நாடும் வீடும் காப்பாள்..காட்டுச்செல்லி அம்மன்!

விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பிரகாரம், திருமதில் எதுவும் கிடையாது. தெய்வம் உண்டு!
நாடும் வீடும் காப்பாள்..காட்டுச்செல்லி அம்மன்!

விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பிரகாரம், திருமதில் எதுவும் கிடையாது. தெய்வம் உண்டு!  இந்த தெய்வத்தின்  மேல் அமைந்துள்ள வேதைக்கொடி என்னும் மூலிகைக் கொடி பசுமையாய் அழகாய் பந்தலாய்ப் படர்ந்து நின்று அம்மனுக்கும் வரும் பக்தர்களுக்கும் நிழல் தருகிறது. 

நாம் பயன்படுத்தும் சிறிய  வெற்றிலையை போல் இரண்டு மடங்கு தடிமனும் சிறிய அளவும் உள்ள இலைகள் கொண்ட சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் கொடி இது. இந்த  இலையில் வாசம் எதுவும் இல்லை. கொடியில் பால் வராது. பூ பூக்காது , காய்க்காது.   ஒவ்வொரு மார்கழி முடிந்து தை மாதம் வரும் போது இலைகள் எல்லாம் கொட்டிவிடும்; பங்குனி மாதம் 15 ஆம் நாளுக்குள் புத்திலைகள் தோன்றி புது நிழல் தந்து கோடைக் காலத்தின் வெம்மையைக் குறைத்து விடும் இந்த வேதைக் கொடி பந்தல்.  இப்பந்தலின் கீழே கொலு வீற்றிருக்கிறாள் அன்னை காட்டுச்செல்லி! அவள் இங்கு குடிகொண்டு காக்கும் வரலாறு அதிசயம் நிறைந்தது.

தாருகாசுரன் தன் மரணம் ஒரு  பெண்ணால் தான் நடைபெற வேண்டும் என்று வரம் பெற்றான். தேவர்களுக்கும் மக்களுக்கும் கடும்  துன்பம் தந்து கொண்டு இருந்தான். அவனை அழிக்க  சிவன் சக்திக்குக் கூற, சக்தியின் கண்ணிலிருந்து ஒரு  கொடிய விஷ சக்தி  உருவானது.  அதன் கோபாக்னியில் தாருகன் எரிந்து சாம்பலானான்.  அந்த கோபசக்தி ஒரு குழந்தையாக உருவெடுத்தது.  அதற்கு வீரியம்  கலந்த பாலை ஊட்டி மேலும் விஷசக்தியை அதிகமாக்கினாள் சக்தி. சக்தியின் அதீத நோக்கமறிந்த  சிவன் அந்த விஷக்குழந்தையையும் அதன் பாலையும் தன்னுள்ளேயே ஒடுக்கிக் கொண்டார்.  சக்தி வெகு கோபம்  கொண்டு கோர தாண்டவம் ஆடினாள். ஆடலரசன் அவளது ஆட்டத்தை அடக்க  நாட்டியப் போட்டிக்கு  அழைத்தார். போட்டியின் நடுவில் தன் காதினை அலங்கரித்துக் கொண்டிருந்த தோடினை  விழச் செய்து மீண்டும் அதனைத்  தன் காலால் எடுத்து பொருத்திக் கொண்டார். அந்த உக்ர கோப சக்தி அவ்வாறு  ஆடுவது சாத்தியம் இல்லை என நின்றாள். அந்நேரத்தில் சண்டி சிவனுடன்  ஆடிய அந்த சண்ட தாண்டவம் என்னும் போட்டியில் தோற்றதாகக் கருதினாள்.

சண்ட தாண்டவத்தில் தோற்ற அன்னை காளிக்கு தன் குழந்தையின் அழுகுரல் கேட்கவே, காதைப் பொத்திக்கொண்டு  வழியும் கண்ணீரோடு வேகமாக ஊரின் வடக்குப் புறமாய்  இருந்த காட்டிற்குள் சென்று வேதைக் கொடிகள் பின்னிப் படர்ந்து இருந்த பந்தலின் கீழ் அமர்ந்து  புற்றாக மாறிப் போனாள். அவ்வாறு அமர்ந்த நாள் ஒரு வியாழக்கிழமை ஆகும்.  ஊரார் அது முதல் வியாழக் கிழமைகளில் வந்து பகலில் பொங்கலிட்டு படையல் இட்டு வணங்கி அவளை தங்கள் குலசாமியாக வழிபட்டதுடன்  மாலை 6.00 மணிக்கு காட்டை விட்டு வெளியேறுவதையும் வழக்கத்தில் கொண்டனர்.

காட்டில் இருக்கும் அந்த காலாகாரியை ஊருக்குள் அழைத்துச் செல்ல முயன்று உத்தரவு கேட்டனர். தான் ஊருக்குள் வர விரும்பவில்லை ஊரில் குழந்தைகள் அழும் குரலோ சண்ட தாண்டவத்தின் போது சிவன் கால் பதியும்போது உண்டான  உலக்கை இடிக்கும் சத்தமோ கேட்கக் கூடாது என்றாள். பலமுறை முயன்றும்  அருகில் உள்ள ஆலங்குளம் வரை  மட்டுமே அழைத்துச் செல்ல முடிந்தது.  மீண்டும் காட்டுக்குத்திரும்பி வேதைக் கொடி பந்தலின் கீழேயே அமர்ந்து அனைவருக்கும் அருள் வழங்குவதும் மாலை 6.00 மணிக்கு மேல் வெளி வந்து காட்டைச் சுற்றி உலாவி அவளை வழிபடுவோரின் அல்லல்களைத் தீர்த்துக் காப்பாற்றினாள்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலம்.. அந்த பகுதிக்கு  வந்த வெள்ளைத்துரை ஏரிக்கரை எதிரில்  முகாம் செய்து  உலவிக் கொண்டிருந்த துரையின் கண்ணில் மறுகரையில் சிவப்பு நெருப்புப் பிழம்பு ஒன்று நகர்ந்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. அது இப்பகுதி மக்களின் காவல் தெய்வம் என்பதையும் காலையில் சென்று பார்க்க முடியும் எனக்கேட்டுத் தெரிந்து கொண்டு கூடாரத்தில் ஓய்வெடுக்கப் போனான்.

நள்ளிரவு  சலங்கை சத்தமும் கற்பூர வாடையும் வர, துரை கூடாரத்தை விட்டு வெளியே வந்தான். அதற்குள் கூடாரத்திற்குள்  ஓசை கேட்க  சென்று பார்த்தான். அவனது  படுக்கையில்  ஒரு பெரிய கரு நாகம்  ஊர்ந்து சென்றதை அடித்து தலையை நசுக்கி இருந்ததைப் பார்த்து  அதிர்ந்தான். மறுநாள்  துரையைக் காத்தது  அந்த எல்லைச் சாமி காட்டுச் செல்லியே  என்று ஊரார் கூறினர். வெள்ளைத் துரையால் புற்றில் குடிகொண்ட புனிதவதியின் வரலாறை   நம்பமுடியவில்லை.

கூடாரத்துக்குத் திரும்பிட ஏறிய குதிரை எல்லை தாண்டியதும் முன் கால் முறிந்து விழுந்தது. நடந்து கூடாரத்திற்குச் சென்றதும்  உடல் வியர்த்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்து துடி துடித்தான் துரை.  ஊரார்  அபிஷேக நீரைத் தெளித்து கோயிலிலிருந்து  வந்த எலுமிச்சங்கனியைக்  கொடுத்து படைத்த  பொங்கல் சிறிதளவு எடுத்து வாயிலிட,  அனைத்து அல்லல்களும் நீங்கி எழுந்தமர்ந்து அம்மன் இருந்த திசை நோக்கி கை எடுத்து கும்பிட்டான். 

இத்தனைச் சிறப்புகளும் கொண்ட காட்டுச்செல்லியம்மன் கோயில் திருவள்ளூர் மாவட்டம்,  பெரியபாளையத்திலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் தண்டலம் அடுத்துள்ள சூலைமேனி ஊரிலிருந்து தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டைக்குச் செல்லும் சாலையில்  சுமார் 6  கி.மீ தொலைவில் செங்கரை கிராமத்தில் அமைந்துள்ளது. சுற்றிலும் சுமார்  40 ஏக்கர் பரப்புள்ள காட்டில் அமைந்த இயற்கைக் கோயில். காட்டினை ஒட்டியுள்ள  ஏரியின் மறு கரையில் இருந்தோருக்கு  செக்கச் செவேல் என அம்மன் காட்சி தந்ததால் செங்கரை என இந்த  கிராமம் வழங்கப்படுகிறது. 

தினமும் அபிஷேகமும் ஒரு கால பூஜையும் நடைபெறும் இத்திருக்கோவிலில் அம்மன் முதலில் வந்து அமர்ந்த நாளிலும் புற்றிலிருந்து வெளி வந்து சுய உருக் காட்டிய நாளான வியாழக் கிழமையிலும் அம்மனின் அருட்பார்வை அதிகம் என்பதால் அதிக அளவு மக்கள் வருகையும் உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் வேண்டுதல் செய்வோரும்  மற்ற நாள்களில் சுமாராகவும் மக்கள் வரவு இருக்கும்.

பலருக்கு குல தெய்வமாக இருப்பதால்  வீட்டில் எந்த நிகழ்ச்சிக்கும் முதலில் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டே  துவங்குவர்.  பிள்ளைச் செல்வம் வரம் வேண்டுவோர்  9  வாரம் வந்து  வணங்கி பலன் பெற்று குழந்தைக்கு செல்லன், செல்லி எனப் பெயர் சூட்டி மொட்டை அடித்து காதணி விழா நடத்துவர். நோய் நொடி தீர வெற்றிலை மாலை சார்த்துவதும்  திருமணத்தடை  நீங்க, வேண்டி பிரார்த்தனையாக வஸ்திரத்தைக் கிழித்து மரத்தில் கட்டிப் பலன் பெறுவதும்; எதிரிகள் வாய்க்குப் பூட்டுப் போடும் பழக்கமும் இங்கு நடைமுறையில் உள்ளது.

ஆடி மாதம் கூழ் வார்த்தல்,  காய்கறி அலங்காரமும் நடைபெறும்.  சித்திரை 1 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று உளுந்து வடை செய்து மாலை சார்த்தி வழிபாடு செய்கின்றனர். கார்த்திகை தீப வழிபாடும் உண்டு.

வியாழக்கிழமைகளில் சூலைமேனியிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற நாள்களில் அதிக அளவில் ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன.
 தொடர்புக்கு: 93823 16493/  94440 22651.
- ஆர். அனுராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com