பிணிகள் போக்கும் பெருமான்!

தொண்டை வளநாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம்,  தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் முடிச்சூர், மணிமங்கலம் அடுத்து எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த கிராமமான சேத்துப்பட்டு
பிணிகள் போக்கும் பெருமான்!

தொண்டை வளநாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம்,  தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் முடிச்சூர், மணிமங்கலம் அடுத்து எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த கிராமமான சேத்துப்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பிரகந்நாயகி உடனுறை ஸ்ரீ சித்தானந்தேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. (தேவப்பிரசனத் தகவல்கள் மூலம் இறைவன், இறைவி பெயர்கள் அறியப்பட்டன)

வரலாற்றுச் சிறப்புகள்: பதினான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில் சம்புவராயர்கள் என்ற பல்லவ குறுநில மன்னர்கள் சோழப் பேரரசில் படைத்தலைவர்களாகப் பதவி வகித்தவர்கள்.  வீரமும் தெய்வ பக்தியும் கொண்டவர்கள். பலத் திருக்கோயில்களை நிர்மாணம் செய்து பக்தி நெறி பரவச் செய்தார்கள்.  

இவ்வரசர்களில் முக்கியமானவராகக் கருதப்பட்ட  "வென்று மண் கொண்டான் மல்லிநாத ராஜ நாராயணன் சம்பன்' என்பவர் (1291 - 1353) பல சைவ, வைணவ திருக்கோயில்களை உருவாக்கி சிறப்பான வழிபாடுகள் நடத்த வழிவகுத்தார். அப்படி உருவாக்கப்பட்ட திருக்கோயில்களில் சேத்துப்பட்டு ஸ்ரீ பிரகந்நாயகி உடனுறை ஸ்ரீ சித்தானந்தேஸ்வரர் திருக்கோயில் ஒன்றாகும்.  

பின்பு ஏற்பட்ட அந்நியர் படையெடுப்புகளில் பல திருக்கோயில்கள் நிர்மூலமாக்கப்பட்டன.  திருப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்டன. அதன்பின் விஐய நகரப் பேரரசர்கள் சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டு ஆட்சிபுரிந்த வீர கம்பண்ண உடையார் தமிழகத்தில் மீண்டும் திருக்கோயில்களை புதுப்பித்து வழிபாடுகள் நடத்திட வழிவகுத்தார்.  அவற்றில் சேத்துப்பட்டு ஸ்ரீ சித்தானந்தேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும்.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட பஞ்ச மூர்த்திகளோடும், பஞ்ச கோஷ்டங்களோடும் சிறப்புற வழிபாடுகள் நடத்தப்பட்ட கோயிலாகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாச தத்துவத் தலமாக விளங்கும் சிதம்பரம் ஸ்ரீ ஆடல் வல்லான் நடராஜப் பெருமானின் அம்சமாக விளங்குபவர் ஸ்ரீ சித்தானந்தேஸ்வரர்.  இவருக்கு சபாப்தி, சபேசன், அம்பலக் கூத்தன் போன்ற திருநாமங்களும் உண்டு என அறியப்படுகின்றது. 

அம்பிகை ஸ்ரீ பிரகந்நாயகி தனிச்சந்நிதி கொண்டு அங்குச பாசம், அபய ஹஸ்தம் தாங்கி அருள்கூட்டுகிறார்.  தற்போது,  விநாயகர், முருகப் பெருமான்,  சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.  நந்தியெம்பெருமான், கோஷ்ட மூர்த்தங்களும் செய்யப்படுகின்றன.
மஹா விஷ்ணு சந்நிதி : ஒரு காலத்தில் இத்திருக் கோயிலில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தேவராஜப் பெருமாள் சந்நிதியும் அமைந்து வழிபாடு நடத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தீர்த்தம்: கிழக்கில் சிவ கங்கா தீர்த்தமும் (குளம்) நிருதியில் நந்தி தீர்த்தமும் (குளம்) அமையப் பெற்றுள்ளது.  இவ்விரு தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபடுவோர் பிறவிப் பிணி நீங்கப் பெறுவதோடு தீராப்பிணிகளில் அவதிப்படுவோர் பிணி நீங்கி குணமடைவர்.  கங்கையில் நீராடி காசி ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதப் பெருமானை தரிசித்தப் பலனைப் பெறுவர்.

தலவிருட்சம்: இத்திருக்கோயிலின் தலவிருட்சம் வடவிருட்சம் எனும் ஆலமரமாகும்.  இவ்விருட்சம் குளக்கரையின்மேல் அமைந்துள்ளது.  இதன்கீழ் அமர்ந்து பல சித்த புருஷர்களும் மஹான்களும் தவமியற்றியுள்ளனர். சித்தர்கள் மற்றும் மஹான்களின் சாநித்யம் இன்றளவும் உணர முடியும்.

பரிகாரங்கள்: நுரையீரலில் நீர் கோர்த்துக்கொண்டு அவதியுறும் நோயாளிகள், ராகு கேது தோஷ பாதிப்புள்ளவர்கள், வாய்வு கோளாறினால் அவதிப்படுபவர்கள் இத்தல ஈசனை வணங்கி தீபமேற்றி அர்ச்சனை செய்துகொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்துகொள்வதன் மூலம் நோய் குணமாகும்.

பெண்களின் கர்ப்பப்பையில் ஏற்படும் அடைப்பு மற்றும் நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் அம்பிகை ஸ்ரீ பிரகந்நாயகிக்கு  அனைத்து விதமான அபிஷேகங்கள் செய்வித்து, புதிய புடவை சார்த்தி நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துகொள்வதன் மூலம் பரிபூரண குணம் ஏற்படும்.

திருப்பணி: தற்போது இத்திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது.  திருப்பணி வேலைகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவதற்கு பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குபெற்று நலம் பெறலாம். 
தொடர்புக்கு : 97101 90577/98842 08855.
 - க. கிருஷ்ணகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com