொல்லி அதே செய்தியை மற்றவரிடம் மாற்றி சொல்பவனை எச்சரிக்கும் ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரை " உலகில் உடையவராக இருப்பவர் மறுமையில் நெருப்பினால் ஆன இரு நாக்குகளுடன் இருப்பார்'' நூல்- மிஷ்காத்.

" இறை நம்பிக்கையுடையோரே! தீயவன் சொல்லும் செய்தியின் உண்மையை நன்றாக விசாரித்து தெளிவு படுத்தி கொள்ளுங்கள். தெளிவற்ற அறியாமையால் ஒரு கூட்டத்திற்குத் தீங்கு செய்துவிட்டு வருத்தப்படுவோராய் ஆகி விடுவீர்கள்'' என்றுரைக்கும் அருமறை குர்ஆனின் 49-6 ஆவது வசனப்படி எவர் எதைக் கூறினாலும் அதனை நன்கு ஆய்ந்து அறிந்த பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரப்பட்டு  அடுத்தவருக்கு அநீதி இழைக்கக் கூடாது. அவசரப்படுவது சாத்தானின் சதி. தீர விசாரித்து திட்டமிட்டு செயல்படுவது இறை நெறியாகும். 

ஐயத்தை மெய்யாக்கும் பொய்யில் புரளாது மெய்யை மெய்யாக உணர்ந்து மெய்வழி நடப்போம். மேலோன் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com