நாளை எனாத நரசிம்மன்

பல்லவர்களில் நரசிம்மன் என்ற பெயருடைய மன்னர்கள் பலர் உண்டு. அவர்கள் பெருமாள் பக்தர்கள். நரசிம்மரையே தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர்.
நாளை எனாத நரசிம்மன்

பல்லவர்களில் நரசிம்மன் என்ற பெயருடைய மன்னர்கள் பலர் உண்டு. அவர்கள் பெருமாள் பக்தர்கள். நரசிம்மரையே தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். தங்களின் ஆளும் எல்லையை விரிவுபடுத்திச் செல்லும் இடங்களில் எல்லாம் நரசிம்மர் உருவையோ கோயிலையோ நிறுவி வந்துள்ளனர்.

அதுபோன்று தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், நரசிங்கன்பேட்டையில் காவிரிக்கு தென்கரையில் அனுக்கிரக மூர்த்தியாக அமைந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீ யோக நரசிம்மர்! ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்படாத திவ்ய தேசங்கள் பலவற்றுள் இதுவும் ஒன்றாகும்.

யோக நரசிம்மர்: தெளிந்தபின் தீமையை அழித்து நன்மை செய்வது என்றாலும் இரண்யகசிபுவைக் கொன்ற தோஷம் தன்னை வந்து சேர்ந்து இருப்பதை உணர்ந்தார். தன்னை பீடித்துள்ள ஹத்திதோஷம் நீங்க சிவனை நோக்கி கடுந்தவமிருந்தார். வெகு உக்கிரகமாக நரசிம்மர் தவம் இருந்ததைக் கண்ட சிவபெருமான், உலக இயக்கம் சரிவர நடைபெற நரசிம்மரின் தோஷம் நீங்கிட வேண்டும் என்பதை உணர்ந்தார். அவசரமும் வேகமுமாகத் தோன்றியதால் லிங்கவடிவில் சுயம்புமூர்த்தியாய் எழுந்தருளி காட்சியளித்தார். லிங்கவடிவில் தோன்றிய சிவபெருமானுக்கு மாலையிட்டு பூஜை செய்து வழிபட்டு தோஷம் நீங்கினார் நரசிம்மர். நரசிம்மர் தவம் செய்த இடமே நரசிங்கன்பேட்டை ஆனது. அவர் பூஜை செய்த லிங்கம் "சுயம்பு நாதஸ்வாமி' என்ற திருநாமத்தோடு இக்கோயிலுக்கு தென் திசையில் 1/4 கி.மீ. தொலைவில் தனிக்கோயிலில் அமைந்து அருள்புரிகிறார். சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழைமை உடையது இத்திருக்கோயில்!

கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கி இருந்து அருளும் விமானத்துடன் கூடிய இந்த திருத்தலம், சக்தி மிக்க நரசிம்மர் திருத்தலங்களில் தனிச்சிறப்பு பெற்றதும் ஆகும். யோக நிலை நரசிம்மர் மற்ற நரசிம்ம மூர்த்தங்களை விட சக்தி வாய்ந்தவர். தன் பக்தனுக்கான மறைமுகமான எதிர்ப்புகளான ஏவல், சூன்யம் முதலியவற்றை நொடியில் அழித்து விடுவார் யோகநரசிம்மர்.

கருவறையில் நரசிம்மப் பெருமாள் சதுர்புஜத்துடன் சங்கு, சக்கரம் இரு கைகளில் ஏந்தி, இரு கால்களையும் அரைசம்மணமிட்டு இரண்டு கைகளை யோக முத்திரையில் இருத்தி, அமர்ந்த திருக்கோலத்தில் சேவை தருகிறார். எதிரிலேயே தோஷம் அகற்றத் துணை நிற்கும் கருடாழ்வார், தனிசந்நிதியில் காரிய சித்தி அனுமன் அமைந்து அருள்கின்றனர். உற்சவர் பிரகலாதவரதன் ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்று அருளுகிறார். பக்தனின் துன்பம் நீக்க, மூலவர் நரசிம்மர் எப்படி முன்னிற்பாரோ அதுபோன்றே உற்சவரும் வரம் அருளுவதில் முதலில் நிற்பார்.

பிரார்த்தனைகள்: யோக நரசிம்மருக்கு ஏற்றப்படும் நெய் தீபம், மோசமான மன நலம் மற்றும் உடல்நலக் கோளாறு உள்ளவரையும் உடனடியாக தேற்றும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவருக்கு வெல்லப் பானகம் விசேஷ நைவேத்யமாகும் !

பிரதோஷ தினங்கள், அமாவாசை, பெளர்ணமி மற்றும் வார சனிக்கிழமைகள், சுவாதி நட்சத்திரம் அன்று நடைபெறும் திருமஞ்சனம் ஆகியவை முக்கியமானவை.

காரியசித்தி ஆஞ்சநேயரை ஒருமுறை வேண்டிக்கொண்டு நரசிம்மரிடம் தங்கள் பிரார்த்தனை நிறைவேற விண்ணப்பம் செய்து பிரகாரத்தை வலம் வந்து பய பக்தியுடன் மட்டை தேங்காய்களை கட்டுகின்றார்கள் பக்தர்கள். காரியம் வெற்றி அடைந்ததும் தேங்காயை அவிழ்த்து பிரகாரத்தை மூன்று முறை சுற்றியும் ஆஞ்சநேயரை பதினோறு முறை சுற்றி பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்! இதுவரை, சுமார் 4 லட்சம் மட்டைத் தேங்காய்கள் பிரார்த்தனை முடிந்து கட்டி அவிழ்த்து சூரைக் காயாக உடைக்கப் பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் மூலம் நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்குச் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகள் மட்டுமில்லாமல் மாதம் முழுவதும் சிறப்பானவையாகவே கருதப்படுகிறது. வருடத்தில் சித்திரை மாதத்தில் நரசிம்ம ஜெயந்தியும், மார்கழி மாதத்தில் அனுமந் ஜெயந்தியும் வெகுசிறப்பாக நடைபெறுகிறது.

அமைவிடம்: மாயவரத்திலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நரசிங்கன்பேட்டைக்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.
- ஆர். பத்ராசலம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com