பால் குடித்த தூர்வாசபுரம் திருப்பாதாளேச்சுவரர்!

இவ்வூர் திருமா, துருமா, துர்வாசபுரம், தூர்வாசபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
பால் குடித்த தூர்வாசபுரம் திருப்பாதாளேச்சுவரர்!

இவ்வூர் திருமா, துருமா, துர்வாசபுரம், தூர்வாசபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சுரங்கத்தில், தூர்வாச முனிவர் வாழ்ந்து தவம் புரிவதாகவும் அவர் இறைவனை வணங்குவதாகவும் கூறுகின்றனர். இவ்வூரில் அதிர்வேட்டு, வாணம் போன்ற பேரொலி எழுப்பும் வெடிகளை யாரும் வெடிப்பதில்லை. அந்த பேரோசைகள் துர்வாச முனிவரின் தவத்துக்கு இடையூறாகும்.  இம்மரபை மீறி யாரேனும் வெடி வெடித்தால் அவருடைய கைகள் வெடிப்பட்டு ஊனமாகி விடுகிறது என்று இன்றுவரை நம்பப்படுகிறது. அதனால் கோயிலை சுற்றி இருப்பவர்கள் யாரும்  வெடி வெடிப்பதில்லை. 

திருப்பாதாளேச்சுவரர் திருக்கோயிலின் சுவாமி கருவறையின் வெளிப்புறம் வடபக்கச் சுவரிலுள்ள கல்வெட்டு, திருப்புவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீவல்லபதேவர் ஆட்சி ஆண்டின் முப்பத்து மூன்றாவது ஆண்டில் வெட்டப்பட்டது. இதில் குறிக்கப் பெறும் பாண்டிய மன்னன் காலம் கி.பி.1030. பாண்டியர் கல்வெட்டு, கி.பி.1030 என காணப்படுவதால் இக்கோயில் அதற்கு முன்பே சிறந்திருக்க வேண்டும்.  

திருப்பாதாளேச்சுவரர் திருக்கோயில் உருவானமைக்கு ஒரு நாட்டுப்புறக் கதை வழங்குகிறது. திருமாவிலிருந்து நாள்தோறும் ஒருவன் ராசசிங்கமங்கலத்துக்குப் (இராங்கியம்) பால் கொண்டு சென்றான். அவன் பால் கொண்டு செல்லும் போது குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், ஏதோ ஒரு காரணத்தால் பால் கொட்டிப் போகும்; கலயமும் உடைந்துவிடும். இவ்வாறு பால் கொட்டிப் போவதைக் கண்ட  அவன் அவ்விடத்தில் கரடு முரடாக இருந்த பகுதியைத் தூய்மை படுத்த வேண்டும் என்று மண் வெட்டி, அரிவாள்,கோடரி போன்ற கருவிகளுடன் வந்தான். அவன் அங்கிருந்த மேடுகளையும் கற்களையும் பெயர்த்த போது, ஒரு கல்லைக் கண்டான். அவன் அக்கல்லே தன்னைத் தினமும் தடுக்கிவிழச் செய்து பாலைக் கொட்டிற்று என்பதைக் கண்டு கொண்டான். 

அந்தக் கல்லை அடியோடு தோண்டி எடுக்க வேண்டும் என்ற வெறி அவனிடம் தென்பட்டது. வெட்ட வெட்ட அந்தக்கல்லின் அடிப்பாகத்தைக் காணமுடியவில்லை. பிறகுதான் அக்கல் சிவலிங்க வடிவம் என்றுணர்ந்தான். இக்கல்தான் தன்னுடைய பாலைத் தினமும் தடுத்துக் குளித்துக் குடித்தது என நினைத்தான். அதன் பின்பு இறைத் தன்மையை உணர்ந்த அவன் நாள்தோறும் பால் கொண்டு போகும்போது அந்த சிவலிங்கத்திற்கும் சிறிது ஊற்றிவிட்டுப் போகலாயினான். இதனால் அவனுடைய ஆடு, மாடுகளும் நிலமும் பயிரும், குடும்பமும் பெருகின. இவ்வாறு காட்டில் மண்ணுக்குள் மறைந்திருந்த சிவலிங்கம், அடியார்க்கு வெளிப்பட்டது. அதன் காரணமாக  திருக்கோயில் உருவாயிற்று. திருமாத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருப்பாதாளேச்சுவரர் தானே தோன்றி உருவான சுயம்புலிங்க மூர்த்தியாவார். 

இங்கே கருவறை கட்டப்பட்டபோது விநாயகர், சகஜரிநாயகி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியவைகள் நிறுவப் பெற்றிருக்கவேண்டும். திருக்கோயிலின் இரண்டாவது கால கட்ட வளர்ச்சியில் வயிரவன் கோயில், அம்மன் கோயில் சந்நிதி மண்டபம் இரண்டும் கட்டப்பட்டன. இதனை மெய்ப்பிக்கும் கல்வெட்டு அம்மன் சந்நிதியில் காணப்படுகிறது.  

பொதுமக்களால் இக்கோயில் அருள்மிகு பாதாளேச்சுவரர் கோயில் என வழங்கப்பெற்றாலும் அருள்மிகு ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயில் என்றே குறிக்கப்பெற்றுள்ளது. 
கோயிலின் அம்மை பாதம்பிரியாள் என்ற பெயருடன் திகழ்கின்றாள். முற்காலத்தில் சகஜரி நாயகி என்று வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெண்கள் தம் திருமணத்திற்கு தடைகள் ஏற்படும்போது அவை நீங்க வேண்டும் என்று இறைவியிடம் பிரார்த்தனை செய்து கொண்டால், அத்தடைகள் நீங்கி விரைவில் திருமணப் பேறு அடைகிறார்கள். அப்படி திருமணம் நடந்தவர்கள் தம் நேர்த்திக்கடனாக வளையல்களைக் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். 

பைரவர் சிறப்பு:  தன் வடிவங்களில் ஒன்றான பைரவ மூர்த்தியை கோயில்களில் பாதுகாவலுக்காக வைத்துள்ளார் சிவன். இவருக்கு காவல் பிராணியான நாய் வாகனமாக இருக்கும். ஒரு காலத்தில் கோயில் பூட்டிய பிறகு, சாவியை இவரது சந்நிதி முன் வைத்து சென்றுவிடுவர். மறுநாள் காலையில் இவருக்கு பூஜை செய்து சாவியை எடுத்து கருவறை நடையைத் திறப்பர். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவர் பைரவர். அந்த சக்தி குறையாமல் இங்குள்ள பைரவர் அருள்பாலிக்கிறார். 

இக்கோயிலில் குழந்தைகளுக்காக பூஜை செய்வது மிக, மிக சிறப்பு. அவர்களின் ஆரோக்கியம், கல்வி நலனுக்காக தனியாக பூஜை செய்ய வேண்டும். பைரவர் மிகவும் உக்கிரம் வாய்ந்தவர் என்பதால், கற்பூர ஆரத்தியைக் யாருக்கும் காட்டுவதில்லை.  ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சம்பா சஷ்டிவிழா என்ற பெயரில் சிறப்பாக நடைபெறுகிறது. பைரவர் சந்நிதியில் பூசணிக்காயை பாதியாக வெட்டி, அதனுள் நல்லெண்ணையை ஊற்றி விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தால் குடும்பத்தில் ஏற்படும் பில்லி சூனியங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்கின்றனர். 

அதேபோல் கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால் திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு வந்து சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகச்சிறப்பாகும். 

வழித்தடம்:  புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயத்திலிருந்து நகரப்பேருந்து குறிப்பிட்ட நேரங்களில் இயங்கி வருகிறது. ஆட்டோ வசதிகளும் உண்டு.  
தொடர்புக்கு- 94427 62219/  97512 46246. 
 - பொ.ஜெயச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com