பக்தியும் முக்தியும் ஸ்ரீமந் நாராயணனே..!

வைணவத் திருத்தலங்களில் 108-இல் முதன்மையானது என்றும், பெரிய கோயில், பூலோக வைகுந்தம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில்.
பக்தியும் முக்தியும் ஸ்ரீமந் நாராயணனே..!

வைணவத் திருத்தலங்களில் 108-இல் முதன்மையானது என்றும், பெரிய கோயில், பூலோக வைகுந்தம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில்.

ஆழ்வார்களும், நாதமுனி, ஆளவந்தார், ராமானுஜர், மணவாளமுனிகள் போன்ற ஆச்சாரியர்களும், ஏனைய சான்றோர்களும் ஸ்ரீரங்கத்தை புனிதமாகக் கருதியதால் வைணவத் திருத்தலங்களில் திருவரங்கத் திருப்பதி என்ற சிறப்பிடத்தையும் பெற்று இக்கோயில் விளங்குகிறது.

இத்திருக்கோயிலில் ஆண்டில் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், புரட்டாசி மாதத்தில் தாயாருக்கு நடைபெறும் நவராத்திரி உற்ஸவம் மிகுந்த சிறப்புடையது. மகாளய அமாவாசை தினத்தை துவக்கமாக கொண்டு நவராத்திரி திருநாள் இக்கோயிலில் நடத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடிச் சேவை, இத்திருவிழாவின் ஏழாம் நாளில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நவராத்திரி விழாவையொட்டி இக்கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் சுமார் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் நவராத்திரி கொலு காட்சி அமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

இவ்வாண்டு, "பக்தியும்- முக்தியும் ஸ்ரீமன் நாராயணனே!' என்ற மையக் கருத்தைக் கொண்டு கொலு காட்சி அமைக்கப்பட்டது. வைகுந்த ஏகாதசியில் அரங்கனைத் தரிசிக்கும் பக்தர்கள் பரமபதத்தை அடைவார்கள் என்றும்; அரங்கன் மீது பக்தி கொண்டு இத்திருக்கோயிலில் ஆண்டாள், திருப்பாணாழ்வார் உள்ளிட்டோர் முக்தியும் அடைந்துள்ளார்கள் என்ற மையக் கருத்தைக் கொண்டு கொலுக் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.

வைணவத் தத்துவங்களை விளக்கும் வகையில் விஷ்ணுவின் அவதாரங்கள் 11 அறைகளில் வைக்கப்பட்டிருந்தன. அதற்கு நேர் எதிரில் லட்சுமியின் அம்சங்கள், தாயார், ஆண்டாள் காட்சிகளுடன், ராமானுஜரின் முத்திருமேனிகள், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை அம்மன் காட்சிகளும் சிறப்பாய் அமைந்திருந்தன. கொலு காட்சியின் மையப்பகுதியில் சந்திரபுஷ்கரிணி, மனிதப் பிறப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பரமபத சோபனப் படக் காட்சியும் வைக்கப்பட்டது சிறப்பு! மேலும் நடுப்பகுதியில் விஷ்ணுவை துதிக்கும் நவவிதபக்தி முறைகளை விளக்கும் கொலுக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

அரங்கின் ஒரு பகுதியில் பக்தி முறையை விளக்கும் வைணவப்பக்தி ( மச்சவாதாரப்பக்தி) என்றபெயரில் விஸ்வரூபதரிசனக் காட்சியை விளக்கும் பொம்மைகள், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என, ஸ்ரீரங்கம் கோயில் திவ்ய தேசக் காட்சி என்ற தலைப்புகளில் காட்சிகள் அரங்கில் நிறைந்திருந்தன. இதே அரங்கில் விஷ்வரூப பக்தி, மாதா, பிதா, குரு, தெய்வப் பக்தி, பதி பக்தி, பிராத பக்தி, பிரேம பக்தி, காருண்ய பக்தி, ஸ்ரீரங்கப் பக்தி முறையை விளக்கும் வகையில் உரிய காட்சி விளக்கங்களுடன் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து கொலு கண்காட்சியின் அரங்கின் நடுப்பகுதியில் விஷ்ணுவைத் துதிக்கும் நவபக்தி முறைகள் காட்சிகளாக இருந்தன. ஸ்வரணம் (காதால் கேட்டல்), கீர்த்தனம் (பாடுதல்), ஸ்மரணம் (ஜபம் செய்தல்), பாதசேவனம் (நமஸ்காரம் செய்தல்), அர்ச்சனம் (அர்ச்சனை செய்தல்), வந்தனம் ( வணக்கம் செய்தல்), தாஸ்யம் (அடியாராக இருத்தல்), சாக்கியம் ( நண்பனாக இருத்தல்) ஆத்மநிவேதனம் (தியானித்தல்) ஆகியவற்றை விளக்கும் வகையிலும் கொலுக் காட்சிகள் அமைந்திருந்தன.

வைணவப் பக்தி என்ற பெயரில் வைக்கப்பட்டிருக்கும் அரங்குகளுக்கு நேர் எதிரில் லட்சுமியின் அம்சங்கள் ஊஞ்சலுடன் அமைந்திருந்தன.

அரங்கநாதசுவாமிக்கு நேர் எதிரில் தாயாரும், ராமானுஜருக்கு எதிரில் ஆண்டாளும், விஷ்ணுவுக்கு எதிரில் லட்சுமியும் காட்சியாக வைக்கப்பட்டிருந்தனர்.

லட்சுமியின் அம்சங்களாக ஆதிலட்சுமி, தானியலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, வித்யாலட்சுமி, வீரலட்சுமி, தனலட்சுமி ஆகிய லட்சுமியின் அம்சங்கள் காட்சிப் படைப்புகளாகத் திகழ்ந்தன. ஒவ்வொரு லட்சுமி அம்சமும் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைத் தவிர, ராமானுஜரின் முத்திருமேனிகளும் கொலுக் கண்காட்சியில் இடம் பெற்றன.

கண்காட்சி அரங்கின் மையப்பகுதியில் தாமரை மலரில் சந்திரபுஷ்கரிணியும், மனிதப் பிறப்பின் முக்கியத்துவை உணர்த்தும் வகையிலும் விளையாட்டிலும் பக்தியை உணர்த்தும் வகையில் பரமபத விளையாட்டை "பரமபதசோபன படம்' என்ற பெயரில் காட்சிப் படைப்பு வைக்கப்பட்டது.

ஆயிரங்கால் மண்டபத்தில் கொலுக் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கும் பகுதியில் வண்ண விளக்குகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆயிரங்கால் மண்டபத்தின் அழகை மேலும் மெருகேற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கொலு கண்காட்சியை திருக்கோயிலுக்காக அமைத்துத் தந்திருப்பவர்கள் மயிலாப்பூர் ஸ்ரீசுமுகி ராஜசேகர் அறக்கட்டளையைச் சேர்ந்த, மயிலை மூவர் எனப்படும் எஸ். சுரேந்திரநாத், எஸ். அமர்நாத், எஸ். அபர்ணா மற்றும் எம். சுகதன் ஆவார்கள்.

ஆண்டுக்கு ஆண்டு வித்தியாசமான முறையில், கருத்துகளை விளக்கும் வகையிலான கொலுக் காட்சிகளை படைத்து வரும் இவர்கள், பரம்பரை பரம்பரையாக கொலு கண்காட்சியை கடந்த 65 ஆண்டுகளாக அமைத்து வருகிறார்கள்.

நமது கலாசாரம், பண்பாடு, வரலாறு, ஆன்மிகம் ஆகியவற்றின் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் இந்த கொலுக் கண்காட்சி அரங்குகளை அமைத்து இறைப்பணி செய்து வருகிறார்கள். பெரிய பெருமாள், பெரியபிராட்டி, பெரியகோயில், பெரியதளுகை என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபம், இந்த கொலுக் கண்காட்சியால் நிறைந்து பக்தர்களைக் கவர்ந்தது.
- கு. வைத்திலிங்கம்
படங்கள்: எஸ். அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com