பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

செருப்புக்குள்ளே கல்லும், காதுக்குள்ளே ஈயும், கண்ணுக்குள்ளே தூசியும், காலில் முள்ளும், வீட்டில் கலகமும் எத்தனை அளவில் சிறியதாயினும் அதிகத் துன்பத்தைத் தருவனவாகும்.         
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

• செருப்புக்குள்ளே கல்லும், காதுக்குள்ளே ஈயும், கண்ணுக்குள்ளே தூசியும், காலில் முள்ளும், வீட்டில் கலகமும் எத்தனை அளவில் சிறியதாயினும் அதிகத் துன்பத்தைத் தருவனவாகும்.            
- கவி வேமன்னா

• தென்னைமரத்தை, அதன் அடியில் வெறும் நீர் ஊற்றி வளர்த்தால், அது வளர்ந்த பின்பு இனிய இளநீரையும், தேங்காய்களையும் நமக்கு முடியாலே கைம்மாறாகத் தரத் தவறுவதில்லை. அதுபோலவே நற்குணமுடைய ஒருவருக்கு நாம் சிறிய உதவி செய்தாலும், அவர் மறவாமல் நமக்குப் பெரிய அளவில் உரியவாறு உதவி செய்யத் தவறமாட்டார். நாம் எந்தவிதக் கைமாறும் கருதாமல் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அந்த உதவி வீண் போகாது. அதன் பலன் பெரிய அளவில் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.
- ஒளவையார் (மூதுரை  1)

• மருத்துவனிடம் சென்று மருந்து அருந்தாவிட்டால் நோய் நீங்காது. விளக்கு இல்லாவிட்டால் இருள் அகலாது. நல்லுபதேசமின்றி அக்ஞானம் அகன்று ஞானம் பெறுவது மிகவும் கடினம்.             
- யோகி வேமனா

• எல்லாவித பக்தியிலும் சிறந்த பக்தி இறைவனிடம் ஆத்ம நிவேதனம் அல்லது பூரண சரணாகதி அடைவதேயாகும்.    
- சமர்த்த ராமதாசர்

• உங்கள் வருகையால் எவர் முகத்தில் மகிழ்ச்சியும், விழிகளில் அன்பும் இல்லையோ, அவர்கள் இல்லத்தில் மேகம் தங்கி மழை பொழிந்தாலும், அங்கே செல்ல வேண்டாம். சென்றால், உங்களுக்கு இகழ்ச்சிதான் ஏற்படும்.
 - துளசிதாசர்

• உள்ளே புகுந்து நெய் குடிக்க முடியாமல் இருந்தாலும் அந்த நெய் இருக்கும் பாத்திரத்தை எறும்புகள் சுற்றிக்கொண்டு நிற்கும். அது போல, மறந்தாகிலும் அரைக்காசு கொடுக்காதவராக இருந்தாலும் செல்வந்தர்களை நூறு பேர் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.
-  நாலடியார்

• வேதத்தினால் விளக்கப்பட்டிருப்பதும், இம்மையிலும் மறுமையிலும் மேன்மை எய்துவதையே குறிக்கோளாய்க் கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனும் விரும்புவதும் எதுவோ அதுவே தர்மம்.                  
-  மீமாம்ஸா தரிசனம்

• உலகம் என்ற விஷமரம்தான் எல்லா ஆபத்துக்களையும் விளைவிக்கிறது. ஆனால் அது அறிவிலிகளை மட்டும் வதைப்பதாகையால் அறிவுள்ளவர்கள் முயன்று தம் அறியாமையை அகற்றிக்கொண்டு விட வேண்டும். 
- யோக வாசிட்டம்

• மனம் பிறழாமல் இறைநெறியில் ஆழ்ந்துவிடுபவனுக்கு, பதியுண்டு, நிதியுண்டு. புத்திரர்கள், மித்திரர்கள் பக்கமுண்டு, பவிசுண்டு, தவிசுண்டு, யமபடர் அணுகாத கதி உண்டு, ஞானமாகிய கதிஉண்டு, காய சித்திகள் உண்டு.
 - தாயுமானவர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com