நீதியை நேசிப்போர் பேறுபெற்றோர்!

"உடலை திருப்தி செய்ய அப்பத்துக்கும் ரசத்துக்கும் நான் பசிதாகமாய் இருப்பதைவிட அதிகமாக நீதியின் மேல் பசி தாக முடையவனாயிருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாயிருப்பேன்!
நீதியை நேசிப்போர் பேறுபெற்றோர்!

"உடலை திருப்தி செய்ய அப்பத்துக்கும் ரசத்துக்கும் நான் பசிதாகமாய் இருப்பதைவிட அதிகமாக நீதியின் மேல் பசி தாக முடையவனாயிருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாயிருப்பேன்! ஏனெனில் நீதி எனக்கு திருப்தியளிக்குமே!'' என்கிறார் இயேசு. அதைத்தான் மலைப்பொழிவில் நான்காவது முத்தான கருத்தாக, " நீதியின் மேல் பசி தாகமுள்ளோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்'' என்பதாகும். 

உழைக்காதவன் உண்ணலாகாது என திருமறை கூறுகிறது. ஆனால் இன்றைய உலகில் நடப்பதென்ன? நீதியோடு உழைக்காமல் உண்ண நினைக்கிறான். அவன் சொர்க்கம் நரகம் உண்டென்று நம்புவான். தீவினையோடு இறந்தால் ஆன்மா நித்திய நெருப்புக்குச் செல்லும் என்பதையும் நன்கு அறிவான். இருந்தாலும் ஆன்மாவிற்கு உணவூட்ட ஞானத்தையும் நீதியையும் தேடமாட்டான். ஞானமும் நீதியுமானவர் இறைவனே. அந்த ஆன்மாவிற்கு அமுதூட்டுபவர் கடவுளே. அவரே தாயும் தந்தையுமானவர். அதை உட்கொண்ட மனிதன் அதன்பின் ஒருபோதும் தாகமாயிரான். 

"விண்ணிலிருந்து இறங்கிவந்த உயிருள்ள வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவனாவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான். என் தசை உண்மையான உணவு. என் ரத்தம் உண்மையான பானம், அது நிலை வாழ்வு தரும்' என்கிறார் இறைமகன் இயேசு. (யோவான் 6:55:56) முதலாவது, இறை அரசைத் தேடுங்கள். உங்களுக்கு எல்லாம் சேர்ந்து கொடுக்கப்படும் என்பது இறைவாக்கு. மேலும் இயேசு கூறுவார் "சாவு திருடனைப் போல் வரும். எனவே, விழிப்பாயிருங்கள்' என்கிறார். 

எனவே உயிர் வாழ, உணவும் தண்ணீரும் பெற உழைக்கவேண்டும். அது நீதியாக, நேர்மையாக, லஞ்ச ஊழல் இல்லாமல் பிறருக்கு தீங்கு செய்யாமல் உழைப்புக்கேற்ற ஊதியத்தை கொடுத்து சுயநலமில்லாது, இறை அன்பில் வாழ்வது உடலின் உயிராக இருக்கும் ஆன்மாவிற்கு ஊட்டமளிப்பதாகும். அதுவே உண்மையான பசியாய் இருக்க, நாம் விண்ணக நிறைவைப் பெறுவோம்!

நீதியின்பால் பசி தாகமுள்ளோர் பேறுபெற்றோர் என்று பார்த்தோம். தொடர்ந்து மலைப்பொழிவின் எட்டாவது பாக்கியமாக " நீதியின் நிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுடையதே'' என்பது பற்றி இறைமகன் இயேசு கூறிய விளக்கமாவது, 
"மனிதன் எந்த அளவுக்கு சாத்தானாகி விட்டானென்றால் எங்கெங்கே நல்லது இருந்தாலும் அதை பகைக்கிறான். நல்லவனாயிருப்பவனையும் பகைக்கிறான். நல்லவனாயிருப்பவன் மவுனமாயிருந்தாலும்கூட அவன் தன்னை குற்றம் சாட்டுவது போலவும் கண்டிப்பது போலவும் அவனைப் பகைக்கிறான். உண்மையான விசுவாச முடையவனின் விசுவாசம், ஒரு கள்ள விசுவாசமுடையவனின் கபடத்தை அதிக தெளிவாகக் காணும்படிச் செய்கிறது. தான் வாழும் முறையினால் எப்பொழுதும் நீதிக்கு சாட்சியாக இருப்பவன் அநீதர்களால் பகைக்கப்படத்தான் முடியும் என்பது உண்மையே. 

இறைமகன் இயேசுவை கொலை செய்ய வேண்டி, அன்றைய ஆளுநர் பிலாத்துவிடம் யூத தலைமை குருக்கள் இழுத்துச் சென்று சிலுவைச் சாவை கொடுத்து தீர்ப்பிட ஆளுநரை வற்புறுத்தியபோது ஆளுநர் இயேசுவைப்பார்த்து "நீயார்? எங்கிருந்து வந்தவன் என்ன  செய்தாய் என்று கேட்டபோது இறைமகன் இயேசு இப்படி கூறுகிறார். "உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையை சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்கு செவிசாய்க்கின்றனர்'' என்று. அதற்கு பிலாத்து, அவரிடம் " உண்மையா? அது என்ன?'' என்று கேட்டான் (யோவான் 18:37:38) ஆம் இன்றைய உலகு, பல நேரங்களில் நீதியா? உன் விலை என்னவென்று கேட்கிறது.

"போர்களில் நடப்பது இங்கும் நடக்கிறது. அன்பின் புனித கலையில் முன்னேறுவதைவிட, வதை செய்கிற சாத்தானுக்குரிய கலையில் மனிதன் கூடுதல் முன்னேறுகிறான். அவன் குறுகிய வாழ்வுடைய உடலை வதைக்க முடியும். நித்திய வாழ்வு அடையும் ஆன்மாவை அழிக்க முடியாது. அப்படி நீதிக்காக வதைகளால் உயிர் நீத்த ஆன்மாக்களுக்கு மோட்ச ராஜ்ஜியத்திலே அரச ஆசனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன'' என்கிறார் இறைமகன் இயேசு தன் மலைப்பொழிவில். இதை உள்ளத்தில் நிறுத்துவோம்! மேலும் நீதிக்காக துன்புறும் இடத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பதை அறிய வேண்டும். இறைமகன் இயேசு கூறியுள்ளது போன்று தீமை செய்வோரை எதிர்க்க வேண்டாம். மாறாக உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் (மத்தேயு:5:39:43)
- ஜி.ஐ. பிரான்சிஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com